Pages

Monday 17 April 2023


  சங்க காலத்தில் நீர்நிலம்பொருள் வளம் -  2 (தொடர்ச்சி)

(தமிழணங்கு இதழ் ஜனவரி 2023-ல் வெளியிடப்பட்டது)

நில வளம்

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் பாரியின் மகளிரை மணக்க விரும்பி அவனுடன் போரிட்டு தோல்வி அடைந்தனார்.  அதைக் கண்ட புலவர் கபிலர் அவர்களிடம் பாரியுடைய பறம்பு நாட்டின் வளத்தை, சிறப்பை விவரிக்கும் முகமாக, .“நீங்கள் மூன்று பேரும் கூடி பறம்பு நாட்டை முற்றுகை இட்டாலும், அவனை வெல்ல முடியாது. ஏனென்றால், பறம்பு நாடு வளம் நிறைந்த நாடு. உழவர்கள் நிலத்தை உழாமல் நிறுத்தி வைத்திருந்தாலும் பல வித உணவுப் பொருள்கள் நிறைந்த நாடு. அங்கே, சிறிய இலைகளை உடைய மூங்கிலில் நெல் விளையும், இனிய சுளைகளையுடைய பலா பழுத்துத் மணம் வீசிக் கொண்டிருக்கும், வளமையான கொடிகளை உடைய வள்ளிக்கிழங்கு அளவிற்கதிகமாக விளைந்திருக்கும், முற்றிய தேன் நிறைந்து கிடக்கும் நாடு பறம்பு நாடு. அதனால், நீங்கள் மூவரும் அவன் நாட்டை முற்றுகை இட்டாலும், அவனுடைய மக்கள் எந்தப் பொருளுக்காவும் வெளியே வர வேண்டிய அவசியமில்லை”, என்பதை,

அளிதோ தானே, பாரியது பறம்பே;

நளிகொள் முரசின் மூவிரும் முற்றினும்

உழவர் உழாதன நான்குபயன் உடைத்தே;

ஒன்றே, சிறியிலை வெதிரின் நெல்விளை யும்மே;     

இரண்டே, தீஞ்சுளைப் பலவின் பழம்ஊழ்க் கும்மே;     5

மூன்றே, கொழுங்கொடி வள்ளிக் கிழங்கு வீழ்க்கும்மே;

நான்கே, அணிநிற ஒரி பாய்தலின் மீதுஅழிந்து

திணிநெடுங் குன்றம் தேன்சொரி யும்மே.

வான்கண் அற்றுஅவன் மலையே;                        9

                     - புறநானூறு –  109:1-9.

என்ற பாடலில் கபிலர் எடுத்தரைக்கின்றார.

நெடுநல்வாடையில்,

அம் கண் அகல் வயல் ஆர் பெயல் கலித்த

வண் தோட்டு நெல்லின் வருகதிர் வணங்க

- நெடுநல்வாடை 21-22.

என்று அழகிய வயல் வெளியில் மழை அதிகமாகப் பெய்ததனால் வளமாக வளர்ந்த நெற்பயிரின் கதிர்கள் சாய்ந்து, தலைவணங்குவது போல் கிடந்தனவாம்.

நெற்பயிர்கள் மட்டுமா.......

முழு முதல் கமுகின் மணி உறழ் எருத்தின்

கொழு மடல் அவிழ்ந்த குழூஉக்கொள் பெருங்குலை,

- நெடுநல்வாடை 23-24.

அங்குள்ள கமுகு மரங்களில் செழித்து வளர்ந்துள்ள மடல் பகுதியில் இருந்து பெரிய காய்களை உடைய குலைகள் தொங்குகின்றன.

கமுகு மட்டுமா.....

நுண்நீர் தெவிள வீங்கிப் புடை திரண்டு

தெண் நீர்ப் பசுங்காய் சேறு கொள முற்ற

 - நெடுநல்வாடை 25-26.

அங்கு, நீர் திரண்டு பருத்த காய்களை உடைய தென்னை மரங்களும் உள்ளன, என்று நாட்டின் வளத்தை நக்கீரர் எடுத்துக் கூறுகின்றார்.

அதைப்போலவே, உருத்திரங்கண்ணனார், குலைக்காய்களுடன் உள்ள தென்னையும், குலைவாழைத் தாருடைய வாழையும், பசும் காயுடன் உள்ள பாக்கு மரமும், வாசமிகு மஞ்சளும், குலைதொங்கும் பனையும், சேம்பும், இஞ்சியும் வீடுகளின் முன்புறத்தில் விளைந்திருந்ததை,

கோள் தெங்கின் குலைவாழைக் காய்க்கமுகின் கமழ்மஞ்சள்

இனமாவின் அணர்ப்பெண்ணை முதற்சேம்பின் முளைஇஞ்சி

அகல்நகர் வியன்முற்றத்து.......

- பட்டினப்பாலை, 16-20.

என்று, நாட்டில் ஒவ்வொரு வீட்டின் வளம்பற்றி கூறுகின்றார்.

நக்கீரர், அழகிய மணம் மிக்க மலர்கள் பூத்துக் குலுங்கும் சோலைகளும் உள்ளன. குருத்துகளில் இருந்து சொட்டுகின்ற பனித்துளிகள், குளிரின் மிகுதியால் உறைந்து, குருத்துகளில் தொங்கிக் கொண்டிருக்கின்ற அழகிய காட்சிகளை உடைய ஊர் என்பதை,

நளிகொள் சிமைய விரவுமலர் வியன்கா

குளிர்கொள் சினைய குரூஉத் துளி தூங்க -----

  - நெடுநல்வாடை 27-28.

என்றும், ஆறு ஓடுவது போன்ற நீண்டு கிடக்கும் தெருக்களை உடைய ஊர் அந்த மூதூர்’- என்பதை

---------- மல்லல் மூதூர்

ஆறு கடந்தன்ன அகல் நெடும் தெருவில் ------

  - நெடுநல்வாடை 29-30.

என்றும் அந்த ஊரின் வளத்தைச் சித்தரிக்கிறார் நக்கீரர்.

ஊரின் செழிப்பைப் போற்றிய உருத்தரங்கண்ணனாரும், பிரகாசமான நெற்றியுடன், அழகிய பார்வையையும், பொன் ஆபரணங்களையும் அணிந்துள்ள பெண்கள், வாசலில் உலர்த்துகின்ற நெல்மணிகளைத் தின்ன வரும் கோழிகளைத் தங்கள் காதுகளில் அணிந்துள்ள பொன்னாலான மகரக் குழையை எடுத்து அந்தக் கோழிகள் மீது வீசி அவற்றை ஓட்டுவார்களாம், அதை,

சுடர்நுதல் மடநோக்கின்

நேரிழை மகளிர் உணங்குணாக் கவரும்

கோழி எறிந்த கொடுங்கால் கனங்குழை,

-    பட்டினப்பாலை, 21-23.

என்றும், அப்படி அந்தப் பெண்கள் தூக்கி எறிந்த மகரக் குழைகள் அங்கேயே கிடக்கின்றன. அந்த வீட்டின் முன் மூன்று சக்கரமுள்ள நடைவண்டியை சிறுவர்கள் தேர் போல உருட்டி விளையாடுவார்கள். அப்போது அந்த மகரக்குழைகள் அந்த வண்டிச் சக்கரங்களில் சிக்கி அந்த வண்டி ஓடாமல் தடை செய்யும். அப்படிப்பட்ட அந்தத் தேரின் சக்கரங்களை விலக்குகின்றப் பகையைத் தவிர அந்த ஊரில் விலங்குகளின் பகையோ, மற்ற கலங்க வைக்கும் பகையோ இல்லை என்பதை

------------ கொடுங்கால் கனங்குழை

பொங்காற் புதல்வர் புரவிஇன்று உருட்டும்

முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும்

பொற்காற் புதல்வர் புரவிஇன்று உருட்டும்

முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும்

விலங்குபகை அல்லது கலங்குபகை அறியா

கொழும்பல்குடி ------------------

 - பட்டினப்பாலை, 23-28.

என்றும்,  அந்தக் கழனிகளில் எப்பொழுதும் விளைச்சல் இருந்துகொண்டே இருக்கும். அந்தக் கரும்பினை காய்ச்சும் கரும்பு ஆலைகளில் இருந்து வாசனை வீசிக்கொண்டு இருக்கும் என்பதை.

விளைவு அறா வியன் கழனிக்

கார்க்கரும்பின் கமழ் ஆலை --------

 - பட்டினப்பாலை, 8-9.

என்றும் அந்த ஊரின் சிறப்பை மேலும் விவரிக்கின்றார் ஆசிரியர்.

                       
                         (தொடரும் - அடுத்து  பொருள் வளம்


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்: