தமிழிலக்கியத்தில் மதுரை
--- அன்பு ஜெயா
(மதுரை மீனாட்சி கல்லூரி, 25, 26 பிப்ரவரி 2016-ல் நடத்திய 'இலக்கியப்
பதிவுகளில் மதுரை" பன்னாட்டுக் கருத்தரங்கு மலரில் வெளியிடப்பட்ட கட்டுரை)
முன்னுரை
நான்மாடக் கூடலாம் மதுரை மாநகருக்கும் தமிழிலக்கியத்துக்கும்
நெருங்கிய தொடர்பு இருந்து வந்திருக்கிறது. சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்த நகர்
மதுரை என்பது நாம் அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமின்றி, தமிழிலக்கியத்திற்குப் பல பாடல்களை இயற்றி தமிழ்ச்சேவை புரிந்த
புலவர்கள் மதுரை அளக்கர் ஞாழார் மகனார் மள்ளனார், மதுரைக் கணக்காயனார், மதுரைக் காமக்கண்ணி நப்பாலத்தானர், மதுரைக் கூத்தனார், மதுரை வேளாசன் போன்று ஏறத்தாழ
35 புலவர்கள் தங்கள் பெயரில் மதுரையைக் கொண்டுள்ளனர். அதனால், இவர்களில் பெரும்பாலோரைத்
தமிழுலகுக்குத் தந்த பெருமை மதுரையைச் சாரும் என்று எண்ணத் தோன்றுகிறது. மதுரை
என்றால் முதலில் நினைவுக்கு வருவது அருள்மிகு மீனாட்சி அம்மனும் வைகை நதியும்தான்.
அந்தச் சிறப்பினையும், அதுபோன்று மதுரையின் பன்முகச் சிறப்புகளைத் தன்னுள்ளே தாங்கி
நிற்கும் பாடல்கள் பல பண்டை இலக்கியங்களில் காணப்படுகின்றன. அவற்றை அனைத்தையும் எடுத்துரைப்பதென்பது,
கம்பன் கூறுவதுபோல், பாற்கடலினை தன் நாவினால் நக்கியே
குடித்திட எண்ணிய பூனையின் நிலையை ஒக்கும். அதனால்,
மதுரையின் சிறப்பைத் தன்னுள்ளே அடக்கிவைத்திருக்கும் சில இலக்கியப் பதிவுகளை மட்டும்
உற்றுநோக்குவோம்.
மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ்
மதுரையம்பதியில் உள்ள
வயல்களில் மீன்கள் துள்ளி விளையாடும் செழிப்பு பற்றியும், மதுரை தமிழ் வளர்த்தப்
பெருமை பற்றியும் உரைக்கும் பாடல்:
முயல்பாய்
மதிக்குழவி தவழ்சூல் அடிப்பலவின்
.....................................................................................................
கயல்பாய்
குரம்புஅணை பெரும்பணைத் தமிழ்மதுரை
கற்பக
அடவியில் கடம்பாடு அடவிப்பொலி
கயல்கண்நா
யகிவருகவே.
(மீனாட்சியம்மை
பிள்ளைத்தமிழ், வருகைப் பருவம், 55)
பொருள்: கயல்மீன்கள்
பாய்கின்ற, வரப்புகள் மிகுந்த பெரிய வயல்களை உடைய தமிழ் வளர்த்த மதுரையின் காவலனான
பாண்டியன் மகளே வருக. மதுரையில்
விளங்குகின்ற மீனாட்சி அம்மையே வருக.
பரிபாடல், பரிபாடற்றிரட்டு
மதுரை மாநகரை உலகனைத்துடனும்
ஒப்பிட்டு அதன் சிறப்பைக் கூறும் ஒரு பாடல்:
உலகம்
ஒருநிறையாத் தானோர் நிறையாப்
புலவர்
புலக்கோலால் தூக்க-உலகனைத்தும்
தான்வாட
வாடாத தன்மைத்தே தென்னவன்
நான்மாடக்
கூடல் நகர். (பரிபாடற்றிரட்டு ஆறாம் பாடல்)
பொருள்: உலகனைத்தையும்
ஒரு தட்டிலேயும் மதுரையை ஒரு தட்டிலேயும் வைத்து, புலவர்கள் அறிவென்னும் தராசில்
வைத்துப் பார்த்தனர். அதில், உலகம் அனைத்தையும் வைத்திருந்த தட்டுதான் எடை
குறைவானதால் மேலே சென்றது. அப்படிப்பட்ட
பெருமை உடையது மதுரை மாநகரம்.
மதுரை மாநகரின் புகழ்
என்றும் நீடித்து நிற்கும் என்று கூறும் பாடல்:
தண்தமிழ்
வேலித் தமிழ்நாட் டகமெல்லாம்
நின்று
நிலைஇப் புகழ் பூத்தல் அல்லது
குன்றுதல்
உண்டோ மதுரை கொடித்தேரான்
குன்ற
முண்டாகும் அளவு.
