Pages

Sunday, 23 April 2023

 கம்பனின் உவமைகளில் சில துளிகள் -16 

விசுவாமித்திரரும் இராமலட்சுமணரும்
 --- அன்பு ஜெயா, சிட்னி

சில ஆண்டுகளாக, நம்ம கம்பன் தாத்தாவைக் காண இயலாமல் பல வேலைகளில் காலம் கழித்துவிட்டேன். இப்போது அவரைப் பார்க்க ஓர் அச்சம். ஆனால், அவருடைய பாட்டு ஒன்றை எடுத்து விட்டோம்னா  மன்னித்து விடுவார் என்று தெரிந்ததால், அவருடைய உவமைகளைத் தொடர்கிறேன்.

----------------------------------------


ஒரு முறை தசரதச் சக்கரவர்த்தியின் அரசவைக்கு வந்து விசுவாமித்திர முனிவர் தன் வேள்விகளுக்கு இராட்சதர்கள் தடையாக இருப்பதை தடுப்பதற்காக இராம-லட்சுமணரை தன்னோடு அனுப்புமாறு தசரத சக்ரவர்த்தியிடம் கேட்கிறார். தசரத சக்கரவர்த்தியும் இராமலக்குமணரைப் பிரிய மனமில்லாமலேயே அவர்களை விசுவாமித்திரருடன் அனுப்பி வைக்கிறார்.

விசுவாமித்திர முனிவரின் யாகத்தை அழிக்கின்ற தாடகை போன்ற அரக்கர்-அரக்கியரை அழித்து, அவருடைய யாகத்தைக் காப்பதற்காக அவருடன் செல்லும் இராம-லட்சுமணரைப் பார்த்து குடிமக்கள் வியக்கிறார்களாம். அப்படி என்ன வியப்பு என்று பார்த்தால் –

வேதங்களாலும் ஆராய்ந்து அறிந்துகொள்ள முடியாத ஒப்பற்ற தலைவனான இராமனும், அவனுடைய பக்கத்திலே வரும் இலட்சுமணனும் நடந்து வருகின்ற காட்சியானது கடல்நீரை அள்ளிப் பருகிய காளமேகம், செந்தாமரைப் பூக்களை விரித்துக்கொண்டு. வடதிசையிலுள்ள மேருமலையுடன் வருவதைப் போன்று உள்ளது என்று வியக்கிறார்களாம்.

கம்பனின் அந்தப் பாடல்:

கடல் கரு முகில் ஒளிர் கமலம் அது அலரா

வட வரையுடன் வரு செயல் என், மறையும்

தடவுதல் அறிவு அரு தனி முதலவனும்

புடைவரும் இளவலும் என நிகர் புகல்வார்.

-    (பாலகாண்டம் – 313, திருவவதாரப் படலம் – 133)


இதில் கடல் நீரை மொண்டுவரும் காளமேகத்தை இராமனுக்கும், பொன்னிறமான மேரு மலையை இலட்சுமணனுக்கும், தாமரைப் பூங்கொத்துக்களை இராமனுடைய கண், கை, கால், வாய் ஆகிவற்றுக்கும் உவமையாகக் கூறியுள்ளார் கம்பன்.

(உவமைகள் தொடரும்)


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்: