ஊர்வாய் அடங்கிடுமோ!
---
அன்பு ஜெயா
அதோ அந்த அழகைப்
பாருங்கள்! நெய்தல் நிலப்பரப்பிலே புலிநகக் கொன்றை மரங்களின் பொன்னிறமான மஞ்சள் நிறப்பூக்களும், புன்னை
மரங்களின் வெண்ணிறப் பூக்களும் தரையில் உதிர்ந்து கிடக்கின்றன. அந்தக் காட்சியானது
ஓர் ஓவியன் தன் கற்பனையெல்லாம் ஒரு சேரக் கூட்டி வரைந்த அழகான ஓவியம் பல படிவங்களாக
அந்த நெய்தல் நிலமெங்கும் சிதறிக் கிடப்பதைப் போலத் தோன்றுகிறது. அப்படிப்பட்ட அழகிய
சோலைகளை உடையப் பெருந்துறைகளைக் கொண்ட ஊர் அது.
அந்த ஊரின் உப்பங்கழிகளில்
உள்ள நீரில் பச்சை இலைகளுடன் பருத்த தண்டுகளை உடைய நெய்தல் பூக்கள் பூத்துக் குலுங்குகின்றன. விழாக்களுக்கு
ஒப்பனை செய்கின்ற மகளிர் கூட்டம் அழகு செய்வதற்காக அந்தப் பூக்களைப் பறித்துக்கொண்டுள்ளனர்.
அப்படிப்பட்ட ஊரில்
உள்ள அவளைத் திருமணம் செய்யாது அவளுடைய காதலன் காலம் கடத்துகின்றான். ஊர்ப்பெண்களோ அவளைக் கேலி செய்து பேசுகின்றனர். அதனால்
அந்தக் காதலி மனவருத்தத்துடன் இருக்கின்றாள். அவளுடைய வருத்தத்தை உணர்ந்த அவளுடைய தோழி
இந்த ஊர்ப்பழியை நீக்கித் தன் தோழியின் துயரைத் துடைக்க வேண்டுமென்று முடிவு செய்கிறாள். மேலும், அவர்களுடைய
காதலுக்குத் துணை நின்றவள் என்பதால், தனக்கு அந்தப் பொறுப்பு
உள்ளது என்பதையும் உணர்கிறாள்.
அதனால் தன்
தலைவியின் காதலனைச் சந்தித்து விரைவில் காதலியைத் திருமணம் செய்துகொள்ள ஏற்பாடு செய்யுமாறு
கேட்டுக்கொள்கிறாள். தோழியின் வேண்டுகோளை
ஏற்றுக்கொண்ட காதலனும் காதலியின் பெற்றோரைச் சந்தித்து திருமணத்திற்குச் சம்மதம் வாங்கிவிடுகிறான்.
அதைப்பற்றித் தோழியானவள் அந்தக் காதலியிடம் உரைக்கின்றாள்.
“அடியே என் தோழி!
உன்னைத் தூற்றிய இந்த ஊர்ப் பெண்களெல்லாம் உன் காதலனுடன் உன் திருமணம் கூடிவிட்டதால், அன்று பாண்டியரின்
மிகப் பழமையான திருவணைக்கரையின் அருகிலே அமர்ந்து இலங்கையின் மீது படையெடுப்பதுபற்றி
இராமன் தன் வீரர்களுடன் ஆலோசனை செய்யும்போது அந்த ஆலமரத்தில் சத்தம் போட்டுக்கொண்டிருந்த
பறவைகளை யெல்லாம் இராமன் கையசைத்து ஓசை செய்யாது அடக்க அந்த ஆலமரமே ஓசையின்றி அமைதியானது
போல, வாயடைத்துப்போய் நிற்கின்றனர். அறியாயோ இதை நீ?
“தங்கள் உயிரைப்
பணயம் வைத்துப் படகிலே கடலுக்குச் சென்று கணக்கற்ற அயிரை மீன்களைப் பிடித்துவந்து தங்கள்
இனத்தவருடன் பகிர்ந்துகொண்ட பரதவர்கள், தங்கள் முயற்சியால்
மீன்களை பிடித்ததாகச் சொல்லிக்கொள்ளாமல், நெருக்கிப் பின்னப்பட்ட
வலைகளின் இடைவெளி சிறியதாக இருந்ததனால்தான் இவ்வளவு மீன்கள் கிடைத்தன என்று மீன்பிடி
வலையை வாயாறப் பாராட்டுவார்கள். அதைப்போல இருக்கிறது அந்தப் பரதவர்த் தலைவன் அவருடைய முயற்சியால் திருமணம் கூடியது
என்று கூறாமல் அதற்குத் துணையாக நின்ற என்னைப் பாராட்டினார். இனி உன்னை இங்கிருந்து
தன் ஊருக்கு அழைத்துச் சென்றபின் தன் ஊர் மக்களுக்கு விருந்து வைத்துக் கொண்டாடப் போகிறார்,” என்று தோழி
கூறுகின்றாள்.
அந்த உப்பங்கழியிலே
மலர்ந்த பூக்கள் வேறொரு இடத்திற்கு அழகு செய்யப் போவதுபோல பெற்றோரால் சீராட்டி வளர்க்கப்பட்டத்
தலைவி தன் துணைவன் வீட்டிற்குப் பயன்படப்போகிறாள் என்பதைக் கவிஞர் குறிப்பால் உணர்த்துகிறார்.
இந்தக்
காட்சியினைக் கண்ட சங்கப் புலவரான மதுரைத் தமிழ்க் கூத்தனார் கடுவன் மள்ளனார் பின்
வரும் பாடலில் அந்தக் காட்சியைப் படம் பிடித்துக் காட்டுகின்றார்.
கொடுந்திமில் பரதவர் வேட்டம்
வாய்த்தென,
இரும்புலாக் கமழும் சிறுகுடிப்
பாக்கத்துக்
குறுங்கண் அவ்வலைப் பயம்
பாராட்டி,
கொழுங்கண் அயிலை பகுக்கும்
துறைவன்
நம்மொடு புணர்ந்த கேண்மை முன்னே 5
அலர்வாய்ப் பெண்டிர் அம்பல்
தூற்ற,
பலரும்ஆங்கு அறிந்தனர் மன்னே, இனியே
வதுவை கூடிய பின்றை,
புதுவது
பொன்வீ ஞாழலொடு புன்னை
வரிக்கும்
கானல்அம் பெருந்துறைக் கவினி மாநீர்ப் 10
பாசடைக் கலித்த கணைக்கால்
நெய்தல்
விழவுஅணி மகளிர் தழைஅணிக்கு ஊட்டும்
வென்வேல் கவுரியர் தொல்முது
கோடி
முழங்குஇரும் பௌவம் இரங்கும்
முன்துறை,
வெல்போர் இராமன் அருமறைக்கு
அவித்த 15
பல்வீழ் ஆலம் போல,
ஒலிஅவிந் தன்று,
இவ் அழுங்கல் ஊரே.
-
மதுரைத்
தமிழ்க்கூத்தனார் கடுவன் மள்ளனார் (அகநானூறு – 70)
திணை: நெய்தல்
துறை: தலைமகன்
வரைவு மலிந்தமை தோழி தலைமகட்குச் சொல்லியது.
அருஞ்சொற்பொருள்:
கொடுந்திமிர்= வளைந்த
படகு. பயம்=பயன். அயிலை=அயிரைமீன். ஞாழல்= புலிநகக்
கொன்றை. வரிக்கும்=சித்திரம் எழுதினாற் போல உதிர்ந்து கிடக்கும் அழகு. கவுரியர்=பாண்டியர்.
கோடி=திருவணைக்கரை. பல்வீழ்=பலவிழுதுகள். அழுங்கல்=ஆரவாரம்.
சுவைபட விளக்கியுள்ளீர்கள்.அருமை.
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteபடிக்கத் துவங்கிய போதே மதுரா பற்றிய நினைவலைகள் நன்றி அண்ணா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Deleteபடிக்கத் துவங்கிய போதே எமதூர் பற்றிய நினைவலைகள் நன்றி அண்ணா
ReplyDeleteவருகைக்கும் கருத்துக்கும் நன்றி
Delete