Pages

Friday, 13 September 2019

சங்க இலக்கியத் தூறல் – 19 : சற்றே இளைப்பாறி வா!


சற்றே இளைப்பாறி வா!

--- அன்பு ஜெயா, சிட்னி, ஆஸ்திரேலியா  
                                                   
அவனும் அவளும் பல நாட்களாக அடிக்கடி சந்தித்து காதல் வயப்பட்டு வாழ்ந்து வந்தார்கள். அப்படி இருக்கையில் ஒரு கால கட்டத்தில் இப்போது போல், அவன் ஓரிடத்திலும் அவள் ஓரிடத்திலும், பிரிந்து வாழ்வதற்கு இனிமேலும் முடியாது என்ற முடிவுக்கு வந்தனர்.

காதலன் காதலியை மணந்துகொண்டு கணவன் மனைவியாக வாழ விரும்பி ஒரு நாள் காதலியின் பெற்றோரிடம் அவளைப் பெண் கேட்டு அவர்கள் வீட்டிற்குச் சென்றான். ஏதோ காரணத்தால் காதலியின் பெற்றோர்கள் அவளை அவனுக்கு மணமுடித்து வைக்க மறுத்துவிட்டார்கள்.

அந்தக் காலத்திலும் காதலுக்கு எதிர்ப்பு இருந்திருக்கிறது!

இனிமேல் பிரிந்து வாழ முடியாது என்ற நிலைக்கு இருவருமே வந்துவிட்டதால், காதலன் காதலியை அழைத்துக்கொண்டு தன்னுடைய ஊருக்குச் செல்வதற்கு முடிவு செய்தான். அதற்காக காதலியுடைய தோழியின் உதவியை நாடினான்.  அவளுடைய உதவியுடன் ஒரு நாள் தன் காதலியை அழைத்துக்கொண்டு தன்னுடைய ஊருக்குப் புறப்பட்டான்.


அந்த ஊரிலிருந்து காதலனின் ஊருக்குச் செல்வதற்கு கல்லும் முள்ளும் நிறைந்த கரடுமுரடான நிலப்பகுதியைக் கடந்துதான் செல்லவேண்டும்.  அதுவோ சரியான கோடைக் காலம்.

காதலியின் ஊர்ப்பகுதியிலுள்ளப் பாதையோ மிருதுவான நிலப்பரப்பு. மேலும்  புன்னைமரத்தின் மலர்கள் உதிர்ந்து மலர்ப்படுக்கையாக, மென்மையாகக் காட்சியளித்த பாதை.



மலர்ப்படுக்கை போன்ற நிலத்தில் நடந்து வந்த காதலி, காதலனின் ஊருக்குச் செல்லும் பாதையை அடைந்தபோது அந்த கரடுமுரடான நிலப்பரப்பையும், மேலே சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பத்தையும் பார்த்து மருண்டாள். அப்படிப்பட்ட சூழலை அவள் அனுபவித்ததில்லை. இதுவரை நடந்து வந்ததால் அவள் பாதங்கள் சிவந்து, கால்களும் வருத்தின.

அந்தப் பருவத்தில் பெய்யவேண்டிய மழையும் பொய்த்துப் போனதால் வானத்திலிருந்து ஒரு சொட்டு நீரும் அந்த நிலத்தில் வீழ்ந்திருக்கவில்லை. அதனால் வெய்யிலின் கொடுமையும் அதிகமாயிருந்தது. அவள் படுகின்ற துன்பத்தைப் பார்த்த காதலனின் மனம் நம்மால்தானே அவளுக்கு இந்த வேதனை என்று சங்கடத்தில் ஆழ்ந்தது. 

அவளுடைய வேதனையைக் குறைக்க, அவளிடம், “உனக்குத் தேவைப்படும் போதெல்லாம் ஆலமர நிழலிலே தங்கி இளைப்பாறிக்கொண்டு, களைப்பு நீங்கியபின் உன் கை வளையல்கள் ஒலிக்க நீ கை வீசி நடந்துவா,” என்று கூறினான். அப்போது அவள் அவனைப் பார்த்த பார்வையிலிந்து அவளது அச்சத்தை உணர்ந்துகொண்ட காதலன், “இங்கு உன்னுடைய உறவினர்கள் யாரும் நம்மைத் தொடர்ந்து வருவார்களோ என்று அஞ்சாமல் நீ இளைப்பாறி பயமின்றி நடந்து வரலாம்,” என்று அவளுடைய அயர்வு நீங்கிட ஆறுதல் வார்த்தைகள் கூறி அவளுக்குத் துணை நிற்கின்றான்.

இந்தக் காட்சியினை சங்கப் புலவர் அம்மூவனார் பின்வரும் பாடலில் சித்தரிக்கின்றார்.

வருமழை கரந்த வால் நிற விசும்பின்
நுண் துளி மாறிய உலவை அம் காட்டு
ஆல நீழல் அசைவு நீக்கி,
அஞ்சுவழி அஞ்சாது, அசைவழி அசைஇ,                             
வருந்தாது ஏகுமதி-வால் இழைக் குறுமகள்!-                      5
இம்மென் பேர் அலர் நும் ஊர்ப் புன்னை
வீ மலர் உதிர்ந்த தேன் நாறு புலவின்
கானல் வார் மணல் மரீஇ,
கல் உறச் சிவந்த நின் மெல் அடி உயற்கே!

--- அம்மூவனார் (நற்றிணை – 76)

திணை: பாலை 

பாடலின் துறை:  புணர்ந்து உடன்போகாநின்ற தலைவன் இடைச் சுரத்துத் தலைமகட்கு உரைத்தது.

அருஞ்சொற்பொருள்:
வால் நிறம் = வெண்ணிறம்; உலவை = காற்று; அசைதல் = தங்குதல்.   

3 comments:

  1. ஆகா...! அருமையான விளக்கம்...

    ReplyDelete
  2. மிக எளிமையான சொல் கொண்டு அருமையாகக் காட்சிப்படுத்தியுள்ளீர்கள் சங்கக்காதலை. சிறப்பு.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் பாராட்டுதலுக்கும் நன்றி

      Delete

உங்கள் கருத்துக்கள்: