Pages

Monday 19 June 2017

சங்க இலக்கியத் தூறல் 13 - மலைச்சாரல் காதலி!




மலைச்சாரல் காதலி!
--- அன்பு ஜெயா, சிட்னி

அதோ அந்த ஆழமான கடல். சங்குகள் வளரக் கூடிய அளவிற்கு  ஆழத்தைக் கொண்ட கடல். அதிலிருந்து எவ்வளவு சங்குகளை வெளியே எடுத்தாலும் குறையாது மேலும் மேலும் சங்குகள் வளர்ந்துகொண்டே இருக்கும்.  பார்ப்பவர்க்கு அந்த  ஆழத்தைக் காட்டிக் கொடுப்பது போன்றதொரு கரிய நிறத்தோற்றம். அந்தக் கடலின் கரிய நிறத்திற்கு நான் ஒன்றும் சளைத்து விடவில்லை என்று கூறுவது போன்று அகன்ற வானிலே கரிய மேகக் கூட்டம். அந்த மேகக் கூட்டங்களைப் பிளந்துகொண்டு பூமியை நோக்கிச் சீறிப் பாய்ந்து வரும் தீயின் கொடியை ஒத்த மின்னல்கள். அவற்றுடன் போட்டி போடுவது போல மேகக் கூட்டங்கள் ஒன்றை யொன்று மோதிக் கொள்வதால் உண்டாகும் இடியோசை. இவற்றையெல்லாம் தோற்கடிப்பேன் என்று சொல்லிக்கொண்டு, எப்பொழுதுதான் இது ஓயும் என்று தெரியாதபடி, கொட்டும் மழை. அப்படிப்பட்ட ஒரு கார்காலத்தின் நள்ளிரவு.



காவலர்கள் சோர்ந்திருந்த நேரம். அதை எனக்குச் சாதகமாக்கிக் கொண்டு உள்ளே நுழைந்து விட்டேன். நீ மட்டும்தான் நுழைய முடியுமா என்று குளிர் மிகுந்த வாடைக்காற்றும் உள்ளே நுழைந்து என்னை வாட்டியது. அதைக் தாங்கிக்கொண்டு என் தலைவிக்காக அவள் தந்தையின் நீண்ட மாளிகையின் உள்ளே ஓர் ஓரமாக நின்று காத்திருந்தேன்.

தன்னிடம் பொருள் வேண்டி வருவோர்கள், அவர்கள் விரும்பி வந்தது கிடைக்காமல் திரும்பியதே இல்லை என்ற பெரும்பெயர் பெற்றவன்; வீரக்கழலும் வீரக் கொடியும் அணிந்த, வாய்மை தவறாத கொடை வள்ளல் அதிகனின் நாடு அது. அவன் நாட்டிலே வளர்ந்திருக்கும் பலா மரங்கள் தாங்கள் காய்ப்பதை என்றுமே நிறுத்தியது இல்லை. அவற்றுடன் வேங்கை மரங்களும் சேர்ந்த அழகு மிகுந்த மலைப்பகுதி. வில்லாற்றல் நிரம்பிய படையினை உடைய பசும்பூண் பாண்டியன் யானையானது வெற்றிக் கொடியை ஏந்திச் செல்வது போன்று அதி உயர்ந்து காட்சி தரும் அருவிகளை உடைய மலைச்சாரல் அது. அந்த மலைச்சாரலிலே தெய்வமகளிர் போன்ற பெண்கள் எப்பொழுதாவது வந்து விளையாடுவார்கள். அவர்களைப் போன்று அரிதானவள் என் தலைவி.

கருமணல் போன்ற கரிய கூந்தலையும், ஒளி வீசும் முகத்தையும் உடையவள் என் தலைவி. அந்த முகத்தினிலே அழகிய இமைகள். அவற்றின் இடையிலே சுழன்றாடும் அவள் கருவிழிகள். எப்பொழுதும் புன்னையுடன் விளங்கும் பவளவாய். அதில், வண்டுகள் விரும்பி வட்டமிடும் முல்லை அரும்புகளைக் கோர்த்து வைத்தது போன்ற வெண்மையான அவள் பல்வரிசை. அழகிய வளையல்களை அணிந்த கைகளிலே வீசிக்கொண்டு, காற்றில் அசைந்தாடும் கொடிபோல நடந்து என் அருகே வந்தாள். அதிகனின் மலைச்சாரலில் வாழும் மகளல்லவா, என்னை ஏமாற விடாமல் நான் எதிர்பார்த்து வந்தது போல் என் காதல் நோய் தீர என்னைக் கட்டி அணைத்தாள்.

இவ்வாறு தன் தலைவியை இரவிலே சந்தித்துவிட்டுத் திரும்புகையில் தன் நெஞ்சிற்குத் தலைவன் சொல்வதாக அமைந்த இந்தக் காட்சியினை பின்வரும் பாடலில் வருணிக்கின்றார் சங்ககாலப் புலவரான பரணர் என்பவர்.
பாடல்:
கொளக்குறை படாஅக் கோடுவளர் குட்டத்து

அளப்புஅரிது ஆகிய குவைஇருந் தோன்றல,

கடல்கண் டன்ன மாக விசும்பின்

அழற்கொடி அன்ன மின்னுவசிபு நுடங்க,            5

கடிதுஇடி உருமொடு கதழ்உறை சிதறி,

விளிவுஇடன் அறியா வான்உமிழ் நடுநாள்,

அருங்கடிக் காவலர் இகழ்பதம் நோக்கி,

பனிமயங்கு அசைவளி அலைப்ப, தந்தை

நெடுநகர் ஒருசிறை நின்றனென் ஆக;             10

அறல்என அவிர்வரும் கூந்தல், மலர்என

வாள்முகத்து அலமரும் மாஇதழ் மழைக்கண்,

முகைநிரைத்து அன்ன மாவீழ் வெண்பல்,

நகைமாண்டு இலங்கும் நலம்கெழு துவர்வாய்,

கோல்அமை விழுத்தொடி விளங்க வீசி,            15

கால்உறு தளிரின் நடுங்கி, ஆனாது,

நோய்அசா வீட முயங்கினள் - வாய்மொழி

நல்இசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய

நசைபிழைப்பு அறியாக் கழல்தொடி அதிகன்

கோள்அறவு அறியாப் பயம்கெழு பலவின்          20

வேங்கைசேர்ந்த வெற்பகம் பொலிய,

வில்கெழு தானைப் பசும்பூண் பாண்டியன்

களிறுஅணி வெல்கொடி கடுப்பக, காண்வர

ஒளிறுவன இழிதரும் உயர்ந்துதோன்று அருவி

நேர்கொள் நெடுவரைக் கவாஅன்                   25. 
  
சூரர மகளிரிற் பெறற்குஅரி யோளே.


 --- (பரணர், அகநானூறு - 162)



கோடு - சங்கு, குட்டம் - ஆழம், உருமொடு - இடியொடு, இகழ்பதம் - அயர்ந்திருத்தல், அசைவளி - அசையும் காற்று, துவர்வாய் - பவளவாய், நுடங்கி - அசைந்து. 

Friday 16 June 2017

சங்க இலக்கியத் தூறல் 12 - காதலியும் காடைகளும்



காதலியும் காடைகளும்
--- அன்பு ஜெயா, சிட்னி

தன்னுடைய கணவன் விலைமகள் வீட்டிற்குச் சென்று தன் நேரத்தை இன்பமாகக் கழித்துவிட்டு வீட்டில் நுழைவதைப் பார்க்கிறாள் தலைவி. அவன் தனக்குத் துரோகம் செய்து வருகிறான் என்பதை நினைத்து அவளுக்கு சரியான கோபம். தான் ஏமாற்றப் படுகிறோம் என்று அவள் மனதில் ஆத்திரம் பொங்குகிறது.




ஆத்திரத்துடன், “அங்கேயே நில். உள்ளே வராதே. எப்போதும் விலைமகள்  வீட்டிற்குச் செல்பவன்தானே நீ. அந்தப் பாதையை மறந்து இங்கு வந்து விட்டாயோ? கருமையான, மணக்கும் கூந்தலை உடைய அந்த விலைமகளின் வீட்டிற்கே போய்விடு. நீ இங்கு நடந்த வந்தபோது சிவந்த போன உன் பாதங்கள் மீண்டும் சிவந்து போக அவள் வீட்டிற்கே திரும்பி நடந்து போய்விடு,” என்று அவன் முகத்தில் அடித்தது போலக் கூறுகிறாள்.
அதற்கு அவள் கணவன், “வெண்மையான பல்வரிசைக்குச் சொந்தக்காரியான என் காதலியே! நீ தவறாக நினைத்துக் கொண்டு இப்படிப் பேசுகிறாய். நான் விலைமகள் வீட்டிலிருந்து வரவில்லை. வேறு ஓர் இடத்திற்குச் சென்றிருந்தேன். அங்கே ஒருவன் சில காடைகளைக் கொண்டு வந்திருந்தான். சேவல் கோழிச் சண்டை பார்ப்பது போல காடைச் சண்டை பார்த்துக் கொண்டிருந்தேன். தாமதமாகிவிட்டது. நீ ஏதேதோ கற்பனை செய்துகொண்டு இருக்கிறாயே,” என்று அவளைச் சமாதானப் படுத்த முயன்றான்.

அவன் சொல்வதை நம்பாத அவள் ஏளனமாக, ஓ! காடைச் சண்டைப் பார்த்தாயா?! கேள்விப்பட்டேன், கேள்விப்பட்டேன். எப்படிப்பட்ட காடைகள் என்றும் கேள்விப்பட்டேன். அந்த யாழிசைக்கும் பாணன் புதிது புதிதாகக் காடைகளைக் கொண்டு வந்திருந்தானாம்! அவனுடைய யாழிசைக்கு ஏற்றதுபோல அந்தக் காடைகள் அவை சண்டைபோட்டனவாம்! ஆமாம், ஆமாம்! அந்தச் சண்டையைப் பார்த்தவன் போலத்தான் நீ காணப்படுகிறாய்! அந்தச் சண்டையால் உன் உடம்பில்தான் எத்தனை புண்கள். அந்தப் புண்களெல்லாம் காடைகள் சண்டையை நீ பார்த்தற்குச் சாட்சி சொல்கின்றனவே!,” என்று கூறியவள், மீண்டும் தொடர்ந்தாள்.
“நீதான் அந்தக் காடைகளுடனேயே எல்லா இடங்களிலும் சுற்றுவதைப் பார்த்துத்தான் இந்த ஊரே சிரிக்கிறதே! நீ திருந்த மாட்டாய்! ஊர் சிரிப்பதையும் பொருட்படுத்தாமல், அந்தக் காடையை உன் மார்போடு அணைத்துக் கொண்டிருக்கிறாய். அதனால் கர்வம் கொண்ட அந்தக் காடை மற்ற காடையுடன் சண்டையிட்டது. அதனால் அந்தக் காடையை விட்டுவிட்டு பாணனிடம் சொல்லி வேறொரு காடையைக் கொண்டு வரச்சொன்னாய். அவனும் வேறொரு காடையைக் கொண்டு வந்தான். அந்தக் காடையும் கர்வம் கொண்டு மற்ற காடையுடன் சண்டையிட்டது. இப்படிப் பல காடைகளின் சண்டையை நீ பார்த்ததை எல்லாம்தான் உன் முகம் காட்டிக் கொடுக்கிறதே!,” என்று அவளுடைய ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்தாள்.

இன்னும் அவளைச் சமாதானம் படுத்த முடியும் என்று நம்பிய அவள் கணவன், “ என் ஆருயிரே! நீ நினைப்பதைப் போல் ஒன்றும் நடக்கவில்லை என்று உன் உடலைத் தொட்டு சத்தியம் செய்யட்டுமா?,” என்று கேட்டான்.

அதற்கு அவள், “ ஐயோ! வேண்டாமப்பா. நீ பொய்யை மெய்யாக மாற்றி வஞ்சிக்கக் கூடிய திறமைசாலி ஆயிற்றே. வேண்டவே வேண்டாம்,” என்று கூறினாள்.

அதற்கு அவன், “ நல்லவளே! என்னுடைய தவறுகளை எல்லாம் கண்டுபிடித்து, என்னைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்டாய். என் தவறுகளை மன்னித்து விடு,” என்று கூறினான்.
அதற்கு அவள், “மன்னிப்பேன் மன்னிப்பேன். உன்னை மன்னிக்க நான்யார்? நீ முன்பு பழகிக் கைவிட்ட அந்தக் காடைகளெல்லாம் இன்னும் உனக்காக ஏங்கிக் காத்துக் கொண்டிருக்கின்றன. உன்னுடைய பாணனை யாழ் வாசிக்கச் சொல்லி, அந்தக் காடைகளின் சண்டையைக் கண்டு ஆடிப் பாடு. என்னை ஏமாற்றியது போல அந்தக் காடைகளையாவது ஏமாற்றாமல் இரு,” என்று சொல்லி அவனை வெளியே அனுப்பிக் கதைவைச் சாத்திவிட்டாள்.

இந்தக் காட்சியைப் பாலைபாடிய பெருங்கடுங்கோ என்ற புலவர் பின்வரும் பாடலில் அழகாகச் சித்தரிக்கின்றார்.

தலைவி
நில் ஆங்கு, நில் ஆங்கு; இவர்தரல்; எல்லா! நீ
நாறு இருங் கூந்தலார் இல் செல்வாய், இவ் வழி
ஆறு மயங்கினை போறி! நீ வந்தாங்கே
மாறு, இனி நின் ஆங்கே – நின் சேவடி சிவப்ப

தலைவன்
செறிந்து ஒளிர் வெண் பல்லாய்! யாம் வேறு இயைந்த    5
குறும்பூழ்ப் போர் கண்டேம், அனைத்தல்லது, யாதும்
அறிந்ததோ இல்லை, நீ வேறு ஓர்ப்பது.

தலைவி
குறும்பூழ்ப் போர் கண்டமை கேட்டேன், நீ என்றும்
புதுவன ஈகை வளம் பாடி, காலின்
பிரியாக் கவி கைப் புலையன் தன் யாழின்    10
இகுத்த செவி சாய்த்து, இனிஇனிப் பட்டன
ஈகைப் போர் கண்டாயும் போறி; மெய் எண்ணின்
தபுத்த புலர்வில் புண்.
ஊரவர் கவ்வை உளைந்தீயாய், அல்கல் நின்
தாரின்வாய்க் கொண்டு முயங்கி, பிடி மாண்டு,   15
போர் வாய்ப்பக் காணினும் போகாது கொண்டு, ஆடும்
பார்வைப் போர் கண்டாயும் போறி; நின் தோள் மேலாம்
ஈரமாய் விட்டன புண்.
கொடிற்றுப் புண் செய்யாது, மெய்ம் முழுதும் கையின்
துடைத்து, நீ வேண்டினும் வெல்லாது கொண்டு, ஆடும்   20
ஒட்டிய போர் கண்டாயும் போறி; முகம்தானே
கொட்டிக் கொடுக்கும் குறிப்பு.

தலைவன்
ஆயின், ஆயிழாய்! அன்னவை யான்ஆங்கு அறியாமை
போற்றிய நின்மெய் தொடுகு.

தலைவி
அன்னையோ! மெய்யைப் பொய் என்று மயங்கிய, கை ஒன்று  25
அறிகல்லாய் போறிகாண், நீ.

தலைவன்
நல்லாய்! பொய் எல்லாம் ஏற்றி, தவறு தலைப்பெய்து
கையொடு கண்டாய்; பிழைத்தேன்; அருள், இனி.

தலைவி
அருளுகம்; யாம்; யாரேம், எல்லா! தெருள?
அளித்து, நீ பண்ணிய பூழ் எல்லாம் இன்னும்    30
விளித்து, நின் பாணனோடு ஆடி அளித்தி
விடலை! நீ நீத்தலின் நோய் பெரிது ஏய்க்கும்
நடலைப்பட்டு, எல்லாம் நின் பூழ்.  

  --- (கலித்தொகை – 95)


தனக்குத் துரோகம் செய்துவிட்டு விலைமகள் வீட்டிற்குச் செல்லுகின்ற கணவனை விரட்டிய அடித்த ஒரு பெண்ணை சங்க காலத்திலும் காண்பது பெருமையாக உள்ளது. ஒரு வேளை கண்ணகி இந்தப் பெண்ணின் கதையைப் படித்திருக்க மாட்டாளோ?!

Wednesday 31 May 2017

தென்முகக்கடவுள்

ஞானகுரு தென்முகக்கடவுள் (தட்சிணாமூர்த்தி)

--- அன்பு ஜெயா


இறைவன் தன் குழந்தைகளான ஆன்மாக்கள்  பிறவி என்ற பெருங்கடலை நீந்திக் கடந்து தன்னை வந்தடைந்து நிலையான பேரின்பத்தைப் பெறுவதற்காகப்  பதி, பசு, பாசமெனும் முப்பொருள் உண்மையை விளக்கி,   அந்த உண்மையை  குரு உபதேசம் மூலம் பெற வேண்டியதின் அவசியத்தையும்  உணர்த்துவதற்காகக் கல்லால மர நிழலில் தென்முகக்கடவுளாக, தட்சிணாமூர்த்தியாக, ஆலமர் செல்வனாக, ஞானகுருவாகக் காட்சி அளிக்கிறார்.  



அப்பெருமானை,

“கல் ஆலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதற்கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்த அதனை இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து.
பவத்தொடக்கை வெல்வாம்” ,
(திருவிளையாடற்புராணம்)


“கல்லால மரத்தின் கீழ் வீற்றிருந்து நான்கு மறைகளையும், வேதத்தின் உறுப்புகளான ஆறு அங்கங்களையும் பிரம்மாவின் புதல்வர்களும் கல்வி கேள்வியில் சிறந்தவர்களுமான சனகர், சனந்தனர், சனாதரர், சனந்தகுமாரர் ஆகிய நான்கு முனிவர்களுக்கு எல்லாமாயும், ஒன்றும் இல்லாததாயும் உள்ள உண்மைப்பொருளை,  முப்பொருள் உண்மையை, அசையாது இருந்தபடி வாயினால் கூறாமல் சின்முத்திரையால் காட்டி, மௌனகுருவாகக் குறிப்பினால் உணர்த்திய தென்முகக் கடவுளை வணங்கி பிறவி என்கின்ற இந்த பந்தத்தை வெல்லுவோம்” -  என்று கூறுகின்றார் பரஞ்சோதி மாமுனிவர்.

ஆணவம், கன்மம், மாயை எனும் மூன்று மலங்களும் தமது சின்முத்திரையால் வேறுபட்டு ஒழிந்திடக் காட்சி அருளுகின்றார் என்று தட்சிணாமூர்த்தித் தத்துவத்தைக் கச்சியப்பமுனிவர் பின்வரும் பாடலில் கூறுகிறார்:

“மும்மலம் வேறுபட்டொழிய மொய்த்துயிர்
அம்மலர்த்தாள்நிழல் அடங்கும் உண்மையைக்
கைம்மலர்க் காட்சியில் கதுவநல்கிய
செம்மலையலது உளம் சிந்தியாதரோ.”
(திருவானைக்காப் புராணம் – வரங்கொள்படலம்).


திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும், மாணிக்கவாசகரும், மற்ற அருளாளர்களும் தென்முகக்கடவுளைப் போற்றிப் பாடியுள்ளனர்.

தென்முகக்கடவுள்

தென்முகக்கடவுளின் திருவுருவம்  64 சிவ வடிவங்களில் ஒன்றாகவும் , சிவபெருமானின் 25 திருமேனிகளில் ஒன்றாகவும் விளங்குவதாகும்.  சிவன் கோயில்களில் சிவனின் கருவறைக்குத் தென்புறத்தில், தென்திசையை நோக்கியபடி பளிங்கு போன்ற திருமேனியுடன் புன்னகை பூக்கும் முகத்துடன் வலது காலைத் தொங்கவிட்டு அதன்மீது  இடது காலை மடக்கி வைத்து, வலது பாதம் முயலகனை மிதித்தவாறு அமர்ந்த கோலத்தில் காட்சி தருபவர்.   அவருடைய காலடியில் சனகாதி முனிவர்கள் நால்வரும் ஞானோபதேசம் கேட்டபடி அமர்ந்திருக்கிறார்கள்.  பெருமானின் நெற்றியிலே மூன்று கீற்றுகளாக அணிந்திருக்கும் திருநீறு அவருடைய   நெற்றிக்கண்ணை மறைத்துக் கொண்டிருக்கிறது. கழுத்திலும் கைகளிலும் உருத்திராக்க மாலைகள் அழகு செய்து கொண்டிருக்கின்றன.  காதினிலே குண்டலங்கள் ஆடிக்கொண்டிருக்கின்றன.  வலது பின்கரத்தில் உடுக்கையும் பாம்பும், முன்கரத்தில் சின்முத்திரை   இடது பின்கரத்தில் தீயும், முன்கரத்தில் ஓலைச்சுவடியையும்  தாங்கி, வலது பின்கரத்தில் உடுக்கையையும் பாம்பையும் ஏந்திக்கொண்டு, முன்கரத்தில் ஞானமுத்திரையான  சின்முத்திரையைக்  காட்டி,  இடையிலே புலித்தோலாடையும் அணிந்து பெருமான் காட்சிதருகிறார்.

சிவபெருமான் திருக்குறுக்கை என்ற திருத்தலத்தில் யோகத்தின் பெருமையை உணர்த்த யோக தட்சிணாமூர்த்தி வடிவிலும்,  வீணையைய உருவாக்குவது பற்றியும் அதனை வாசிப்பது பற்றியும் எடுத்துரைத்த திருத்தலமான லால்குடியில்  வீணா தட்சிணாமூர்த்தி வடிவிலும் காட்சி தருகிறார்.  இந்த இரண்டு வடிவங்களும் 64  சிவ வடிவங்களில் அடங்கும்.


சில கோயில்களில் தட்சிணாமூர்த்திப் பெருமான் வேறு சில வடிவங்களிலும் காட்சி தருகின்றார்.  மயிலாடுதுறைக்கு அடுத்த செம்பொன்னார் கோயில் அருகிலுள்ள புஞ்சை என்ற ஊரில் சிவந்த நிறத்தில் காட்சி தருகிறார்.  மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள வள்ளலார் கோயில் திருத்தலத்தில் ரிஷபத்தின் மீது அமர்ந்தபடி மேதா தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.   சுருட்டப் பள்ளி என்ற தலத்தில் தாம்பத்திய  தட்சிணாமூர்த்தியாகக் காட்சி தருகிறார். திருநாவலூரில் ரிஷபத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.  கும்பகோணத்தை அடுத்துள்ள செங்கராங்குடிப் புதூர் தலத்தில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தியின் காலடியில் நவக்கிரகங்களும் தஞ்சமடைந்துள்ளதாகக் காணப்படுகிறது.  திருப்பூந்துருத்தியில் தாமரை மலர்மீது அமர்ந்து வீணை வாசிக்கும் நிலையில் வீணா தட்சிணாமூர்த்தியாகக் காட்சி அளிக்கின்றார்.  தக்கோலத்திற்கு அருகில் உள்ள அகரம் கோவிந்தவாடியில் தட்சிணாமூர்த்தி மூலவராகவும் மற்றவர்கள் பரிவார தேவதைகளாகவும் காணப்படுகிறார்கள். இவை மட்டுமின்றி, சாம்ப தட்சிணாமூர்த்தி, சக்தி தட்சிணாமூர்த்தி, கீர்த்தித் தட்சிணாமூர்த்தி, ராஜலிங்காசன தட்சிணாமூர்த்தி போன்று வேறுபல வடிவங்களிலும் சில கோயில்களில் காட்சிதருகிறார்.

தட்சிணாமூர்த்தி காட்டும் சின்முத்திரை

தட்சிணாமூர்த்திப் பெருமான் எப்போதும் சின்முத்திரை காட்டி அமர்ந்திருப்பார். வலதுகையிலுள்ள ஆள்காட்டி விரல் வளைந்து அதன் நுனி கட்டை விரலை அணைத்திருக்க, நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் மூன்றும் தனித்து வளையாது நிற்கும் அடையாளச் சின்னம் ஞானமுத்திரை அல்லது சின்முத்திரையாகும். கட்டை விரல் பதி என்னும் இறைவனையும், ஆள்காட்டி விரல் பசு என்னும் ஆன்மாவையும் (உயிர்), மற்ற மூன்று விரல்களும் பாசம் (தளை) என்னும் மும்மலங்களைக் குறிக்கும். நடுவிரல் ஆணவ மலத்தையும், மோதிரவிரல் கன்ம மலத்தையும், சுண்டு விரல் மாயா மலத்தையும் குறிக்கும். ஆன்மாவானது இறைவனைச் சேர்ந்து நிற்கும்போது அதனைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்த மும்மலங்களும் ஆன்மாவை விட்டு விலகும் என்ற தத்துவத்தைச் சின்முத்திரை விளக்குகிறது.

தட்சிணாமூர்த்தி வழிபாடு

தட்சிணாமூர்த்திக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் இவை மூன்றையும் கலந்து விளக்கேற்றி வழிபடவேண்டும். 11 அல்லது 22 விளக்குகள் ஏற்றலாம். இவரை வலம் வரும்போது 3, 9 அல்லது 11 முறைகள் சுற்றிவரவேண்டும். அவருக்குப் பிடித்த முல்லை அல்லது மல்லிகை மாலை அணிவித்து வெற்றிலை, பாக்கு, பழங்களை நிவேதனமாக வைத்து  வழிபட வேண்டும்.


தட்சிணாமூர்த்தி வழிபாட்டுப் பலன்கள்

தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் அலைபாயும் மனம் நமது கட்டுப்பாட்டுக்குள் வரும். நமது சிந்தனையை அஞ்ஞானத்திலிருந்து அகற்றி நமக்கு ஞானத்தை அருளுவார்.  அவரை வழிபட்டால் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு பயன்களும் கிடைக்கும்.  மனச்சஞ்சலத்தில் உள்ளவர்கள் எந்த நாளிலும் தட்சிணாமூர்த்தி முன் அமர்ந்து தியானம் செய்து, குழப்பங்கள் நீங்கப்பெற்று மன அமைதி பெறலாம்.

தென்முகக்கடவுளும் குருபகவானும்

தென்முகக்கடவுள் குருவாக விளங்குபவர் என்பதால் நவகிரகங்களில் ஒருவரான குருபகவானும் தென்முகக்கடவுளும் ஒருவரே என்று பலர் தவறாகக் கருதிக்கொண்டு வழிபாடு செய்கின்றனர்.  சில கோயில்களிலே, குருபகவானுக்கு அணிவிக்க வேண்டிய மஞ்சள் ஆடையையும் கடலை மாலையையும் தென்முகக் கடவுளுக்கு அணிவிக்கிறார்கள்.  குருப்பெயர்ச்சி அன்று குருபகவானுக்குச் செய்யவேண்டிய அபிஷேக ஆராதனைகளைத் தட்சிணாமூர்த்திக்குச் செய்கிறார்கள்.  அப்படிச் செய்வது தவறு என்று ஆன்மீக அறிவுமிக்கப் பெரியோர்கள் கூறுவதை அவர்கள் பொருட்படுத்துவதில்லை. 


தட்சிணாமூர்த்திக்கும் குருபகவானுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன.   தட்சிணாமூர்த்தியின் வடிவம்  சிவ வடிவம்.  64 சிவ வடிவங்களில் ஒன்றாக விளங்குபவர். அவருக்குத்  தோற்றமும் மறைவும் இல்லை.   வியாழன் எனப்படும் குருபகவான் நவக்கிரகங்களில் ஒருவர்.  அவருடைய வடிவம் கிரக வடிவம். அவருக்குத் தோற்றமும் மறைவும் உண்டு.  தட்சிணாமூர்த்தி பிரம்ம ரிஷிகளுக்குக் குருவாக விளங்கும் சிவபெருமான்.  வியாழன் தேவர்களுக்குக் குருவாக விளங்கும் பிரகஸ்பதி.  தட்சிணாமூர்த்தி தென்திசை நோக்கி இருப்பவர். குருபகவான் வடதிசை நோக்கி இருப்பவர்.  தட்சிணாமூர்த்திக்கு உரிய ஆடை வெண்ணிறம். வியாழனுக்கு உரியது மஞ்சள் நிற ஆடை.  சிலர், “குருபகவானுக்கு அதிதேவதையாக இருப்பவர் தட்சிணாமூர்த்தி.  அவர் குருவுக்குக் குருவாக இருப்பவர். அதனால் குருபகவானுக்குச் செய்யவேண்டிய அபிஷேக ஆராதனைகளை தட்சிணாமூர்த்திக்குச் செய்யலாம்,” என்று கூறுகின்றனர். அதுவும் தவறான வாதமாகும்.  குருபகவானுக்கு நற்பலனைத் தரும் அதிதேவதை இந்திரன் என்றும், அதைவிட அதிகப் பலனைக் குருவுக்குத்தரும்  பிரத்யதி தேவதையான  பரிகார தேவதை பிரம்மா என்றும் பழைய நூல்கள் கூறுவதாகப் பெரியவர்கள் கூறுகின்றனர்.  எனவே குருப்பெயர்ச்சியன்று செய்கின்ற ஆராதனைகள் மற்றும் பரிகாரங்களை நவக்கிரகங்களில் ஒருவரான குருபகவானுக்கே செய்யவேண்டும். குருபகவானுக்கு உகந்தநாள் வியாழக்கிழமையாகும்; தட்சிணாமூர்த்திப் பெருமானுக்கு எல்லா நாள்களும் உகந்த நாள்கள் என நம்பப்படுகிறது.

-------------------------------------------------------------

Wednesday 4 January 2017

திருநாவுக்கரசர் போற்றிய திருவதிகை - நூல் அறிமுகம் 





http://puthu.thinnai.com/?p=34043

அன்பு ஜெயாவின் திருநாவுக்கரசர் போற்றிய திருவதிகை நூல் அறிமுகம்


முனைவர் மு. பழனியப்பன்
இணைப்பேராசிரியர்,
தமிழ்த்துறைத் தலைவர்,
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி,
திருவாடானை

கோயில்கள் மாபெரும் கலைப்படைப்புகள். அவை கட்டடக்கலை, சிற்பக்கலை, ஓவியக்கலை, இசைக்கலை, பாடல்கலை, ஆடல்கலை, இயல்கலை போன்ற கலைகளின் இருப்பிடம். அவை சார்ந்து எழுந்த வேதம், ஆகமம், திருமுறை, தத்துவம், திருப்புகழ் போன்றன கோயில்களின்  ஒலிநிலை உயர்வுகள். புராணம், இதிகாசம், சிற்றிலக்கியங்கள் போன்ற படைப்புக்கலை உயர்ச்சிகள். கோயில் பற்றியதான கல்வெட்டுகள், செப்பேடுகள் போன்றன அழியாத வரலாற்றுச் சான்றுகள். கோயில் அமைவிடம், சுற்றுச் சூழல், நீர்நிலை போன்றன மண்வள மேம்பாடு சார்ந்தன. கோயில் திருவிழாக்கள் பக்தி அடிப்படை மட்டும் வாய்ந்தன அல்ல. சமுதாயக் கட்டுமானம், சமுதாய ஒத்திசைவு ஆகியன சார்ந்தன.

இந்நிலையில் ஒரு கோயிலைக் காண்பதென்றால் வெறும் காட்சிப் பொருளாக மட்டும் கண்டுவிட்டுச் சென்றுவிட  இயலாது. அதன் பருப்பொருள், நுண்பொருள் ஆகியனவற்றை உணர்ந்தாக வேண்டும். உணர்ந்ததை வெளியுலகிற்கு உணர்த்தியாகவேண்டும். இவ்வாறு  தமிழகத்தின் ஒவ்வொரு கோயிலும் தக்கப் பின்னணியோடு ஆவணப்படுத்தும் முயற்சி தற்போது தொடங்கியிருப்பதாகத் தெரிகிறது.
ஆஸ்திரேலியாவைச் சார்ந்த தமிழன்பர் அன்பு ஜெயா அவர்கள் தமிழகக் கோயில்களில் ஒன்றாக விளங்கும் திருவதிகை பற்றிய அவரின் பதிவை, மேற்சொன்ன அத்தனை உயர்ச்சிகள் சார்ந்து ஒரு நூலாகத் தந்துள்ளார். அந்நூலின் பெயர் திருநாவுக்கரசர் போற்றிய திருவதிகை என்பதாகும். மலேசியா நாட்டில் சேலாங்கூர் பகுதியில் அமைந்துள்ள திருபீடம் அமைப்பு இதனை வெளியிட்டுள்ளது.

அன்பு ஜெயா என்ற பெயரை  முதன்முதலாக மதுரைத்திட்டத்தின் சிலப்பதிகாரப் பதிப்புப் பணியாற்றிய பெருமக்களுள் ஒருவராக அவரைக் கண்டுகொள்ள முடிந்தது. முன்னேற்றமான  சிந்தனைக்குரியவர் அன்பு ஜெயா என்பதன் அறிகுறி அது. தொடர்ந்து பல கருத்தரங்குகள், சந்திப்புகள், இணைய இயங்கு வட்டம் போன்றவற்றில் அவர் பற்றி உடனுக்குடன் அறிந்து கொள்ள வாய்ப்பளித்தது.

அவர் திருவதிகை பற்றி எழுதியுள்ள இந்நூலில் மிக முக்கியமான சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. முக்கியமாக திருவதிகைக் கல்வெட்டுகளை அவர் மீள்பதிவாக்கம் செய்துள்ள முறைமை அவரின் வரலாறு சார் வளமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது. மேலும் திரிபுரம் எரித்த நிலையில் அவ்வெப்பத்தைத் தணிவிக்க வேகாக் கொள்ளைக்குச் சிவபிரான் சென்ற நாட்டுப்புற வழக்கும் நூலில் தரப்பெற்றிருப்பது உரிய மதிப்பினை மக்கள் இலக்கியத்திற்கும் அளித்துள்ள பாங்கினை வெளிப்படுத்துவதாக உள்ளது.

நூல் ஏழு பகுதிகளைக் கொண்டுவிளங்குகிறது. திருவதிகை வீரட்டானேஸ்வரர், கோயில் அமைப்பு, சுயம்புலிங்க வழிபாடு, தீரத்தங்களும் திருவிழாக்களும், திரிபுரங்களின் தோற்றமும் அழிவும், திருநாவுக்கரசு சுவாமிகள், கல்வெட்டும் திருப்பணிகளும், திரவதிகைப் பாடல்கள் ஆகியன உட்தலைப்புகளாக அமைக்கப்பெற்றுள்ளன. நூலின் இடை இடையே அழகான வண்ண நயமிக்க புகைப்படங்கள் இணைக்கப்பெற்றுள்ளன. இதன் காரணமாக திருவதிகையை நேரடியாகக் கண்டதுபோல் ஓர் உணர்வு படிக்கும்போது ஏற்படுகிறது.
அன்பு ஜெயா இந்நூல் எழுதும்போது உருகி நின்ற இடம் மூலட்டானத்தி்ன் சுற்றுச்சுவர் பகுதியாகும். அங்குள்ள சிற்ப கலை நயங்களைக் கண்ட வண்ணம் அங்கேயே அன்பு ஜெயா நின்றிருந்திருக்க வேண்டும். எத்தனை மணிநேரம் நின்றாரோ. மேலும் திரிபுரம் அழித்த தேர்க்கோலத்தைக் கண்டு கண்டு அவர் மெய் உருகுகிறார். இராவணன் ஆணவமழித்த இறைவனை அவர் பெரிதும் போற்றுகிறார்.

இந்நூலின் கூடுதல் இணைப்பு திருநாவுக்கரசு சுவாமிகள். அவரின் தொண்டு, அவரின் உடன்பிறந்தார் திலகவதியின் சிறப்பும் உருவமும் இந்நூலில் இடம்பெறச் செய்யப்பெற்றுள்ளது. அப்பெருமாட்டி அழகுடன் வெள்ளைக்கலை உடுத்தி பூக்குடலையுடன் நம்மை வணங்குகிறார்.
அரிமோகினி கதை திருவதிகைக்கே உரிய கதை. இதுவரை வெளிப்படுத்தப்படாத கதை. இதுபோன்ற பற்பல சிறுகதைகளை உள்ளடக்கிய பெருநூல் இந்நூல். சைவம் தழைக்க வைத்த ஊர் திருவதிகை. அதிகை என்ற இவ்வூரின் பெயர் அதிகமான அளவில் சைவத்திற்குத் தொண்டு செய்தமையால் பெற்றதாகும். அதிகைக்கு ஒரு அன்பு ஜெயா. அதுபோல் மற்ற கோயில்களுக்கும் அன்பு ஜெயாக்கள் பெருகுக.

விலை- 120 ரூபாய்.

நூல் காந்தளகம்http://www.tamilnool.com/,சென்னையில் கிடைக்கிறது.