Pages

Friday, 13 June 2014

சங்க இலக்கியத் தூறல் - 3 : களவிலும் நாணி நிற்கின்ற பெண்மை

சங்க இலக்கியத் தூறல் - 3 

(தமிழ் அவுஸ்திரேலியன் - ஜூன் 2014 இதழில் வெளியிடப்பட்டது.)

களவிலும் நாணி நிற்கின்ற பெண்மை
-    அன்பு ஜெயா, சிட்னி


பண்பில் சிறந்த தலைமகன் ஒருவன் அவனைப் போலவே பண்புள்ள  தலைமகள் ஒருத்தியைச் சந்திக்கிறான். முதல் சந்திப்பிலேயே அவளிடம் தன் மனதைப் பறிகொடுத்து விடுகிறான். அதேபோல அவளும் அவனிடம் விருப்பம் கொள்கிறாள். இருவரிடமும் காதல் அங்கே மலர்கின்றது. அடுத்தடுத்த சில சந்திப்புகளில் அவர்களின் காதல் கனியாகி, அவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்து மகிழ்வதில் இன்பம் கண்டனர்.

இப்படியிருக்க, ஒரு நாள் தலைமகன் தலைமகளைத் தனியே சந்திக்கக் கூடிய வாய்ப்பு ஒன்று அமைகின்றது. அவர்கள் இருவர் மனதிலும் காதல் வேட்கைக் கரைபுரண்டு ஓடினாலும், அவர்களுடைய பண்பு அவர்களைக் கட்டுக்குள் வைத்திருக்கின்றது. அப்போது தலைமகன் மெல்ல அவளிடம் ஆசை வார்த்தைகளைக் கூறுகின்றான். தூரத்தில் அவன் வருவதைக் கண்டு முகம் மலர நின்ற தலைமகள், அவன் அருகில் வந்தபின் நாணத்தின் மிகுதியால், அவனை நேருக்கு நேர் பார்க்க முடியாமல், பேசும் சக்தியை இழந்து, தன் இரண்டு கைகளாலும் கண்களை மூடிக்கொண்டு, தலை கவிழ்ந்து, பேசா மடந்தையாய் நிற்கின்றாள். அப்படி நாணி நிற்கின்ற தலைமகளைப் பார்த்து :

என் மனம் கவர்ந்த பெண்ணே! நான் கூறுகின்ற ஆசை வார்த்தைகளை எல்லாம் நீ உற்றுக் கேட்டுக்கொண்டு இருக்கிறாய். ஆனால் அவற்றுக்கு ஒரு வார்த்தையேனும் பதில் கூறாமல், உன் கண்கள் இரண்டையும் கைகளால் பொத்திக்கொண்டு, தலை கவிழ்ந்தவண்ணம் நிற்கின்றாய். காதல் உணர்வு அதிகமாக உள்ள போது அதைத் தாங்கி வாளாவிருப்பது எளிதென்று நினைக்கின்றாயோ?! புலியை அதன் முதுகிலே குத்திக் கிழித்ததால் சிவந்து இருக்கின்ற, யானையின் தந்தத்து நுனியைப்போல, நாணத்தால் சிவந்து காணப்படுகின்ற வேல் போன்ற உன் கூறிய கண்கள் என் மார்பைக் கீறிப் புண்ணாக்கிவிடுமோ என்று பயந்து அவற்றை உன் பூவைப் போன்ற கைகளால் மறைத்து நிற்கின்றாயோ? என்னை வருத்துவன உன் கண்கள் மட்டுமல்ல பெண்ணே; போர்க் களத்திலே வெற்றி நாட்டுகின்ற பாண்டியன் செழியனின் புகழ் பெற்ற மதுரை நகருக்கு ஒப்பான, காமனின் கரும்பு வில்லின் படம் வரையப்பட்டுள்ள, உன் தோள்களும் கூடத்தான் என்பதை நீ அறிந்து கொள்ள வேண்டும்”, என்று தலைமகன் தலைமகளிடம் கூறுகின்றான்.

இந்தக் காட்சியை சங்க காலப் புலவரான மருதன் இளநாகனார் பின்வரும் பாடலில் அழகாகச் சித்தரித்துக் காட்டியுள்ளார்.