(பரிபாடற்றிரட்டு எட்டாம் பாடல்)
பொருள்: தமிழ்மொழியைக்
காக்கும் வேலியாக உள்ள தமிழ்நாட்டின் இடமெல்லாம் தன் புகழ் நிலைக்குமாறு விளங்கிய பாண்டியனுக்குரிய
திருப்பரங்குன்றம் உள்ள காலம் வரை மதுரையின் புகழ் குறையாது.
வைகையாற்றினை
மதுரைக் குடிமக்கள் எவ்வளவு விரும்பி வரவேற்கின்றனர் என்பதை அறிவுறுத்தும் ஒரு
பாடல்:
வான்
ஆர் எழிலி மழை வளம் நந்தத்,
தேன்
ஆர் சிமைய மலையின் இழிதந்து,
நான்மாடக்
கூடல் எதிர்கொள்ள, ........
(பரிபாடற்றிரட்டு முதற்பாடல் திருமால், 1-3)
பொருள்:
மேகங்கள் மழைபொழிய, அந்த மழை நீரானது மலைகளிலிருந்து இறங்கி வருகையில் மதுரை மாநகர
மக்கள் எதிர்கொள்கின்றனர் என்று மதுரையைக் குறிப்பிடும் பாடல்.
வைகையாற்றுப்
புதுப்புனலின் அழகைச் சித்தரிக்கும் ஒரு பாடல்:
மாநிலம்
தோன்றாமை மலிபெயல் தலைஇ
ஏமநீர்
எழில்வானம் இகுத்தரும் பொழுதினான்
நாகநீள்
மணிவரை நறுமலர் பலவிரைஇக்
காமரு
வையை கடுகின்றே கூடல்;.......
(பரிபாடற்றிரட்டு
இரண்டாம் பாடல் வையை, 1-4)
பொருள்: இந்தப்
பூமியன் நிலப்பகுதியையே காணமுடியாத அளவுக்கு மழை பொழிந்தது. அந்த மழைநீரானது
நாகமரங்கள் ஓங்கி உயரமாக வளர்ந்திருக்கும் நீலமணிபோல விளங்கும் மலைச்சாரல்
பகுதிகளின் வழியாக இறங்கி ஓடி வந்தது. அப்படி வருகையிலே நறுமலர்கள் பலவற்றையும்
தன்பால் சேர்த்துகொண்டு, அழகு பொருந்திய வையையாற்றின் வழியாக வந்து கூடல் மாநகரை
அடைந்தது.
அவ்வாறு கூடல் நகரை
அடைந்த வையையின் புதுப்புனலை வரவேற்க மதுரை வாழ் மக்கள் ஆவலுடன் கூடுகின்ற காட்சி:
தகரமும்
ஞாழலும் தாரமும் தாங்கி
நளிகடல்
முன்னி யதுபோலும் தீநீர்
வளவரல்
வையை வரவு;
வந்து
மதுரை மதில்பொரூஉம் வான்மலர்த்தாய்
அந்தண்
புனல்வையை யாறெனக் கேட்டு;
மின்னவிர்
ஒளியிழை வேயு மோரும்,
...................................................................................
(பரிபாடல் 12:6-32)
பொருள்: வையை ஆறானது தகரம்,
ஞாழல், தாரம் ஆகிய மரங்களைத் தாங்கிக்கொண்டு வந்தது . அப்படி வருகின்ற வையையின்
வரவானது கடல் நீர் பொங்கி எழுந்து வருவது போல இருந்தது. இந்தப் புதுவெள்ளத்தைப்
பற்றி கேள்விப்பட்டு மதுரையில் வாழும்
பலதரப்பட்ட மக்கள் அதனைக் காண்பதற்காக வையையை நோக்கிச் செல்லலாயினர்.
வைகையற்றின்
போக்கிற்கு அணையிடுவதையும் காதலர்களின் உடன்போக்கைக் தடுப்பதையும் ஒப்பிட்டுக்
கூறும் ஒரு பாடல்:
கடையழிய
நீண்டகன்ற கண்ணாளைக் காளை
படையொடுங்
கொண்டு பெயர்வானைச் சுற்றும்
இடைநெறித்
தாக்குற்ற தேய்ப்ப, அடல் மதுரை
ஆடற்கு
நீர் அமைந்தது யாறு! (பரிபாடல் 11:46-49)
பொருள்: தன் காதலியைக்
காளையானவன் தன்னுடன் உடன்போக்கில் அழைத்துச் சென்றான். அதையறிந்த தலைவியின்
சுற்றத்தார், இடைவழியில் அவர்களின் போக்கைத் தடுத்து நிறுத்தினர். அதைப்போலவே,
மதுரை மக்கள் அணையிட்டுத் தடுத்து நிறுத்தியதால் வையை ஆறும் மக்கள் நீராடிக்
களிப்பதற்கு ஏற்றதாயிற்று.
புறநானூறு
மதுரையின்
மாடமாளிகைகள் குறித்தும் மன்னரின் பெருமையைக் குறித்தும் உரைக்கும் பாடல்:
கடும்பின்
அடுகலம் நிறையாக நெடுங்கொடி
.................................................................................................
மாட
மதுரையும் தருகுவன்; ................................ (புறநானூறு, 32: 1-5)
பொருள்: சோழன்
நலங்கிள்ளி இரக்கம் மிகுந்தவன். விறலியர் பூவிலை தருமாறு வேண்டினால், மாடமாளிகைகள்
விளங்கும் மதுரை நகரையே தரும் இயல்பினன்.
கலித்தொகை
பரத்தையின் வீடு
சென்று திரும்பும் தலைவனின் மார்பில் நகக்குறிகள் உள்ளதைத் தலைவி பார்க்கிறாள். தலைவனோ
குதிரை ஏறி வந்தேன் என்று கூறுகிறான். அதைக் கேட்ட தலைவி, பரத்தையரைக் குதிரையாக உருவகித்து
பின்வரும் சொற்களைக் கூறுகின்றாள். இப்பாடல்,
மதுரை மாநகர் வாழ் மக்களின் வாழ்வியலில் ஒரு பகுதியான துப்புரவைப் பற்றி கூறுவதாகவும்
அமைந்துள்ளது.:
சேகா!
கதிர்விரி வைகலின் கைவாரூஉக் கொண்ட
மதுரைப்
பெருமுற்றம் போலநின் மெய்க்கண்
குதிரையோ
வீறி யது? (கலித்தொகை, 96:22-24)
பொருள்: “வீரனே!
கதிரவன் தனது ஒளிக்கதிர்களை விரிக்கத் தொடங்கும் காலை நேரத்தில், மதுரை நகரில்
மகளிர் சாணம் இட்டு வாரிப் பெருக்கிய வீட்டு முற்றம்போல, உன்னுடைய மேனியில் அந்தக்
குதிரைதான் கோடு கீறியதா?”
முத்தொள்ளாயிரம்
மதுரை மாநகரின்
மாடமாளிகைகளைப் பற்றியும், பாண்டிய மன்னன் அரண்மனையின் பாதுகாவல் பற்றியும்
எடுத்துரைக்கும் ஒரு பாடல்:
அறிவார்
யார் யாமொருநாள் பெண்டிரேம் ஆகச்
செறிவார்
தலைமேல் நடந்து – மறிதிரை
மாடம்
உரிஞ்சும் மதுரையார் கோமானைக்
கூட
ஒரு நாள் பெற. (முத்தொள்ளாயிரம், 66)
பொருள்: வைகை ஆற்றில்
எழும் அலைகளைத் தடுக்கும் உயர்ந்த மாடங்கள் நிறைந்த மதுரையை ஆளும் மன்னன்
பாண்டியனைச் சேர்ந்து மகிழ ஒரு நாளைக் குறிக்க யார் இருக்கிறார்கள்? அவனுக்கு நான்
மனைவியாக ஆவதற்கு, கட்டுக் காவல் மிகுந்த பாண்டியன் அரண்மனைத் தலைவாசலைக்
கடந்துபோய் என் ஆவலை அவனிடம் சொல்லும் வழிவகை அறிந்தவர்கள் யார் இருக்கிறார்கள்?
முடிவுரை
மதுரையின் சிறப்பினைப்
பதிவு செய்துள்ள தமிழிலக்கியங்கள் மேலே குறிப்பிட்டவை மட்டுமின்றி பல உள்ளன.
இளங்கோவடிகள் மதுரையை பின்னணியாக வைத்து ஒரு காண்டமே எழுதியுள்ளார். மதுரை நகரின்
அமைப்பு, அதன் வளம், செல்வச்செழிப்பு, மக்கள் வாழ்வு, அங்காடிகள் பற்றிய செய்திகளை
தன்னகத்தே கொண்டுள்ளது பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான மதுரைக் காஞ்சி. பெரிய
புராணம், மணிமேகலை போன்ற நூல்களும் மதுரையின் சிறப்பைப் பதிவு செய்துள்ளன.
உசாத்துணை:
1. பேராசிரியர்
சி. இலக்குவனார், ‘பழந்தமிழ்’, இலக்குவனார் இலக்கிய இணையம், 2009:114-115.
2. புலியூர்
கேசிகன், பரிபாடல் – தெளிவுரை.
3. வ.
த. இராமசுப்பிரமணியம், புறநானூறு – தெளிவுரை
4. சுப.
அண்ணாமாலை, கலித்தொகை – உரை
5. பேராசிரியர்
பு. சி. புன்னைவனநாத முதலியார், மீனாட்சியம்மைப் பிள்ளைத்தமிழ் – உரை.
6. ஞா.
மாணிக்கவாசகன், முத்தொள்ளாயிரம் விளக்க உரை
-----------------------------------------------------