Pages

Wednesday 16 October 2024

அன்பு ஜெயாவின் மரபுப் பாக்கள்

 மரபுப் பாக்கள் -  தொகுதி 6


16) சற்றும் அறமும் தவறேல்.

 பா வகை: கழி நெடிலடி ஆசிரிய அறுசீர் மண்டிலம் - மா+மா+காய்.


நாளை நாளை என்றிடாமல்

       நல்ல அறம்தான் செய்திடுவாய்;

நாளை என்றே நாள்கடத்தும்

       நலிவு உள்ளம் தகர்த்திடுவாய்;

நாளை நம்கை தனிலில்லை

       நன்றா யிதையும் உணர்வாயே;

நாளை விடிந்தால் நல்வினையால்

       நன்றா யறமும் தொடர்வாயே!

 

----------------------------------------------------------------------------

 

17) ஞயத்தைப் பேச்சில் குறையேல்.

 பா வகை: கழி நெடிலடி ஆசிரிய அறுசீர் மண்டிலம் - மா+மா+காய்

 

உருவு கண்டே எள்ளாமை

உன்பால் வளர்த்தே உயர்ந்திடுவாய்;

அருமை யுள்ளம் கொண்டுநீயும்

அரவ ணைப்பாய் அனைவரையும்,

ஒருநாள் அவரும் உறுதுணையாய்

ஓடி வந்தே உதவிடுவர்;

பெருமை பெற்றே இவ்வாழ்வில்

பேரன் புடனே வாழ்ந்திடலாம்!

 

-----------------------------------------------------------------------------------

 

18) 'டங்கமறு  தருக்கிற்கு (திமிருக்கு).

 பா வகை: கழி நெடிலடி ஆசிரிய அறுசீர் மண்டிலம். ( மா+மா+காய்)

 

அன்பு பொங்கத் துணைநின்றால்

       அடியும் பணிந்து நடந்திடுவோம்;

அன்பை மறந்தே ஆட்சிசெய்தால்

       அறத்தைக் காக்க அடக்கிடுவோம்;

என்றும் மாந்த நேயமுடன்

எழிலாய் நாமும் வாழ்ந்திடுவோம்;

இன்றும் என்றும் தருக்கின்றி

       இணைந்தே வாழ்வில் உயர்ந்திடுவோம்!  (1)

 

அன்பால் நாமும் கூடுகட்டி

அணைந்தே வாழ வாருங்கள்;

       என்றும் அன்பின் பிடிதன்னில்

             எழிலாய் நாமும் வாழலாமே!

இன்பம் அங்கே இருப்பதைத்தான்

இணைந்தே என்றும் காணலாமே!

       நன்றே கூறி நானழைத்தேன்

             நண்பர் எல்லாம் வரலாமே! (2)

------------------------------------------------------------------------


அன்பு ஜெயாவின் மரபுப் பாக்கள்

  மரபுப் பாக்கள் -  தொகுதி 5


13) எஃகாய் ஈரக்குலை கொள்.         

பா வகை: வெளி மண்டிலம்.      

காலமுந் தானாய்க் கனிவதே இல்லை – காத்திராதே!

காலமு மெவர்க்கும் களமமைப் பதில்லை – காத்திராதே!

பாலமு மமைத்துநீ பார்தனில் போரிடு – காத்திராதே!

ஞாலமு முனக்கினி ஞாயிறா யொளிர்ந்திடும் – காத்திராதே!

(ஈரக்குலை - இதயம்)

---------------------------------


14) கண்டதும் அன்பு (காதல்) பொய்.

பா வகை: வெளி மண்டிலம்.

கண்ணுக் கழகாய்க் காண்பதும் பொய்தான் – உணர்வாயே!

கண்வுட னன்புமோ கனவொன் றிலேதான் – உணர்வாயே!

மண்ணுல கினிலே மாறுமே காட்சிகள் – உணர்வாயே!

திண்ணமாய் நீயுமே தெளிந்திட வேண்டும் – உணர்வாயே!

------------------------------------


15) 'போல நளினம் கொள்.

 பா வகை: வெளி மண்டிலம்.

 உன்கை விரல்களே ஒன்றுபோல் இல்லையே! – உணர்வாயே!

உன்னைச் சூழ்ந்தவர் ஒன்றுபோல் இருப்பரோ? – உணர்வாயே!

என்றுமே அனைவரின் எண்ணமும் வேறுதான் – உணர்வாயே!

அன்னவர் குணப்படி அணைவதே நலம்தரும் – உணர்வாயே!


----------------------------------------- 

Tuesday 15 October 2024

அன்பு ஜெயாவின் மரபுப் பாக்கள்

 மரபுப் பாக்கள் -  தொகுதி 4


10) ஒப்புவமை யோடு வாழ்.

பா வகை:  அடிமறி மண்டில ஆசிரியப்பா.

 

அறம்தான் பெருகிட அனைவரும் உயர்வரே!

திறம்தான் பெருகிடத் திட்டமும் பெருகுமே!

தன்னை நம்புவோர் தரைதனி லாள்வரே!

உன்னை உயர்த்திடே உலகையும் உயர்த்தவே!

கால முனக்காய்க் காத்திருப் பதில்லையே!

பாலமு மைத்திடு பாரினை யுயர்த்தவே!


11) ஓதலின் உண்மை உணர்.

 

பா வகை: அடிமறி மண்டில ஆசிரியப்பா.

 

மெய்ப்பொருள் காண்பதே மெய்யறி வாகுமே!

செய்யும் வினைகளும் செம்மையாய்ச் செய்கவே!

வள்ளுவ ருரைத்தார் வழியினைக் காட்டியே!

தெள்ளத் தெளிவாய்த் தெரிந்துநாம் நடப்பமே!

உன்னறி வுனக்குமே உறுதியாய்க் கூறுமே!

உன்னுள முரைப்பதே உண்மையு மாகுமே!


12) ஒளவையாய்ப் பெண் காண்.

 

பா வகை: அடிமறி மண்டில ஆசிரியப்பா.

 

பேதையாய்த் தவழ்ந்தநீ பேரிளம் பெண்ணே!

பாதையும் செப்பமாய்ப் பார்த்தளித் தவளே!

குடும்பம் சிறக்கவேக் குன்றென நின்யே!

விடு(ம்)மூச் செல்லாம் விளையும் தளிர்க்கே!

தன்னை வருத்தியும் தளிரைக் காத்தியே!

அன்புடன் உன்னையே அம்மா என்பனே!


--------------------------------------------------------------------


Thursday 10 October 2024

அன்பு ஜெயாவின் மரபுப் பாக்கள்

ரபுப் பாக்கள் - தொகுதி 3


7) எளிமை நேர்மை 

இணைக்குறள் ஆசிரியப்பா


காலமும் வேளையும் காத்திரா தென்பதை

ஞாலமும் நமக்குச்

சாலவேக் காட்டுதே

ஞாலந் தன்னிலே ஞாயிறாய்ப்,

பாலமாய், நேர்மையாயப் பாங்குடன்

காலமும் எளிமையாய்க் காப்புடன் வாழ்வமே!


8) ஏற்றங் காண உழை

இணைக்குறள் ஆசிரியப்பா

தோற்றம் மட்டுமே தோழமைத் தருமோ

ஏற்றம் பெற்றிட

போற்றும் உழைப்பினை

ஏற்றமாய் அளித்திடில் ஏற்பரே,

வேற்று மாந்தரும் வேண்டுவர்

ஏற்றமோ டுன்னையும் என்றும் விரும்பியே!


9) ஐயம் அகற்றல் உயர்வு

இணைக்குறள் ஆசிரியப்பா


உன்னை யறிவோர் உன்குண முமறிவர்

தன்னையு மறிவர்

பின்னும் ஐயமேன்?

உன்னுளந் திறந்தே உரைத்திடில்

என்றுமே ஐயமும் எழாதினிக்

கன்னலாய் உறவும் கனிந்துத் தொடருமே!


-----------------------------------------

அன்பு ஜெயாவின் மரபுப் பாக்கள்

 மரபுப் பாக்கள் - தொகுதி 2


04) ஈடில்லாத் தொண்டு செய்

நேரிசை ஆசிரியப்பா


நாளும் தொண்டு நாமும் செய்திட

நாளும் கோளும் நம்மைக் காக்கும்,

ஆளு மாட்சியின் ஆணவம்

நாளும் தருமே நமக்குத் தீமையே!


05) உள்ளதில் பிறர்க்கும் கொடு

நேரிசை ஆசிரியப்பா

பெற்ற செல்வம் பகிர்ந்த ளித்தலும்

கற்ற கல்வி கனிவுட னளித்தலும்

மற்றவர் வாழ்வும் மகிழ்வுற

உற்ற துணையாய் ஓங்கி நிற்குமே!


06) ஊற்றென ஓடு

நேரிசை ஆசிரியப்பா


உழைக்கா தோரிடம் உட்கார்ந் திருத்தல்,

மழைக்கு மஞ்சி மனையில் அடங்கல்,

பிழைப்பிற் காகுமோ? பின்னர்!

உழைக்க முயன்றால் உலகமுன் கையிலே!


-------------------------------------

அன்பு ஜெயாவின் மரபுப் பாக்கள்

மரபுப் பாக்கள் -  தொகுதி 1 


நிலைமண்டில ஆசிரியப்பா

“கல்லால் நிழலில் கனிவோ டமர்ந்து

நல்லார் நால்வர்க் குஞான போதச்

சொல்லாம் அமுதைச் சிறப்போ டளித்தாய்

எல்லா உயிரும் ஏற்றம் பெறவே!”

                         --------------------


01. அன்பே வெல்லும் கருவி.

நிலைமண்டில ஆசிரியப்பா.

பார்க்கும் இடமெலாம் பாழும் போரெனில்

ஆர்த்தெழும் இளையோர் ஆருயிர்ப் போகுமே!

பாரெலாம் சிறந்திடப் பற்றுவோம் அமைதியைப்

போரெனும் சொல்லே போயழி யட்டுமே!


 02. ஆற்றலை வீணடிக் காதே!

நிலைமண்டில ஆசிரியப்பா.

உன்னைநீ யறிவாய், உன்னுள் புதைந்தே

உன்னைக் காக்கும் உன்திறன் நீயுணர்;

நன்றாய் வெற்றியை நாடொறும் தந்திடும்,

நன்றே போற்றுவர் நண்பருந் தானே!


03.  இல்லற வாழ்வைச் சுவை.

நிலைமண்டில ஆசிரியப்பா.

இல்லறம் என்பது இன்பம் தந்திடும்

நல்லறம் என்பதோ நம்மை உயர்த்திடும்

இல்லறம் பேணுவோம் இனிது வாழவே,

நல்லறம் பேணிட நற்கதி தானே!

-----------------------------