Pages

Saturday, 19 April 2014

கம்பனின் உவமைகள் -1 : பாற்கடலும் பூனையும்


கம்பனின் உவமைகளில் சில துளிகள் 1 – அறிமுகம்

- பாற்கடலும் பூனையும் -

-    அன்பு ஜெயா, சிட்னி


தமிழ் மொழியின் பல சிறப்புகளில் ஒன்று அச்சுரங்கத்தில் புதைந்து கிடக்கும் வளம். அவ்வளங்கள் ஓர் எழுத்தாளனின் சிந்தனைக்கு அள்ள அள்ளக் குறையாமல் கிடைக்கும் செல்வங்கள்.  அச்செல்வங்களைப் பெருமளவில் தான் பருகி நாமும் நம் வாழ்நாள் முழுவதும் பருகுவற்கு நமக்குத் தந்தவன் கம்பன் என்றால் அது மிகையாகாது. அந்தச் சுரங்கத்திலிருந்து அவன் வெளிக் கொணர்ந்த செல்வங்கள் கணக்கிலடங்கா. அவற்றின் சில துளிகளாக அவன் கையாண்ட ஒரு சில உவமைகளையும் ஒப்பீடுகளையும் இந்தப் பகுதியில் தொடராக வெளியிடும் சிறிய முயற்சி இது.

நேரம் கிடைக்கும்போது கம்பனின் பாடல்களில் நான் ரசித்த உவமைகளை ஒவ்வொன்றாகப் பகிர்ந்து கொள்கிறேன். கம்பன் கையாண்ட உவமைகள் அனைத்தையும் ஆராய்வதென்பது, இராமகாதை எழுதுவதுபற்றி அவையடக்கத்தில் கம்பனே கூறுவது போல, இயலாத காரியம். கம்பனுக்கே அப்படித் தோன்றினால், ஓரளவே தமிழ் அறிந்த எனக்கு எப்படி இருக்கும்? முயற்சிக்கிறேன்.

ஆமாம், அப்படி என்னதான் அவையடக்கத்தில் கம்பன் தன்னைப்பற்றி கூறினான்?!
ஒரு பூனை பாற்கடலைப் பார்த்து மிக்க மகிழ்ச்சி அடைந்தது. பூனைக்குத்தான் பால் என்றால் உயிராயிற்றே! பாற்கடலின் அருகே சென்று, அந்தக் கடலில் உள்ள பால் முழுவதையும் தன் நாக்கால் நக்கியே குடித்துவிடவேண்டும் என்று நினைத்ததாம். அது முடிகின்ற காரியமா? அதைத்தான் கம்பன் சொல்கிறான், எப்படி ஒரு பூனையால் பாற்கடல் முழுவதையும் குடித்துவிட முடியாதோ அதுபோல தன்னால் இராமயணம் முழுவதையும் பாடுதல் இயலாத செயல். மற்றவர்கள் ஏளனம் செய்வார்களோ என்றுகூடக் கருதாது இந்த இராமகாதையைப் பாடத் துணிந்திட்டேன் என்று கம்பன் இராமாயணத்தைப் பாற்கடலாகவும் தன்னை அப்பாற்கடலை நக்கியே குடித்திட எண்ணும் பூனையாகவும் சித்தரிக்கின்றான்.

கம்பனின் அந்தப் பாடல்:

ஓசை பெற்றுயர் பாற்கடல் உற்று, ஒரு
பூசை, முற்றவும் நக்குபு புக்கென,
ஆசை பற்றி அறையலுற்றேன் மற்று, இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதைஅரோ!
                        (பாயிரம்  - அவையடக்கம் - 4)

அதுபோல, கம்பன் காவியத்தில் அவன் கையாண்ட உவமைகள் அனைத்தையும் எடுத்துரைப்தென்பது பாற்கடலைப் பூனை நக்கியே குடித்து முடிக்க நினைப்பது போலத்தான். எனவே கம்பனின் உவமைகளுள் சில துளிகளை மட்டும் அவ்வப்போது இந்தத் தொடரில் பதிவு செய்கிறேன்.
(உவமைகள் தொடரும்)
11 comments:

 1. திரு. அன்பு ஜெயா,
  நல்வரவு. உவமையின்பம் அள்ளிக்குடிப்பதற்கில்லை. நாக்கினால் சுவைத்து, மெல்ல மெல்ல பருக வேண்டும் என்பதை கம்பர் உணர்த்தியதை, நீங்கள் புரியும் வகையில் சொல்லி இருக்கிறீர்கள்.

  வாழ்த்துக்கள்

  ReplyDelete
  Replies
  1. தங்கள் கருத்திற்கும், வாழ்த்திற்கும் நன்றி இ ஐயா. குட்டதற்கோர்ப் பிள்ளைப்பாண்டியன் இங்கில்லையே என்று குறை வராமல் தவறு நேரும்போது சுட்டிக் காட்டுங்கள்.
   அன்புடன்
   அன்பு ஜெயா

   Delete
 2. தொடக்கமே களைகட்டிவிட்டது…
  கம்பனின் அவையடக்கத்தில் தொடங்கி மெல்ல உங்களின் அவையடக்கத்தையும் காட்டி விட்டீர்களே… தொடருங்கள்.. ஆவலோடு தொடர்கிறோம்

  உங்கள் வலைப்பூவினை “கம்பராமாயணம்” முகநூல் குழுவிலும் பகிர்ந்துள்ளேன்.

  ReplyDelete
 3. மிக்க நன்றி சகோதரர் TNK அவர்களே. திறமாகத் தொடர்வதற்கு இறையருள் கூடும் என்று நம்புகின்றேன்.

  ReplyDelete
 4. என் தந்தை கம்பராமாயணம் தந்தார். அதை இப்போதுதான் படிக்க ஆரம்பித்துள்ளேன். தங்கள்ககருத்துகள் கம்பரை உணர உதவுகின்றது. நன்றி நண்பரே! (என் வயது 58)

  ReplyDelete
  Replies
  1. வணக்கம். தங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. வயதைப்பற்றி கவலை இருந்தால் அது தேவையில்லை. என் வயது எங்களைவிட அதிகம்தான். நான் இப்போதுதான் கம்பனைப் படிக்க ஆரம்பித்தேன். படிக்கப் படிக்கத்தான் அவன் தொடுத்த முத்துக்களின் அருமை தெரிகிறது. மீண்டும் வாருங்கள். நன்றி.

   Delete
 5. கம்பனை சுவையாகப் பகிர்ந்தமைக்கு நன்றிகள்..

  வலைச்சர அறிமுகத்திற்கு இனிய வாழ்த்துகள்..

  ReplyDelete
  Replies
  1. வணக்கம். தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி. மீண்டும் வருகை புரியுங்கள். சென்னையிலிருந்து திரும்பிய பின் தொடர்வேன்.

   Delete
 6. கம்பராமாயணம் பாடத்தின் துவக்கத்தில், எங்கள் தமிழாசிரியர் திரு.தங்கராசு அவர்கள் இந்தப்பாடலைக் கூறியது நினைவுக்கு வருகிறது. பதிவுகளுக்காக காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. வணக்கம். தங்கள் கருத்துக்கு நன்றி. மீண்டும் வாருங்கள்.

   Delete

உங்கள் கருத்துக்கள்: