மரபுப் பாக்கள் - தொகுதி 30
88)
மானமே பெரிது.
பா வகை: வஞ்சித் தாழிசை
(வஞ்சித் தாழிசை - குறளடிக் கொண்டு ஒரு பொருள் மேல் மூன்றடுக்கி வரும் பாடல்.)
உன்பெருமை உணராமல்
உன்னையுமே ஒதுக்குபவர்
தன்னைநீயும்
தள்ளிவைத்தே
தன்மானம் தனைக்காப்பாய்!
என்னவிலை ஈன்றேனும்
உன்மானம் உயர்வாக
என்றும்நீ எண்ணியுன்றன்
தன்மானம் தாங்கிடுவாய்!
உன்னையிங்கே உவப்போரை
உன்நினைவும் உள்ளவரை
என்றும்நீ ஏற்றிடுவாய்
உன்நெஞ்சில் உயர்வாக!
--------------------------------------------------------------------------------------------
89) மிதிபட்டு வாழேல்.
பா வகை: வஞ்சித் தாழிசை
கல்விதனைக் கற்றவர்க்கோ
கல்விக்காய் ஏற்றவேலை
பல்லோர்க்கும் கிடைக்காமல்
அல்லலுமே படுகின்றார்!
இந்நிலைதான் மாறுவதும்
எந்நாளோ என்றேங்கி
அந்நாளை எதிர்நோக்கி
எந்நாளும் காத்திருப்பர்!
பொன்னாளும் பூத்திடவே
இன்றாளும் அரசுமுடன்
நன்றேசெய் தாலிளைஞர்
தன்மானம் காத்துவாழ்வர்!
----------------------------------------------------------------------------------------------
90) மீள்வாய்த் துயர்களைந்து.
பா வகை: வஞ்சித் தாழிசை
வாழ்க்கையதே
முள்படுக்கை
வாழ்ந்ததிலே
வெற்றியீட்டு!
தாழ்ந்தென்றும்
வாழ்வதிலே
தாழ்வுதானே
வந்துசேரும்!
தாழ்வினையே
தவிர்த்திடுவாய்
வாழ்க்கையினில்
உறுதிகொள்வாய்
வாழ்வினிலே
வெற்றியுமே
வாழ்நாளில் வந்தணையும்!
மனமிருந்தால் போரிடவே
உனக்கிங்கே
வழிபிறக்கும்
உனக்குள்ளத் தடைநீங்கும்
மனக்கண்ணில்
விடுதலைகாண்!
--------------------------------------------------