சங்க காலத்தில் - நீர், நிலம், பொருள் வளம் - 1
- அன்பு ஜெயா, சிட்னி
(தமிழணங்கு இதழ் ஜனவரி 2023-ல் வெளியிடப்பட்டது)
சங்க காலத்தில் - நீர் வளம்
முன்னுரை
வாழ்க்கை வரலாற்றை மீளாய்வு
செய்து நோக்கும் போது, பண்டைத் தமிழர்கள் எவ்வளவு சிறப்புடன் தம் வாழ்க்கையையும்
வாழ்க்கைச் சூழலையையும் அமைத்துக் கொண்டார்கள் என்று வியக்கத் தோன்றுகிறது! நாட்டு
மக்களின் வாழ்க்கை சிறப்புடன் அமைய வேண்டுமானால் நாடு வளமுள்ளதாக இருக்க வேண்டும்.
அப்படித் தமிழர்கள் தங்கள் வாழ்க்கையை வடிவமைத்துக் கொண்ட முறைகளை நமக்கு
எடுத்துக் காட்டுபவை சங்க இலக்கியங்கள்.
அந்த இலக்கியங்களை பாண்டிய மன்னர்கள்
தலைச்சங்கம்,
இடைச்சங்கம், கடைச்சங்கம் என்று மூன்று சங்கங்களை அமைத்து வளர்த்தனர்.
அவர்கள் தமிழண்ணைக்குப் பணி புரிந்த காலமே 'சங்க காலம்' என்று போற்றப்படுகிறது.
சங்க காலத்தில் தமிழிலக்கியங்கள் வளம்
பெற்றிருந்ததைப் போலவே, தமிழ் மக்களின் வாழ்க்கையும் வளம் பெற்றிருந்தது. நீர் வளமும், நில வளமும், பொருள் வளமும் சிறப்பாக இருந்தன. சங்கத்
தமிழரின் வாழ்வு, அறவாழ்வாக இருந்தது. இத்தகைய அறவாழ்விற்கு
ஏற்ற சூழல் அவசியம். அச்சூழலையும் சாதகமாக அமைத்துக்கொண்டு வாழ்வது என்பது மிக மிக
இன்றியமையாதது. அவ்வகையில் சங்கத் தமிழர்களுக்கு அமைந்த நிலம் நீர் சார்ந்த சூழல்
அமைப்புகள் பற்றியும் அவற்றைப் பழந்தமிழர் தம்முடைய அறவாழ்விற்கு சாதகமாக
அமைத்துக்கொண்டு வாழ்ந்த விதமும் அறிவது என்பது இயற்கையையும் அறவாழ்வையும்
பாதுகாக்கவேண்டியது அவசியமாக உள்ள இன்றைய வாழ்வியலுக்கு மிகவும் அவசியமான ஒன்று.
நாட்டு மக்கள் வளம்பெற நாடு வளமுள்ளதாக
இருக்கவேண்டும். சங்க காலத் தமிழர்களின் வளத்தை அறிய அவர்கள் வாழ்ந்தபோது இருந்த
நாட்டின் வளங்களைப் பற்றி சற்று ஆராயவேண்டும். நீர் வளமும் நில வளமும் சேர்ந்திருந்தால்
தான் ஒரு நாட்டில் பொருள் வளம் பெருகும் என்பது நாம் அறிந்த உண்மை. அதை சங்க காலத்திலேயே மக்கள்
உணர்ந்திருந்தார்கள் என்பதை சங்க இலக்கியங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன. அவற்றில் சிலவற்றை இங்கே உற்று நோக்கலாம்.
நீர் வளம்
“------- குண கடல் கொண்டு
குட கடல் முற்றி
இரவும் எல்லையும்
இளிவு இடன் அறியாது
அவலும் மிசையும் நீர்த்
திரள்பு ஈண்டி
-------------------------------------------------------
குணகடற்கு இவர் தரும்
குரூஉப் புனல் உந்தி
நிவந்து செல் நீத்தம்
குளம் கொளச் சாற்றி,
- மதுரைக் காஞ்சி, 238-246.
என்று மாங்குடி மருதனார், கீழ்க்கடலில்
நீரை மொண்ட மேகமானது, மேற்குத் திசையில் உள்ள மலைகளில் தங்கி, இரவு பகல்
எது என்று தெரியாதபடி அடைமழையைப் பெய்விக்கும். அந்த மழை நீரானது மேட்டிலும்
பள்ளத்திலும் பாய்ந்து, கிழக்குக் கடலை நோக்கி ஓடும். அப்படி
ஓடுகின்ற நீரைக் குளங்களில் தேக்கிவைப்பர் என்று அக்காலத்தில் நீர் நிலைகளை எப்படிப்
பாதுகாத்தனர் என்று கூறியுள்ளார்.
மேலும்,
“கல் காயும் கடு வேனிலொடு , இரு வானம் பெயல் ஒளிப்பினும்
வரும் வைகல் மீன்
பிறழினும், வெள்ளம் மாறாது விளையுள் பெருக,
- மதுரைக் காஞ்சி, 106-109.
என்று, பாண்டிய நாட்டில், மலைகள் சூடேறிக்
காய்ந்து போகும்படி வெப்பம் அதிகமாகி, மேகம் மழை பெய்யாது போனாலும்,
விடியற்காலை தோன்றும் வெள்ளி நட்சத்திரம் வடக்கே தோன்றுவதற்குப் பதிலாக தெற்கே
தோன்றினாலும், ஆறுகள் வற்றாது நீர்ப் பெருக்கோடு ஓடுவதால், விளைச்சல் பெருகியிருக்கும் என்று பாண்டிய நாட்டின் வளத்தை
விவரித்துள்ளார்.
சோழ நாட்டின் காவிரி நீர்வளம் பற்றி
பட்டினப்பாலை’யில்
கடியலூர் உருத்திரங் கண்ணனார்,
“வான் பொய்ப்பினும், தான் பொய்யா,
மலைத் தலைய கடல்
காவிரி
புனல் பரந்து பொன்
கொழிக்கும்.”
- பட்டினப்பாலை, 5-8.
என்று, மழை பெய்யாது போனாலும் தான்
பொய்க்காது, நீர்
சுமந்து வரும் காவிரி ஆறு பாயப் பொன்னாய் விளையும் கழனி வயல்கள் நிறைந்தது சோழநாடு
என்று உரைக்கின்றார்.
இதைப் போலவே, சேர நாட்டிலுள்ள பேரியாற்றில்
(பெரியாறு) வறண்ட காலத்திலும் வெள்ளம் பாய்ந்தோடியது என்பதை,
‘குன்று வறம் கூரச் சுடர்
சினம் திகழ,
அருவி அற்ற பெரு வறற்
காலையும்,
அருஞ் செலல் பேர்
ஆற்று இருங் கரை உடைத்து ------’
- பதிற்றுப்பத்து, 5: 3.13-15.
என்று காசறு செய்யுட் பரணர் கூறியுள்ளார்.
நாட்டின் நீர்வளத்தைப் பெருக்க மன்னர்கள்
செய்தவை பற்றி,
“காடு கொன்று
நாடாக்கிக்
குளம் தொட்டு
வளம்பெருக்கி’
-
பட்டினப்பாலை, 283-284.
என்று, அக்கால மன்னர்கள் ஆறுகளை வெட்டி,
அவற்றின் வழியே மலைகளில் பெய்யும் மழை நீரை ஏரி, குளம்,
ஊருணி என்னும் நிலைகளில் பாய்ச்சி நாட்டை வளப்படுத்தியதையும், கரிகால் சோழன்
காவிரிக்குக் கரை அமைத்து, அதன் நீர் கால்வாய் வழி ஓடி
நாடெங்கும் பயனளிக்க வழிசெய்தான் என்பதையும் பட்டினப்பாலைப் பாடல் உணர்த்துகிறது.
நீர் வளம் பற்றி நெடுநல்வாடையில்,
பெயல் உலந்து எழுந்த பொங்கல்
வெண் மழை
அகல் இரு விசும்பில் துவலை
கற்ப --------
-- நெடுநல்வாடை 19-20.
என வானம் அப்போதுதான் மழைத் தூவலைக் கற்றுக்கொள்வது
போன்று தொடர்ந்து மழை பெய்தது என்றும்,
வையகம் பனிப்ப வலன் ஏர்பு
வளைஇப்
பொய்யா வானம் புதுப் பெயல்
பொழிந்தன -------
-
நெடுநல்வாடை 1-2.
என்று பருவகாலத்தில் பொய்க்காமல், உலகமே குளிர்ந்திடும் வகையில்,
வானம் புதிய மழையைப் பெய்திட,
இருங் களி பரந்த ஈர வெண்
மணல்
செவ்வரி நாரையொடு எவ்
வாயும் கவர
கயல் அறல் எதிர கடும்
புனல் சா அய் ------
-
நெடுநல்வாடை 16-18.
என்று, வண்டலான மணற்பரப்பில நின்று கொண்டு தம்
இரைக்காக வாய் திறந்து காத்திருக்கும் கொக்குகளின் வாயில், நீர்ப்பெருக்குள்ள ஆற்றில்
எதிர் நீச்சல் போட்டுத் துள்ளிக் குதிக்கும் மீன்கள் தானாக வந்து வீழ்கின்றனவாம்.
அவ்வாறு அந்நிலத்தில் நீர்ப் பெருக்கை வருணிக்கின்ற காட்சியினை
நக்கீரர் விவரிக்கின்றார்.
பட்டினப்பாலையில், நீர் வழியாக
மரக்கலங்களில் வந்த பொருட்களை இறக்குமதி செய்யவும், உட்நாட்டில் விளைந்தவற்றை கடல்
வழி ஏற்றுமதி செய்யவும் நிலவளமும் நீர்வளமும் உதவும் காட்சியினை,
வான்முகந்தநீர்
மலைப்பொழியவும்
மலைப்பொழிந்தநீர்
கடற்பரப்பவும்
மாரிபெய்யும்
பருவம்போல
நீரினின்று
நிலத்துஏற்றவும்
நிலத்தினின்று
நீர்பரப்பவும்
அளந்தறியாப் பலபண்டம்
வரம்புஅறியாமை
வந்துஈண்டி
– பட்டினப்பாலை 126-132.
என்று உருத்திரங்கண்ணனார்
சித்தரிக்கின்றார்.
உடலுக்கு உயிர் எப்படி முக்கியமோ அதைப்போல
உணவும் முக்கியம். உணவு என்பது நிலத்தோடு சேர்ந்த நீராகும். அதுவே வேளாண்மைக்கு இன்றியமைததாகும்.
அதனால்தான், நீர் வளத்தையும் நில வளத்தையும் பெருக்கி விளைச்சலுக்கு உதவியவர்கள்,
உயிரையும் உடலையும் காப்போர் என்று புகழப் படுகிறார்கள். அதனால், நீரினைத் தேக்கி
நீர்நிலைகளை உண்டாக்கியவர்களே வானுலக இன்பங்களை நிலவுலகிலேயே பெற்று மகிழ்வார்கள்
என்பதை,
நீரின்று அமையா
யாக்கைக்கு எல்லாம்
உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்
தோரே!
உண்டி முதற்றே உணவின்
பிண்டம்; 20
உணவெனப் படுவது
நிலத்தொடு நீரே!
நீரும் நிலனும்
புணரியோர், ஈண்டு
உடம்பும் உயிரும்
படைத்திசி னோரே!
- புறநானூறு – 18: 18-23.
என்று நீர்வளத்தின் முக்கியத்தை
குடபுலவியனார் இந்தப் பாடலில் அறிவுறுத்துகின்றார்.
(தொடரும் - அடுத்து நில வளம்)
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்: