Pages

Friday, 11 April 2014

சங்க இலக்கியத் தூறல் 1 - சங்க காலத் தமிழர்களின் வளம்

சங்க இலக்கியத் தூறல் - 1 


சங்க காலத் தமிழர்களின் வளம்
(21/12/2015 அன்று புதுப்பித்தது)

- அன்பு ஜெயா, சிட்னி
முன்னுரை

தமிழ் மொழியின் மீது கொண்ட பற்றினால் பாண்டிய மன்னர்கள் தலைச்சங்கம், இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று மூன்று சங்கங்களை அமைத்து கல்விப் பணி புரிந்த காலம் 'சங்க காலம்' என்று போற்றப்படுகிறது. சங்க காலத்தில் தமிழிலக்கியங்கள் வளம்பெற்றிருந்ததைப் போலவே, தமிழ் மக்களின் வாழ்க்கையும் வளம் பெற்றிருந்தது. நீர் வளமும், நில வளமும், பொருள் வளமும் சிறப்பாக இருந்தன. அதற்கான சான்றுகளில் சிலவற்றை உற்றுநோக்குவதே இக்கட்டுரையின் நோக்கமாகும்.

நீர் வளமும் நில வளமும்

நாட்டு மக்கள் வளம்பெற நாடு வளமுள்ளதாக இருக்கவேண்டும். சங்க காலத் தமிழர்களின் வளத்தை அறிய அவர்கள் வாழ்ந்தபோது இருந்த நாட்டின் வளங்களைப்பற்றி சற்று ஆராயவேண்டும்.
சங்க இலக்கியங்களில் ஒன்றான மதுரைக் காஞ்சியில் அதன் ஆசிரியர் மாங்குடி மருதனார் பாண்டிய நாட்டின் நீர் வளம், நிலவளம் பற்றி பின்வருமாறு கூறுகின்றார்.
கல் காயும் கடு வேனிலொடு , இரு வானம் பெயல் ஒளிப்பினும்
வரும் வைகல் மீன் பிறழினும், வெள்ளம் மாறாது விளையுள் பெருக,
------------------- (மதுரைக் காஞ்சி, 106-109)
விளக்கம்: மலைகள் சூடேறிக் காய்ந்து போகும்படி வெப்பம் அதிகமாகி, மேகம் மழை பெய்யாது போனாலும், விடியற்காலை தோன்றும் வெள்ளி நட்சத்திரம் வடக்கே தோன்றுவதற்குப் பதிலாக தெற்கே தோன்றினாலும், ஆறுகள் வற்றாது நீர்ப் பெருக்கோடு ஓடுவதால், விளைச்சல் பெருகியிருக்கும்.

மேலும்,
“……குண கடல் கொண்டு குட கடல் முற்றி 
இரவும் எல்லையும் இளிவு இடன் அறியாது
அவலும் மிசையும் நீர்த் திரள்பு ஈண்டி
.............................................................................................
குணகடற்கு இவர் தரும் குரூஉப் புனல் உந்தி
நிவந்து செல் நீத்தம் குளம் கொளச் சாற்றிக்
......................................................... (மதுரைக் காஞ்சி, 238-246 )
விளக்கம்: கீழ்க்கடலில் நீரை மொண்ட மேகமானது, மேற்குத் திசையில் உள்ள மலைகளில் தங்கி, இரவு பகல் எது என்று தெரியாதபடி அடைமழையைப் பெய்து, மேட்டிலும் பள்ளத்திலும் பாய்ந்து, கிழக்குக் கடலை நோக்கி ஓடும். அப்படி ஓடுகின்ற நீரைக் குளங்களில் தேக்கிவைப்பர்.

இதைப் போலவே, சேர நாட்டிலுள்ள பேரியாற்றில் (பெரியாறு) வறண்ட காலத்திலும் வெள்ளம் பாய்ந்தோடியது என்பதை காசறு செய்யுட் பரணர் பின்வரும் சங்கப் பாடலில் கூறுகின்றார்:
குன்று வறம் கூரச் சுடர் சினம் திகழ,
அருவி அற்ற பெரு வறற் காலையும்,
அருஞ் செலல் பேர் ஆற்று இருங் கரை உடைத்து....... (பதிற்றுப்பத்து, 5: 3.13-15)

சோழ நாட்டின் காவிரி நீர்வளம் பற்றி பட்டினப்பாலையில் கடியலூர் உருத்திரங் கண்ணனாரின் கூற்று:
“வான் பொய்ப்பினும், தான் பொய்யா,
மலைத் தலைய கடல் காவிரி
புனல் பரந்து பொன் கொழிக்கும்.”  (பட்டினப்பாலை, 5-8)
விளக்கம்: மழை பெய்யாது போனாலும் தான் பொய்க்காது, நீர் சுமந்து வரும் காவிரி ஆறு பாயப் பொன்னாய் விளையும் கழனி வயல்கள்.

நாட்டின் நீர்வளத்தைப் பெருக்க மன்னர்கள் செய்தவை பற்றி பின்வரும் பாடல் உணர்த்துகிறது:
“காடு கொன்று நாடாக்கிக்
குளம் தொட்டு வளம்பெருக்கி (பட்டினப்பாலை, 283-284)
விளக்கம்: காடுகளைத் திருத்தி, நாடாக்கி, குளங்களை வெட்டி, நாட்டின் வளங்களைப் பெருக்கி ................
அக்கால மன்னர்கள் ஆறுகளை வெட்டி அவற்றின் வழியே மலைகளில் பெய்யும் மழை நீரை ஏரி, குளம், ஊருணி என்னும் நிலைகளில் பாய்ச்சி நாட்டை வளப்படுத்தினர். கரிகால் சோழன் காவிரிக்குக் கரை அமைத்து, அதன் நீர் கால்வாய் வழி ஓடி நாடெங்கும் பயனளிக்க வழிசெய்தான்.

நாட்டில் ஒவ்வொரு வீட்டின் வளம்பற்றி பின்வரும் சங்கப் பாடலும் சாட்சி கூறுகின்றது:
கோள் தெங்கின் குலைவாழைக் காய்க்கமுகின் கமழ்மஞ்சள்
இனமாவின் இணர்ப்பெண்ணை முதற்சேம்பின் முளைஇஞ்சி
அகல்நகர் வியன்முற்றத்து...................... (பட்டினப்பாலை, 16-20)
விளக்கம்: குலைக்காய்களுடன் உள்ள தென்னையும், குலைவாழைத் தாருடைய வாழையும், பசும் காயுடன் உள்ள பாக்கு மரமும், வாசமிகு மஞ்சளும், குலைதொங்கும் பனையும், சேம்பும், இஞ்சியும் வீடுகளின் முன்புறத்தில் விளைந்திருந்தன................
இவ்வாறு சங்க காலத் தமிழகத்தில் நீர்வளமும் நிலவளமும் பெருகி இருந்தன.

பொருள் வளம்

வாணிகமே ஒரு நாட்டின் செல்வ வளத்தைக் கணிக்கும் அளவு கோளாகும். சங்க காலத் தமிழர்களின் வாணிகம் பற்றிய செய்திகள் சங்கப் பாடல்களில் மிகுதியாகக் காணப்படுகின்றன. வாணிகம் செய்யும் கடைவீதிக்கு அங்காடி என்ற பெயர் வழங்கியது. காவிரிப்பூம்பட்டினத்துக் கடைவீதிகளைப்பற்றிப் பட்டினப்பாலையிலும், மதுரை மாநகரின் கடைவீதிகளைப் பற்றி மதுரைக் காஞ்சியிலும் சிலப்பதிகாரத்திலும் அதிகமாகக் காணலாம்.

மதுரைக் காஞ்சியிலிருந்து ஓர் எடுத்துக்காட்டு:
மழை கொளக் குறையாது, புனல் புக மிகாது,
கரை பொருது இரங்கும் முந்நீர் போல,
கொளக் கொளக் குறையாது, தரத் தர மிகாது................
மாடம் பிறங்கிய மலி புகழ்க் கூடல்
நாள் அங்காடி........ (மதுரைக் காஞ்சி, 425-430)
விளக்கம்: மேகங்கள் மழைக்காக கடலிலிருந்து நீரைக் கொண்டுபோனாலும் கடல் நீர் வற்றுவதில்லை. அதே போல் ஆற்று நீர் தினமும் தன்னுடன் வந்து சேர்ந்தாலும், கடல் பொங்கி வழிந்துவிடாமல், கரையை உடைத்துக்கொண்டு வெளியேறாமல் இருக்கும். அதைப்போலவே, பலரும் வந்து பண்டங்களை வாங்கிப் போனாலும் குறையாமல், மேலும் மேலும் பண்டங்கள் வந்து கொண்டு இருந்தாலும் அளவுக்கு அதிகமாகி அவை தேங்கிவிடாமலும் இருக்கும்படி விற்பனை சிறந்திருக்கும் மதுரை அங்காடி.

பொருநர் ஆற்றுப்படையிலிருந்து ஓர் எடுத்துக்காட்டு:
கருவி வானம் கடல் கோள் மறப்பவும்
பெரு வறனாகிப் பண்பு இல் காலையும்-
.........................................................................................
புனல் ஆடு மகளிர் ................வாய் நெல் அரிந்து
.......................................................................................
சாலி நெல்லின் சிறை கொள் வேலி
ஆயிரம் விளையுட்டு ஆகக்
காவிரி புரக்கும் நாடு........ (பொருநர் ஆற்றுப்படை, 236-248)
விளக்கம்: கடல் நீரை மொண்டு சென்று மேகம் மழை பெய்யக்கூட மறக்கலாம். இவற்றால் பெரும் வறட்சியும், பஞ்சமும் உண்டாகும் காலங்களில் கூட, மகளிர் ஆற்று நீரிலும், குளங்களிலும், விழுந்து புரண்டு நீராடி மகிழ்வர். வளைந்த கூரிய அரிவாளைக்கொண்டு, நெல்லை அறுத்துக் கதிர்களை மலைபோல அடுக்கி வைப்பர். அப்படி, வேலி ஒன்றுக்கு, ஆயிரம் பொதியாக செந்நெல் விளையும் காவிரி பாயும் நாடு.

வெளி நாட்டு வாணிகம்:

தென்னிந்தியர் கடல் வாணிகத்தில் சிறந்திருந்தனர் என்று தாலமி, பிளைநி போன்ற அயல் நாட்டார் எழுதிவைத்த குறிப்புகளைக் கொண்டும் புதைபொருள் ஆராய்ச்சி கொண்டும் அறிஞர் கூறுகின்றனர் (1)

கி. மு. 10ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டிலிருந்து கப்பல்கள் மூலமாக மயில் தோகை, யானைத்தந்தம், மணப்பொருள்கள் முதலியன ஏற்றுமதியாகின. எருதுகள் பாரசீக வளைகுடாவிற்கும் ஆப்பிரிக்காவிற்கும் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. பொனீசியருடைய (Phonecia - சிரியாவின் கரையோரப் பகுதிகள்) கப்பல்களில் சேர நாட்டு மிளகு ஏற்றுமதி செய்யப்பட்டது (2).

கி. மு. ஐந்தாம் நூற்றாண்டிற்கு முன்பு பாபிலோன் நகரத்திற்குக் கடல் வழியாக அரிசி, மயில், சந்தனம் முதலியன அனுப்பப்பட்டன (3).
தமிழகத்திலிருந்து ரோமப் பேரரசுக்கு இரும்பு, விலங்குகளின் தோல்கள், ஆட்டுமயிர், நெய் முதலியன ஏற்றுமதி செய்யப்பட்டன. சேர நாட்டிலிருந்து யானைத் தந்தம், ஆமை ஓடுகள் அனுப்பப்பட்டன. மதுரை, உறையூர் இவற்றிலிருந்து முத்துக்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன (4).

முசிறித் துறைமுகத்திலிருந்து மிளகு யவனர்* நாட்டுக் ஏற்றுமதி செய்யப்பட்டதை புலவர் தாயங்கண்ணனார் பின்வரும் பாடலில் குறிப்பிடுகின்றார்:
........................................................சேரலர்
சுள்ளிஅம் பேரியாற்று வெண் நுரை கலங்க,
யவனர் தந்த வினை மாண் நன் கலம்
பொன்னொடு வந்து கறியொடு பெயரும்
வளம் கெழு முசிறி.................................(அகநானூறு, 149)
விளக்கம்: யவனர் மரக்கலங்களில் முசிறித் துறைமுகத்திற்கு வந்து பொன்னைக் கொடுத்து மிளகை {கறி} ஏற்றிக்கொண்டு சென்றனர்.
*கிரேக்கர்களையும் ரோமர்களையும் சங்க காலத்தில் யவனர் என்று அழைத்தனர் என்று ஒரு குறிப்பு கூறுகின்றது.

