Pages

Tuesday 12 May 2020

சங்க இலக்கியத் தூறல்-22 : ஊர்வாய் அடங்கிடுமோ!


ஊர்வாய் அடங்கிடுமோ!

--- அன்பு ஜெயா

அதோ அந்த அழகைப் பாருங்கள்! நெய்தல் நிலப்பரப்பிலே புலிநகக் கொன்றை மரங்களின்  பொன்னிறமான மஞ்சள் நிறப்பூக்களும், புன்னை மரங்களின் வெண்ணிறப் பூக்களும் தரையில் உதிர்ந்து கிடக்கின்றன. அந்தக் காட்சியானது ஓர் ஓவியன் தன் கற்பனையெல்லாம் ஒரு சேரக் கூட்டி வரைந்த அழகான ஓவியம் பல படிவங்களாக அந்த நெய்தல் நிலமெங்கும் சிதறிக் கிடப்பதைப் போலத் தோன்றுகிறது. அப்படிப்பட்ட அழகிய சோலைகளை உடையப் பெருந்துறைகளைக் கொண்ட ஊர் அது.



அந்த ஊரின் உப்பங்கழிகளில் உள்ள நீரில் பச்சை இலைகளுடன் பருத்த தண்டுகளை உடைய  நெய்தல் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. விழாக்களுக்கு ஒப்பனை செய்கின்ற மகளிர் கூட்டம் அழகு செய்வதற்காக அந்தப் பூக்களைப் பறித்துக்கொண்டுள்ளனர்.

அப்படிப்பட்ட ஊரில் உள்ள அவளைத் திருமணம் செய்யாது அவளுடைய காதலன் காலம் கடத்துகின்றான்.  ஊர்ப்பெண்களோ அவளைக் கேலி செய்து பேசுகின்றனர். அதனால் அந்தக் காதலி மனவருத்தத்துடன் இருக்கின்றாள். அவளுடைய வருத்தத்தை உணர்ந்த அவளுடைய தோழி இந்த ஊர்ப்பழியை நீக்கித் தன் தோழியின் துயரைத் துடைக்க வேண்டுமென்று முடிவு செய்கிறாள்.  மேலும், அவர்களுடைய காதலுக்குத் துணை நின்றவள் என்பதால், தனக்கு அந்தப் பொறுப்பு உள்ளது என்பதையும் உணர்கிறாள். 

அதனால் தன் தலைவியின் காதலனைச் சந்தித்து விரைவில் காதலியைத் திருமணம் செய்துகொள்ள ஏற்பாடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறாள். தோழியின் வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட காதலனும் காதலியின் பெற்றோரைச் சந்தித்து திருமணத்திற்குச் சம்மதம் வாங்கிவிடுகிறான். அதைப்பற்றித் தோழியானவள் அந்தக் காதலியிடம் உரைக்கின்றாள்.

“அடியே என் தோழி! உன்னைத் தூற்றிய இந்த ஊர்ப் பெண்களெல்லாம் உன் காதலனுடன் உன் திருமணம் கூடிவிட்டதால், அன்று பாண்டியரின் மிகப் பழமையான திருவணைக்கரையின் அருகிலே அமர்ந்து இலங்கையின் மீது படையெடுப்பதுபற்றி இராமன் தன் வீரர்களுடன் ஆலோசனை செய்யும்போது அந்த ஆலமரத்தில் சத்தம் போட்டுக்கொண்டிருந்த பறவைகளை யெல்லாம் இராமன் கையசைத்து ஓசை செய்யாது அடக்க அந்த ஆலமரமே ஓசையின்றி அமைதியானது போல, வாயடைத்துப்போய் நிற்கின்றனர். அறியாயோ இதை நீ?

“தங்கள் உயிரைப் பணயம் வைத்துப் படகிலே கடலுக்குச் சென்று கணக்கற்ற அயிரை மீன்களைப் பிடித்துவந்து தங்கள் இனத்தவருடன் பகிர்ந்துகொண்ட பரதவர்கள், தங்கள் முயற்சியால் மீன்களை பிடித்ததாகச் சொல்லிக்கொள்ளாமல், நெருக்கிப் பின்னப்பட்ட வலைகளின் இடைவெளி சிறியதாக இருந்ததனால்தான் இவ்வளவு மீன்கள் கிடைத்தன என்று மீன்பிடி வலையை வாயாறப் பாராட்டுவார்கள். அதைப்போல இருக்கிறது அந்தப் பரதவர்த் தலைவன் அவருடைய முயற்சியால் திருமணம் கூடியது என்று கூறாமல் அதற்குத் துணையாக நின்ற என்னைப் பாராட்டினார். இனி உன்னை இங்கிருந்து தன் ஊருக்கு அழைத்துச் சென்றபின் தன் ஊர் மக்களுக்கு விருந்து வைத்துக் கொண்டாடப் போகிறார்,” என்று தோழி கூறுகின்றாள்.

அந்த உப்பங்கழியிலே மலர்ந்த பூக்கள் வேறொரு இடத்திற்கு அழகு செய்யப் போவதுபோல பெற்றோரால் சீராட்டி வளர்க்கப்பட்டத் தலைவி தன் துணைவன் வீட்டிற்குப் பயன்படப்போகிறாள் என்பதைக் கவிஞர் குறிப்பால் உணர்த்துகிறார்.

இந்தக் காட்சியினைக் கண்ட சங்கப் புலவரான மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் பின் வரும் பாடலில் அந்தக் காட்சியைப் படம் பிடித்துக் காட்டுகின்றார்.


கொடுந்திமில் பரதவர் வேட்டம் வாய்த்தென,
இரும்புலாக் கமழும் சிறுகுடிப் பாக்கத்துக்
குறுங்கண் அவ்வலைப் பயம் பாராட்டி,
கொழுங்கண் அயிலை பகுக்கும் துறைவன்
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே                    5
அலர்வாய்ப் பெண்டிர் அம்பல் தூற்ற,
பலரும்ஆங்கு அறிந்தனர் மன்னே, இனியே
வதுவை கூடிய பின்றை, புதுவது
பொன்வீ ஞாழலொடு புன்னை வரிக்கும்
கானல்அம் பெருந்துறைக் கவினி மாநீர்ப்         10
பாசடைக் கலித்த கணைக்கால் நெய்தல்
விழவுஅணி மகளிர் தழைஅணிக்கு ஊட்டும்
வென்வேல் கவுரியர் தொல்முது கோடி
முழங்குஇரும் பௌவம் இரங்கும் முன்துறை,
வெல்போர் இராமன் அருமறைக்கு அவித்த              15
பல்வீழ் ஆலம் போல,
ஒலிஅவிந் தன்று, இவ் அழுங்கல் ஊரே.

-      மதுரைத் தமிழ்க்கூத்தனார் கடுவன் மள்ளனார் (அகநானூறு – 70)

திணை: நெய்தல்

துறை: தலைமகன் வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது.

அருஞ்சொற்பொருள்:
கொடுந்திமிர்= வளைந்த படகு. பயம்=பயன். அயிலை=அயிரைமீன். ஞாழல்= புலிநகக் கொன்றை. வரிக்கும்=சித்திரம் எழுதினாற் போல உதிர்ந்து கிடக்கும் அழகு. கவுரியர்=பாண்டியர். கோடி=திருவணைக்கரை. பல்வீழ்=பலவிழுதுகள். அழுங்கல்=ஆரவாரம்.






Tuesday 21 April 2020

சங்க இலக்கியத் தூறல் – 21 : முத்துக்கள் கடலுக்குப் பயன் தருமோ!

முத்துக்கள் கடலுக்குப் பயன் தருமோ!

--- அன்பு ஜெயா

அந்தக் கிராமத்திலே ஒருத்தி ஒருவனைக் காதலித்தாள். ஆனால் அவர்கள் குடும்பத்தினரோ அவர்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ளத் தடையாக இருந்தனர். பெற்றோர்களின் சம்மதத்தைப் பெறுவதற்குக் காதலர்கள் இருவரும் பல வழிகளிலும் முயன்று தோல்வி அடைந்தனர். அதனால் அவர்கள் அந்த ஊரைவிட்டு வெளியேறி வேறு ஊருக்குப் போய் தங்கள் வாழ்க்கையைத் துவங்கிட முடிவு செய்து ஒரு நாள் யாரும் அறியாமல் அந்த ஊரைவிட்டு வெளியேறினார்கள்.






தன் வளர்ப்பு மகளைக் காணாமல் அந்தப் பெண்ணின் செவிலித்தாய் மிகவும் மனவருத்தமடைந்து, அவளை ஊர் முழுதும் தேடினாள். ஆனால் பயனில்லை. அதனால் தன் செல்ல மகளைத் தேடிக்கொண்டு அடுத்த ஊருக்குச் செல்லும் பாதை வழியே நடக்க ஆரம்பித்தாள். அந்தப் பாதையோ கல்லும் முள்ளும் நிறைந்த கரடுமுரடானப் பாதை. அப்போது வெயிலோ சுட்டெரித்துக் கொண்டிருந்தது. மகள் மீது கொண்டப் பாசத்தினால், அதைப் பொருட்படுத்தாமல் மகளைத் தேடிக்கொண்டு சென்றாள்.

அப்படி அவள் சென்று கொண்டிருக்கும்போது எதிர்ப்புறமாக கையில் கமண்டலமும், தோளில் முக்கோலும் தொங்க வெயிலுக்குக் குடையை ஏந்தியவாறு சில அந்தணர்கள் வந்து கொண்டிருந்தார்கள்.  தன் மகள் சென்றிருக்கக் கூடிய திசையிலிருந்து தானே இவர்கள் வருகிறார்கள், இவர்களைக் கேட்டால் தன் மகளைப்பற்றி ஏதாவது அறிந்து கொள்ள வாய்ப்பு உள்ளதென்று எண்ணி அவர்களிடம் பேச்சுக் கொடுத்தாள்.

அவர்களிடம் அந்தத் தாய்,

“மனசாட்சிக்கு விரோதமாக எதுவும் செய்யக் கூடாது என்ற கோட்பாட்டுடன் ஒழுக்கத்துடன் வாழ்கின்ற அந்தணரே! நீங்கள் வந்த வழியில் என் மகளும் இன்னொருத்தியின் மகனும் ஒன்றாகச் செல்வதைக் பார்த்தீர்களா?, என்று மனதில் நிறைந்துள்ளக் கவலையுடன் விசாரித்தாள்.

அதற்கு அந்த அந்தணர்கள்,

“பார்க்காமல் என்ன அம்மா.  ஆண்மையின் அனைத்து லட்சனங்களும் பொருந்திய ஓர் ஆண்மகனுடன் இந்தக் கடுமையான பாதை வழியே துணிந்து மன அமைதியோடு ஒரு பெண் சென்று கொண்டிருப்பதைப் பார்த்தோம் அம்மா.  அவள் பத்திரமான துணையுடன்தான் சென்று கொண்டிருக்கிறாள். அந்தப் பெண்ணின் தாயகத்தான் நீங்கள் இருக்க வேண்டும்.  நல்ல துணைவனுடன் செல்லும் அவள் நன்றாக வாழ்வாள். நீங்கள் இப்போது மனக்கலக்கமில்லாமல் உங்கள் வீட்டுக்குச் செல்லுங்கள் அம்மா”.

உங்களுக்கு ஒன்று சொல்கிறோம் அம்மாஎன்று அவர்கள் மேலும் தொடர்ந்தார்கள்.

“மலையிலே பிறந்த சந்தனமரத்தின் வாசமுள்ள சந்தனம் அதனைப் பூசிக் கொள்பவர்களுக்குத்தான் பயன் தருமே அன்றி அந்த சந்தன மரத்திற்கோ அது வளரும் மலைக்கோ பயன் தருவதில்லை. உங்கள் மகளும் சந்தனத்தைப் போன்றவள் தானே அம்மா!

“கடலில் சிப்பியினுள்ளே பிறக்கின்ற முத்து அதை மாலையாக அணிபவர்களுக்கே பயன் தருமே அல்லாது அது பிறந்த சிப்பிக்கோ கடலுக்கோப் பயன் தருவதில்லை. உங்கள் ஆசை மகளும் அந்த முத்தைப் போன்றவள்தானே அம்மா!

“யாழின் ஏழு நரம்புகளிலிருந்து பிறக்கின்ற இசையானது அந்த யாழை வாசிப்பவனுக்கும் அதைக் கேட்பவர்க்கும் தான் பயன் தருமே அல்லாமல் அது பிறந்த யாழுக்குப் பயன் தருவதில்லை. ஆராய்ந்து பார்த்தால் உங்கள் மகளும் அதை ஒத்தவள் தானே அம்மா!

“இதையெல்லாம் எண்ணிப் பாருங்கள். உங்கள் மகள் உங்கள் வீட்டிலேயே இருந்தால் அவளுடைய பெண்மைக்குப் பெருமை இல்லை. அவள் தன் கணவனோடு, இல்லற நெறியோடு வாழ்வதுதான் அவள் பெண்மைக்குப் பெருமை. கற்புடன் வாழ முற்பட்ட அவளைப்பற்றி வருத்தப் படாதீர்கள். அவள் சிறப்புடன் வாழ்வாள். அவள் தேர்ந்தெடுத்த இந்த வாழ்க்கையே அறநெறி தவறாத ஒழுக்கமாகும். அதை உணர்ந்து மன அமைதியுடன் உங்கள் வீட்டிற்குச் செல்லுங்கள்,” என்று அந்த செவிலித் தாய்க்கு அறிவுறுத்தி அவளை மன நிறைவுடன் தன்னுடைய வீட்டிற்குத் திரும்பிச் செல்லுமாறு கூறினர்.

இந்தக் காட்சியினைக் கண்ட சங்கப் புலவரான பாலைபாடிய பெருங்கடுங்கோ இந்தக் காட்சினை மையப்பொருளாக வைத்து பின் வரும் பாடலைப் பாடியுள்ளார்.

         எறித்தரு கதிர்தாங்கி ஏந்திய குடைநீழல்,
உறித்தாழ்ந்த கரகமும், உரைசான்ற முக்கோலும்,
நெறிப்படச் சுவல்அசைஇ, வேறுஓரா நெஞ்சத்துக்
குறிப்புஏவல் செயல்மாலைக், கொளைநடை அந்தணீர்!
வெவ்விடைச் செலல்மாலை ஒழுக்கத்தீர்; இவ்இடை,           5
என்மகள் ஒருத்தியும், பிறள்மகன் ஒருவனும்,
தம்முளே புணர்ந்த தாம்அறி புணர்ச்சியர்,
அன்னார் இருவரைக் காணிரோ பெரும!”
காணேம் அல்லேம்; கண்டனம், கடத்திடை;
ஆண் எழில் அண்ணலோடு அருஞ்சுரம் முன்னிய      10
மாண்இழை மடவரல் தாயிர்நீர் போறீர்;
பலஉறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை,
மலையுளே பிறப்பினும், மலைக்கு அவைதாம் என்செய்யும்?
நினையுங்கால், நும்மகள் நுமக்கும் ஆங்கு அனையளே
சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை,                 15
நீருளே பிறப்பினும், நீர்க்குஅவைதாம் என்செய்யும்?
தேருங்கால், நும்மகள் நுமக்கும்ஆங்கு அனையளே
ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை,
யாழுளே பிறப்பினும், யாழ்க்குஅவைதாம் என்செய்யும்?
சூழுங்கால், நும்மகள் நுமக்கும்ஆங்கு அனையளே  20
என ஆங்கு
இறந்த கற்பினாட்கு எவ்வம் படரன்மின்;
சிறந்தானை வழிபடீஇச் சென்றனள்;
            அறம்தலை பிரியா வாறும்மற்று அதுவே.      

            பாலை பாடிய பெருங்கடுங்கோ (கலித்தொகை : 9)

திணை: பாலை

துறை: உடன்போய தலைவிபின் சென்ற செவிலி இடைச்சுரத்து முக்கோல் பகவரைக் கண்டு, “இவ்வகைப்பட்டாரை ஆண்டுக் காணீரோ” என் வினவியாட்கு, “அவரைக் ண்டு, அஃது அறம் என்றே கருதிப் போந்தோம்; நூரும் அவர் திறத்து எவ்வம்  படவேண்டா” என எடுத்துக்காட்டி, அவர் தெருட்டியது.

அருஞ்சொற்பொருள்:

உடன்போய தலைவி=தலைவனுடன் சென்ற தலைவி. எவ்வம்=துன்பம். தெருட்டுதல்=தெளிவித்தல். எறித்தரு=எறிந்தலைச் செய்கின்ற. கரகம்=கமண்டலம். முக்கோல்= முனிவர் ஏந்தும் முத்தலைக் கோல். சுவல்=தோள். கொளை=கோட்பாடு. நடை=ஒழுக்கம். இடை=வழி. புணர்ச்சி=காதல். புணர்ந்த=சேர்ந்த. படுப்பவர்=உடம்பில் பூசுபவர். தேருங்கால்= ஆராயும் பொழுது. ஏழ்புணர்=நரம்புகள் ஏழினும் சேர்ந்து பிறக்கும், ஏழு சுரங்கள். இறந்த= மிக உயர்ந்த. வழிபடீஇ= வழிபட்டு, பணிவிடை செய்து.