சொல்லிற் சொல்லெதிர் கொள்ளாய் யாழநின்
திருமுகம் இறைஞ்சி நாணுதி கதுமெனக்
காமம் கைம்மிகின் தாங்குதல் எளிதோ
கொடுங்கேழ் இரும்புறம் நடுங்கக் குத்திப்
புலிவிளை யாடிய புலவுநாறு வேழத்தின்
தலைமருப் பேய்ப்பக் கடைமணி சிவந்தநின்
கண்ணே கதவ வல்ல நண்ணார்
அரண்டலை மதில ராகவும் முரசுகொண்டு
ஓம்பரண் கடந்த அடுபோர்ச் செழியன்
பெரும்பெயர்க் கூடல் அன்னநின்
கரும்புடைத் தோளும் உடையவால் அணங்கே.
                       (நற்றிணை, 39:1-12.)

மருப்பு = தந்தம்; கரும்புடைத் தோளும் : மகளிர் தோளில் காமனுடைய வில்லான கரும்பின் உருவத்தை வரைந்து அழகுபடுத்துவது பண்டைத் தமிழர் வழக்கம்.

---------------------------

Thursday, 5 June 2014

கம்பனின் உவமைகள் - 11 : அகழியைச் சூழ்ந்த சோலை

கம்பனின் உவமைகளில் சில துளிகள் 11

அகழியைச் சூழ்ந்த சோலை
- அன்பு ஜெயா, சிட்னி

அயோத்தி மாநகரின் அகழியை நமக்கு அறிமுகப் படுத்தும்போது சக்கரவாள மலையைப்பற்றி அறிமுகப்படுத்தினான் கம்ப நாட்டான். அந்தச் சக்கரவாள மலை இந்தப் பூமண்டலத்தைச் சுற்றி உள்ளது என்றும், அதைச் சுற்றிப் பெருங்கடலொன்று இருப்பதைப் பற்றியும் அறிந்தோம். அந்தப் பெருங்கடலை அடுத்துப் பேரிருள் சூழ்ந்துள்ளது என்று புராணங்கள் கூறுகின்றனவாம்.

அயோத்தி மாநகரின் அகழியைச் சுற்றி அடர்ந்த காடு போன்ற சோலை ஒன்று அமைந்திருப்பதாகக் கூறுகின்றான் கம்பன். அந்தச் சோலையைப் பற்றி அவன் என்ற கூறுகின்றான் என்று கேட்போம்.நீண்டு உயர்ந்த மதிலினால் சூழப்பட்ட அயோத்தி நகரம் பூமண்டலத்தை ஒத்து இருக்கின்றதாம். அந்நகரத்தைச் சூழ்ந்திருக்கின்ற மதில் சக்கரவாள மலையைப் போல இருக்கின்றதாம். அதைச் சுற்றி உள்ள அகழி சக்கரவாள மலையைச் சுற்றி இருக்கின்ற பெருங்கடலைப் போல இருக்கின்றதாம். அகழியைச் சூழ்ந்து உள்ள சோலை பெருங்கடலைச் சுற்றியுள்ள பேரிருளை ஒத்து உள்ளதாம்.
இந்தக் காட்சி, தூரத்திலிருந்து பார்ப்பவர்களின் கண்ணுக்குக் கருத்த நிறத்திலுள்ள மதிலைச் சூழ்ந்துள்ள சோலை, அந்தப் பொன் போன்ற மதிலுக்குத் திருஷ்டிப் பரிகாரம் செய்வதற்காகப் போர்த்தப்பட்ட (கரு)நீல ஆடையைப் போலக் காட்சி அளிக்கின்றதாகக் கூறுகின்றான் கம்பன்.

கம்பனின் அந்தப் பாடல்:

அன்ன நீள் அகன்
கிடங்கு சூழ்கிடந்த ஆழியைத்
துன்னி, வேறு சூழ்கிடந்த தூங்கு,
வீங்கு, இருட் பிழம்பு
என்னலாம், இறும்பு சூழ்கிடந்த
சோலை, எண்ணில், அப்
பொன்னின் மா மதிட்கு உடுத்த
நீல ஆடை போலுமே.
           (பாலகாண்டம், நகரப் படலம், பாடல் - 114)

தூரத்திலுருந்து பார்க்கும்போது நமக்கும் அந்தச் சோலை கருத்த நிறத்தில் தான் தெரிந்தது. அருகில் வர வரத்தான் அந்தச் சோலை, பல நிறங்களில் அழகாகத் தோன்றுகின்றது. இதையெல்லாம் தன் மனக்கண்களிலேயே கண்டுவிட்ட கம்பனின் கற்பனை வளத்தைப் போற்றுதற்குச் சொற்கள் கிடைக்கவில்லை.

(உவமைகள் தொடரும்)