இப்பொருள்களைப் பெற்றுக்கொண்டு இவற்றுக்கு மாற்றுப் பண்டங்களாக பொன் வெள்ளிக் காசுகள், உயர்ந்த மது வகைகள், பவழம், ஈயம், தகரம், எந்திரப் பொறிகள் முதலியவற்றை ரோமர்கள் தமிழ்நாட்டுக்கு ஏற்றுமதி செய்தார்கள் (5).
கி. பி. 60-ல் பெரிப்ளூஸ் (Periplus) என்னும் நூலில் அதன் ஆசிரியர் இந்தியத் துறைமுகங்களை நேரில் கண்டு சேர நாட்டில் தொண்டி, முசிறி, குமரி என்ற துறைமுகங்களையும், பாண்டிய நாட்டில் கொற்கைத் துறைமுகத்தையும், சோழ நாட்டில் காவிரிப்பூம்பட்டினத்தையும் பற்றி குறிப்பிட்டுள்ளார் (1).

சங்க காலத் தமிழர்களின் வாணிகம் அனைத்துத் திசைகளிலும் பரவி இருந்தது என்பதை புகார் நகரின் சிறப்பு பற்றி விவரிக்கும் பின்வரும் சங்கப்பாடல் விளக்குகின்றது.

நீரின் வந்த நிமிர்பரிப் புரவியும், காலின் வந்த கருங்கறி மூடையும்,
வடமலைப் பிறந்த மணியும் பொன்னும், குடமலைப் பிறந்த ஆரமும் அகிலும்,
தென்கடல் முத்தும் குணகடல்# துகிரும், கங்கை வாரியும் காவிரிப் பயனும்,
ஈழத்து உணவும் காழகத்து ஆக்கமும், அரியவும் பெரியவும் நெரிய ஈண்டி
வளந்தலை மயங்கிய நனந்தலை மறுகின்.... (பட்டினப்பாலை, 185-193)

விளக்கம்: வேற்று நாடுகளிலிருந்து கடல் வழி கொண்டுவரப்பட்ட குதிரைகளும், பக்கத்து ஊர்களிலிருந்து வண்டிகளில் வந்த மிளகு மூட்டைகளும்; வடக்கே மேரு மலையில் தோன்றிய பொன்னும், இரத்தின மணிகளும்; மேற்கு மலையில் விளைந்த சந்தனமும், அகிலும்; தெற்குக் கடலில் தோன்றிய முத்தும், கீழ்க் கடலில் வளர்ந்த பவழமும், கங்கைக்கரையில் இருந்து வந்த பொருட்களும், கடாரத்திலிருந்து வந்த நுகர் பொருள்களும்; மற்றும் சீனத்திலிருந்து தருவிக்கப்பட்ட கர்ப்பூரமும், பனிநீர், முதலான பல வகைப் பண்டங்களும், நிலத்தின் முதுகு நெளியும்படி இடப்பட்டிருந்த புகார் நகரம்.
# “குணகடல் துகிர் என்னும் பொழுது இன்றைய ஆஸ்திரேலியப் பகுதியின் பவழத்தைக் குறிக்கின்றது என்று கொள்வதில் பிழையில்லை.” (6)

முடிவுரை

மேற்குறிப்பிட்ட செய்திகளிலிருந்து, ஏறத்தாழ கி. மு. ஆயிரம் முதலே தமிழகம் கடல் வாணிகத்தில் சிறந்திருந்தது என்பது புலனாகின்றது. ஒரு நாட்டில் ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் அளவைப் பொறுத்தே அந்நாட்டின் பொருளாதார நிலை இருக்கும். அந்த முறையில் காணும் பொழுது, சங்க காலத்தில் தமிழர்கள் இறக்குமதி செய்ததைவிட ஏற்றுமதி செய்த பொருட்களே மிகுதியாக இருந்தன. சங்க காலத் தமிழர்களின் வாழ்க்கை வளமுடன் இருந்தமைக்கு இது ஒரு சான்றாக அமைகின்றது.

சான்றுக் குறிப்புகள்:

1.   தமிழ் இலக்கிய வரலாறு, பகுதி 6 - மா இராசமாணிக்கனார்.
2.   தமிழர் வரலாறு - புலவர் கா கோவிந்தன். மூலம்: P T S Ayyangar, History of the Tamils. Pages 129-134.
3.   தமிழ் இலக்கிய வரலாறு - பகுதி 6 - மா இராசமாணிக்கனார். மூலம்: K A N Sastry, A History of India Pages 76-78.)
4.   தமிழர் வரலாறு - புலவர் கா கோவிந்தன். மூலம்: Ref: PTS Ayyangar, History of the Tamils. Pages 301 - 304.
5.   தமிழ் இலக்கிய வரலாறு - பகுதி 6 - மா இராசமாணிக்கனார். மூலம்: Periplus of the Erithraean Sea - p 56.
6.   அகமும் புறமும் - பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்.
----------------------------------------------------------------

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்: