Pages

Monday, 21 July 2025

அன்பு ஜெயாவின் மரபுப் பாக்கள் - தொகுதி 33

  மரபுப் பாக்கள் -  தொகுதி 33 

  

97)  மோனையாய் முந்திடு.

பா வகை: குறள்வெண் செந்துறை (அறு சீர்)

மா+மா+காய் என்று அரையடியில் வரும். அடுத்த அரையடியும் மா+மா+காய் என்று வரும். இப்படி இரண்டடியும் அமையும்.

(ஆறு சீர்கள் கொண்ட பாடல் என்பதால், முதல் சீருக்கும் நான்காம் சீருக்கும் பொழிப்பு மோனை அமையும். இரண்டடிக்கும் ஓரெதுகை அமையும். தளைப் பார்க்கத் தேவையில்லை.)

பானை நீரைக் குளிர்விக்கும்

   பாவிற் கோசையும் பயனளிக்கும்!

மோனைப் பாவினில் முதல்போல

   முதலாய் வந்திட உறுதியேற்பாய்!

 

முதன்மையும் பெற்றிட நீயென்றும்

  முயன்றே கடுமையாய் உழைத்திடுவாய்!

அதன்பின் வாழ்வில் முன்னேற்றம்

   அருகினில் வந்துனை அடைந்திடுமே!

 

துறவறம் தன்னில் புலனடக்கம்

   துவக்கம் என்றே முன்வருமே!

அறமும் செய்திட முன்வந்தால்

  அமைதியில் ஆழ்ந்தே நலம்பெறலாம்!

 

எங்கும் எதிலும் முன்வரவே

  என்றும் உறுதியாய் உழைத்தாலே

தங்கும் உன்னிடம் என்றைக்கும்

   தளர்விலா முதன்மைதான் உணர்ந்திடுவாய்!

-----------------------------  


98) 'யல்பாய் இரு.

பா வகை: குறள்வெண் செந்துறை (அறு சீர்)


பறவை ஒன்றாய்ப் பறந்திடுமே

    பாரில் நாமேன் பிரிந்துள்ளோம்?

உறவைப் பெரிதாய் எண்ணாமல்

   உழன்றே இன்பம் இழக்கின்றோம்!!

 

எறும்பும் இனத்தைப் பிரியாமல்

   இரையைத் தேடிச் சேர்த்திடுமே

பொறுமை நமக்கே இருந்தாலே

   போற்றி உறவைக் காத்திடலாம்!

 

ஒன்றாய் வாழ்தல் சிறப்பன்றோ

   உணர்வோம் கெடுத்தல் செல்வமென்றே!

இன்றே நிலையை மாற்றிடுவோம்

   இணைந்தே என்றும் வாழ்ந்திடுவோம்!

 

கற்றோம் கல்வி எத்தனையோ

   கற்றோ மில்லை ஒற்றுமையே!

பெற்ற பேறே உறவுகள்தான்

   பிரிவைத் தவிர்த்தே உயர்வோமே!

 

இயல்பே மாந்தர் ஒற்றுமைதான்

   இணைந்தே இனிமேல் வாழ்ந்திடுவோம்

இயல்பே யில்லா வேற்றுமையை

  இன்றே விலக்கி நலம்பெறுவோம்!

 

என்றும் உதவா வேற்றுமையை

   எடுத்தே எறிந்தும் உயர்ந்திடுவோம்!

இன்றே செய்தால் நம்வாழ்வும்

  என்றும் சிறப்பாய் விளங்கிடுமே!

-------------------------------------

99) யாவரையும் ஒன்றெனக் கொள்.

பா வகை: குறள்வெண் செந்துறை (அறு சீர்)

 

விலங்கும் இனத்துள் உயர்வுதாழ்வு

    விலக்கிப் பார்த்தல் இல்லைதானே

விலக்கிப் பார்த்தே மாந்தருமே

    வினைதான் ஆற்றி வாழ்வதேனோ?

 

மாந்தர் வாழ்வில் பிரிவினைதான்

    மாறும் நாளும் வந்திடுமோ

மாந்த இனம்தான் அமைதிபெற

    மாற வேண்டும் இந்நிலையே!

 

பிறப்பில் ஆண்பெண் வேறுபாடே

    பின்னர்க் குடியாய் மாறியதேன்?

இறப்பில் இதெல்லாம் உடன்வருமோ

    இணைந்தே வாழ்வோம் பிரிவின்றி!

 

மூன்றாம் பாலை உவந்தேற்க

    முயற்சி எடுத்தோம், வெற்றிபெற்றே

தோன்றாப் புகழும் ஈட்டிட்ட

    தூய குமுகம் நமதன்றோ!

 

பெற்ற புகழைப் பாதுகாப்போம்

   பெருமை அதில்தான் உள்ளதென்றே

உற்ற வாழ்வைப்  போற்றிடுவோம்

   உலகில் அமைதி நிலைபெறுமே!

-------------------------------------------


Tuesday, 22 April 2025

அன்பு ஜெயாவின் மரபுப் பாக்கள் - தொகுதி 32

  மரபுப் பாக்கள் -  தொகுதி 32 


94)  மேழியாய்த் தூவல் போற்று.  (மேழி – ஏர்)

பா வகை: குறள்வெண் செந்துறை (அளவடி)

 

உழவன் என்றும் உயிர்ப்புடன் இருந்தால்

உழவும் மாந்தர் உயிர்தனைக் காக்கும்!

 

எழுத்துல கிங்கே ஏற்றமாய் இருந்தால்

பழுதிலா வாழ்வும் பாரினில் உயரும்!

 

மேழியும் பொய்த்தால் மாந்தரின் வாழ்வும்

தாழி உடைந்தத் தன்மையைப் பெறுமே!

 

காற்று நுழையா களத்திலும் எழுத்தோ

போற்றவே நுழையும் போர்தான் புரிந்தே!

 

எழுத்துப் போர்தான் இவ்வுல கிலென்றும்

முழுமையாய் வெற்றியை மோதியும் பெறுமே!

 

எழுத்தினைப் போற்றுவாய் என்றும் அதனை

எழுதுவோர் போற்றுவாய் ஏற்றம் பெறவே!

---------------------------- 


95)  மைவிழியாள் துணைக்கொள்.

பா வகை: குறள்வெண் செந்துறை (அளவடி)

 

உன்னைப் பெற்றே உலகைக் காட்டித்

தன்னையும் காத்தத் தாயவள் பெண்ணே!

 

என்றும் அவளையும் எண்ணியே போற்றிடு

பொன்றும் துணையாய் பொலிபவள் தாயே!

 

உன்னையும் ஈன்றவள் உலகில் பெண்தான்

உன்னைத் துணையாய் உவந்ததும் பெண்ணே!

 

உன்னையும் ஏற்றே உன்வழித் தோன்றலும்

இன்பமாய் உலகில் ஈன்றவள் பெண்ணே!

 

பெண்ணின் துணையை பெரிதாய்ப் போற்றி

மண்ணில் வாழ்வோர் மாண்புடை யோரே!

 

எண்ணிப் பார்த்தால் இன்றுநம் வாழ்வில்

பெண்ணின் துணையது பெரிதும் வேண்டுமே!

------------------------------------


96)  மொழிவதைத் தமிழில் மொழி.

பா வகை: குறள்வெண் செந்துறை (அளவடி)


தாய்மொழி கற்றோர் தனித்தே விளங்கி

ஆய்வில் சிறப்பரே ஆன்றோர் முடிவிது!

 

தாய்மொழி நமது தமிழ்மொழி தன்னில்

ஆய்வுகள் செய்துமே ஆயிரம் உயர்ந்தனர்!

 

தமிழ்மொழி கற்றுத் தகுதியாய் விளங்குவோர்

தமிழக அரசில் தனியிடம் பெறுவரே!

 

ஏற்றம் பெற்றவர் எம்மொழி தன்னிலே

மாற்று மொழிகளை மாசறக் கற்பரே!

 

தாய்த்தமிழ் பயில்வதைத் தவிர்த்தே வாழ்பவர்

தாய்தனைப் பிரிந்தே தனிமையில் அலைபவர்!

 

தமிழ்மொழி அறிந்தும் தமிழில் மொழியார்

உமியுடன் அரிசியை உண்டு வாழ்வரோ?

-------------------------------------------------------

Saturday, 8 February 2025

அன்பு ஜெயாவின் மரபுப் பாக்கள் - தொகுதி 31

 மரபுப் பாக்கள் -  தொகுதி 31 


91) முளைத்துவிடு விதையாய்.

பா வகை: வஞ்சித் துறை (குறளடி கொண்ட நான்கடிப் பாடல்)

பா வகைக்கான வாய்பாடு: காய்சீர் + கனிச்சீர் பயின்று வருவது. நான்கடிக்கோர் எதுகை பெற்று வரும்.

 

வாழ்வதுமோ வளர்வதுவுமோ

தாழ்வதுமோ தளர்வதுவுமோ,

ஆழ்ந்துநோக்கின் அதுவுன்கையில்,

ஆழ்ந்துறங்கும் விதைபோலவே!

 

இனிவருமக் காலங்களும்

இனிதாக மலர்ந்திடவுமே

பனித்துளியைத் தாங்கிவாழ்ந்திடும்

நுனிப்புல்போல் காத்திருந்திடு!

 

மழைத்துளிகள் முகம்காட்டிடும்

பிழைத்தெழுவாய் புதுமூச்சுடன்

தழைத்தோங்கும் உன்வாழ்வுமே,

உழைப்பாலே நீஉயர்ந்திடு!

 

உயர்வாமிப் புவிதன்னிலே

அயர்ச்சியின்றி உழைப்போரினால்

உயர்ந்திடும்தான் உலகவாழ்வுமே

உயர்ந்திடுவோம் நாமென்றுமே!

------------------------------------------------ 


92) மூப்பைக் கண்டஞ்சேல்.

பா வகை: வஞ்சித் துறை (குறளடி கொண்ட நான்கடிப் பாடல்)

 

முதுமைகண்டே அஞ்சிடாதிரு

முதுமையொன்றே முடிவாகுமே

புதுமையிதில் ஒன்றுமில்லையே!

புதுத்திறமை வளர்த்துவாழ்ந்திடு!

 

புதுமைக்கோ வறுமையில்லையே

இதுபுதுமை இன்றுமட்டுமே

அதுவுமிங்கே பழமையாகுமே

இதுபுரிந்தால் இன்னலில்லையே!

 

கடந்தகாலம் திரும்பாதினி

இடமளிப்பாய் நண்பருடனே

நடனமுடன் நடைபயின்றிட,

உடல்நலமும் உயர்வுபெறுமே!

 

புத்துணர்வு பெற்றுலகிலே

முத்தான புதுக்கலைகளில்

பத்தும்தான் கற்றுநீயுமே

வித்திடுவாய் வலிமையோங்கவே!

 --------------------------------------------------


93)  மென்சொல் மேன்மை.

பா வகை: வஞ்சித் துறை (குறளடி கொண்ட நான்கடிப் பாடல்)

 

வன்சொற்கள் வெல்லலாம்சில

தன்மையற்ற செயல்கள்தனில்,

மென்சொற்கள் எக்காலமும்

வென்றிங்கே முதன்மைபெறுமே!

 

உண்மையிதை உணர்ந்தாலுமே

எண்ணமதில் எளிமைவித்திடும்

மண்மீதில் மாண்புயர்ந்திடும்

உண்மையில்நம் வாழ்வுமுயரும்!

 

மென்சொற்கள் மேன்மைதந்திடும்

என்றுமுன்னை ஏற்றிவைத்திடும்

மென்சொல்லின் தன்மையிதனை

உன்மனத்தில் ஏற்றிவைத்திடு!

 

வன்சொற்கள் தவிர்த்துநீயுமே

மென்சொற்கள் உதிர்த்துவாழ்ந்திடு

உன்வாழ்வும் உயர்வுபெற்றிடும்

உன்னுறவும் விரிவடையுமே!

--------------------------------------


Tuesday, 28 January 2025

அன்பு ஜெயாவின் மரபுப் பாக்கள் - தொகுதி 30

  மரபுப் பாக்கள் -  தொகுதி 30 


88)  மானமே பெரிது.

பா வகை: வஞ்சித் தாழிசை


(வஞ்சித் தாழிசை -  குறளடிக் கொண்டு ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வரும் பாடல்.)


உன்பெருமை உணராமல்

உன்னையுமே ஒதுக்குபவர்

தன்னைநீயும் தள்ளிவைத்தே

தன்மானம் தனைக்காப்பாய்!

 

என்னவிலை ஈன்றேனும்

உன்மானம் உயர்வாக

என்றும்நீ எண்ணியுன்றன்

தன்மானம் தாங்கிடுவாய்!

 

உன்னையிங்கே உவப்போரை

உன்நினைவும் உள்ளவரை

என்றும்நீ ஏற்றிடுவாய்

உன்நெஞ்சில் உயர்வாக!

--------------------------------------------------------------------------------------------

89) மிதிபட்டு வாழேல்.

பா வகை: வஞ்சித் தாழிசை


கல்விதனைக் கற்றவர்க்கோ

கல்விக்காய் ஏற்றவேலை

பல்லோர்க்கும் கிடைக்காமல்

அல்லலுமே படுகின்றார்!

 

இந்நிலைதான் மாறுவதும்

எந்நாளோ என்றேங்கி

அந்நாளை எதிர்நோக்கி

எந்நாளும் காத்திருப்பர்!

 

பொன்னாளும் பூத்திடவே

இன்றாளும் அரசுமுடன்

நன்றேசெய் தாலிளைஞர்

தன்மானம் காத்துவாழ்வர்!

----------------------------------------------------------------------------------------------

90) மீள்வாய்த் துயர்களைந்து.

பா வகை: வஞ்சித் தாழிசை


வாழ்க்கையதே முள்படுக்கை

வாழ்ந்ததிலே வெற்றியீட்டு!

தாழ்ந்தென்றும் வாழ்வதிலே

தாழ்வுதானே வந்துசேரும்!

 

தாழ்வினையே தவிர்த்திடுவாய்

வாழ்க்கையினில் உறுதிகொள்வாய்

வாழ்வினிலே வெற்றியுமே

வாழ்நாளில் வந்தணையும்!

 

மனமிருந்தால் போரிடவே

உனக்கிங்கே வழிபிறக்கும்

உனக்குள்ளத் தடைநீங்கும்

மனக்கண்ணில் விடுதலைகாண்!

--------------------------------------------------

Thursday, 16 January 2025

அன்பு ஜெயாவின் மரபுப் பாக்கள் - தொகுதி 29

 மரபுப் பாக்கள் -  தொகுதி 29 


85)  பொறுமையைக் கைவிடேல்.

பா வகை: வஞ்சிப் பா (சிந்தடி).

குறைந்தது ஏழடிகள் கொண்ட சிந்தடி வஞ்சிப் பாஒரு தனிச்சொல்மூன்றடி ஆசிரியச் சுரிதகம் கொண்ட பாடல்.

சிந்தடியில்: கனிச்சீர் + கனிச்சீர் + கனிச்சீர்.

 

சிந்தடி வஞ்சிப்பா:

அமைதியெங்குமே நிறைந்தேவையம் அன்பொன்றுதான்

நமையாண்டிடும் வலிமையென்னுமோர் நாள்வரட்டுமே!

சுமையாகவே சினமென்பதை துரத்திடுவமே!

எமையென்றுமே பொறுமைமட்டுமே இயக்கட்டுமே!

எந்தவேளையும் குறைகூறுதல் எதிர்த்திடுவமே!

அந்தகாலமே இங்குமலரும் அமைதிமட்டுமே!

தவறென்பதும் சிலவேளையில் தவிர்த்தலில்லையே!

மறந்தேயதைப் பொறுத்தருள்வது மாந்தநெஞ்சமே!

 

தனிச்சொல்:  அதனால்

 

சுரிதகம்:

சினமதை என்றுமே சிறையில் வைத்தே

மனமதைக் காப்போம் மண்ணிலே,

மனத்தினில் அன்பையே மையமாய் வைத்துமே!

 

---------------------------------------

 86) போர்ச்செய் உரிமைக்காக!

பா வகை: வஞ்சிப் பா (சிந்தடி).

பா வகைக்கான் வாய்ப்பாடு:

குறைந்தது ஏழடிகள் கொண்ட சிந்தடி வஞ்சிப் பா, ஒரு தனிச்சொல், மூன்றடி ஆசிரியச் சுரிதகம் கொண்ட பாடல்.

 

சிந்தடி வஞ்சிப்பா:

உரிமையென்பதே ஒவ்வொருவரின் உடன்பிறந்ததே!

உரிமையதுவும் உன்தாயவள் உனக்களித்ததே!

பிறந்தநாளிலே பெற்றவுரிமைப் பெருகவாழ்ந்திடு,

மறவனாகவே உரிமைகாத்திடு மறந்திடாமலே!

வங்கக்கடல் அலைக்குரிமையும் வழங்கலாகுமோ?!

திங்கள்தரும் ஒளிதனதெனத் திரியலாகுமோ?

வாக்களித்திடும் உரிமைதன்னையும் வாங்கிநீயுமே

வாக்களித்திடத் தயங்கினாலுனை வாழ்த்தலாகுமோ?

 

தனிச்சொல்:

எனவே,

 

சுரிதகம்:

உரிமை தன்னையே உதறி விடாமலே

பெரிதாய் அதனைப் பேணுவாய்!

உரிமை, உரிமை, ஒலிப்பாய் ஓங்கியே!

--------------------------------

87)  மனத்தை விரித்துவை.

(குறைந்தது ஏழடிகள் கொண்ட சிந்தடி வஞ்சிப் பாஒரு தனிச்சொல்மூன்றடி ஆசிரியச் சுரிதகம் கொண்ட பாடல்.)

பா வகை: வஞ்சிப் பா (சிந்தடி).

 

சிந்தடி:

எல்லோர்க்குமே இடங்கொடுத்திடும் இயற்கையதுவும்

பொல்லாதயிம் மாந்தனுமதைப் போற்றவேண்டுமே!

இல்லாதவர் நிலைகண்டவன் இரங்கவேண்டுமே,

எல்லோர்க்குமே உதவிநல்கிட  இசையவேண்டுமே!

உள்ளவாழ்வுதான் சிலகாலமே, உவந்துநீயுமே

உள்ளமதிலே கனிவுபொங்கிட உதவிநல்கிடு!

மெல்லயாவரும் உலகமதிலே மேன்மைபெற்றுதான்

வல்லமையுடன் ஏற்றம்பெற வாழ்ந்திடுவமே!

 

தனிச்சொல்: அதற்கு

 

சுரிதகம்:

மனத்தை விரித்திடு, மாண்பைப் பெருக்கிடு,

கனவைப் போன்ற காட்சியும்

நனவாய் மாறிடும் நல்லவை பெருகுமே!

----------------------------------------------------------------