Pages

Monday, 16 September 2019

சங்க இலக்கியத் தூறல் : 20 - அவள் நினைவு நீங்கட்டும்



அவள் நினைவு நீங்கட்டும்

--- அன்பு ஜெயா

தன் மகனையும் தன்னையும் மறந்து, தன்னுடைய கணவன் விலைமகள் ஒருத்தியின் வீட்டிற்குச் சென்று வருவதை விரும்பாத மனைவி ஒருத்தி, அவளுடைய கணவன் தங்கள் வீட்டில் நுழையும்போது அதைக் கண்டும் காணாதவள் போல இருந்து கொண்டு கணவன் காதில் விழும்படி, தன் ஆசை மகனிடம் பேசுவதைப் போல பேசுகின்றாள். 

என் அருமை மகனே! உன் தலைமுடியை ஒழுங்கு செய்து, ஒரு சிறிய கொண்டை போட்டு, அதில் மூன்று வடங்கள் உடைய முத்து மாலையை அழகாகச் சுற்றி வைத்தேன். அந்த முத்துக்கள் உன் தலையில் ஒளி வீசி மின்னிக் கொண்டிருக்கின்றன. அந்த அழகை உன்னைப் பெற்ற தாயாகிய நான் கண்ணாறக் காணவேண்டும், என் அருகில் வா!

இப்படிப்பட்ட உன்னிடம் அன்பு காட்டாமல் மாறிய உன் தந்தை மாறினால் மாறிவிட்டுப் போகட்டும். நான் உன்னிடம் காட்டும் அன்பு என்றுமே மாறாது என் செல்வமே, நீ வா!




பவழத்தால் செய்யப்பட்ட சக்கரங்களின்மீது அமர்ந்துள்ள அந்த வட்டப்பலகையின் மேல் மரத்தால் செய்யப்பட்ட யானை ஒன்று வீற்றிருக்கிறது. உருண்டு செல்லக்கூடிய அந்தப் பலகை வண்டியை, உன் கால்களில் அணிந்துள்ள மணிகள் ஒலித்திட, பூங்கயிற்றானல் கட்டி இழுத்துக்கொண்டு மெல்ல மெல்ல நடந்துவா என் பாக மகனே!
அந்த மணிகள் ஒலிக்க, நீ அசைந்து அசைந்து நடந்து வருவதைப் பார்ப்பது எனக்கு எல்லையில்லா இனபத்தைத் தருகிறது மகனே. ஆனால், உன் தந்தையிடம் பழகுகின்ற அந்தப் பொதுமகள் (விலைமகள்), அவளுடைய உள்ளம் முழுவதும் உன் தந்தையிடம்தான் இருக்கிறது என்று பொய் கூறி, அதன் காரணமாக அவள் இளைத்து வருவதாகவும், இளைத்ததால் அவளுடைய கை வளையல்கள் நழுவி விழுவதாகவும் அவள் நடிப்பதைக் காண்பது எனக்கு வெறுப்பைத் தருகின்றது.

என் அன்பு மகனே! அழகியக் கண்களை உடைய நீ, ‘அத்தா, அத்தா என்று மழலை மொழியால் உன் தந்தையை அழைப்பதைக் கேட்பது எனக்கு இன்பத்தைத் தருகின்றது. ஆனால், உன் தந்தையை உன்னிடம் வரவிடாது, அவர்மீது உண்மையான அன்பு கொண்டவள் போல நடித்து அவரைத் தன்பிடியில் வைத்துக்கொண்டு இருக்கிறாள். அவரைப் பிரிந்தால் அவள் ஏதோ மிக வருந்துவாள் போல நடிப்பதைப் பார்க்கையில் எனக்கு வெறுப்பு மிகுதியாகின்றது.

என் இனிய மகனே! உனக்கு அந்தச் சந்திரனைகாட்டி, உன்னுடன் விளையாட அந்த நிலவினை இங்கே வரச்சொல்லி அழைப்பது எனக்கு அளவில்லா இன்பத்தைத் தருகிறது. ஆனால், உன் தந்தை என்னை விட்டுப் பிரிவதற்குக் காரணமாக இருக்கும் அந்தப் பொதுமகள், உன் தந்தை அவளுடன் இருக்கிறார் என்ற ஆணவத்தில், தன்னைச் சீவி சிங்காரித்துக் கொண்டு வலம் வருவதைக் காண்பது எனக்கு வெறுப்பைத் தருகின்றது.

என் செல்வமே! மலர் அணிந்திராத என் கூந்தலினால் உனக்கு விளையாட்டு காட்டுகின்றேன். அந்தக் கூந்தலைக் கோதி நீ விளையாடுகிறாய். இப்போது என் இடையில் அமர்ந்திருக்கும் நீ, உன் தந்தை இங்கு வரும்போது அவரிடம் தாவிச் செல்லவேண்டும். அவர் மார்பில் எவளோ அணிவித்த மாலையை அணிந்திருப்பார்.  அந்த மாலையை நீ என் கூந்தலைக் கோதியதுபோல் கோதி விளையாட வேண்டும். அவரிடமிருத்து உன்னை நான் வாங்கும் போது நீ கையில் பிடித்திருந்த மாலை, நீ இழுப்பதால் அறுந்து விழும். மாலை அறுபடுவதுபோல் உன் தந்தைக்கு அவளுடைய நினைவும் குறைந்து போவதை நாம் பார்க்கவேண்டும். செய்வாயா மகனே!

இப்படி ஒரு தாய் தன் மகனுடன் பேசும் காட்சியினைப் பின்வரும் பாடலில் சங்கப் புலவர் மருதன் இளநாகனார் அழகாகச் சித்தரிக்கின்றார்

நயந்தலை மாறுவார் மாறுக; மாறாக்
கயந்தலை மின்னும் கதிர்விடு முக்காழ்ப்
பயந்தஎம் கண்ணார யாம்காண நல்கித்,
திகழ்ஒளி முத்துஅங்கு அரும்பாகத் தைஇப்
பவழம் புனைந்த பருதி சுமப்பக்,                                                   5

கவழம் அறியாநின் கைபுனை வேழம்
புரிபுனை பூங் கயிற்றின் பைபய வாங்கி,
அரி னை புட்டிலின் ஆங்கண் ஈர்த்து, ஈங்கே
வருக, எம் பாக மகன்!
கிளர்மணி ஆர்ப்ப ஆர்ப்பச் சாஅய்ச் சாஅய்ச் செல்லும்     10

தளர் நடை காண்டல் இனிது; மற்று இன்னாதே
உளம் என்னா நுந்தை மாட்டு எவ்வம் உழப்பார்
வளை நெகிழ்பு யாம் காணுங்கால்;
ஐய காமரு நோக்கினை அத்தத்தா என்னும் நின்
தேமொழி கேட்டல் இனிது; மற்று இன்னாதே                             15

உய்வு இன்றி நுந்தை நலன் உணச் சாஅய்ச் சாஅய்மார்
எவ்வநோய் யாம்காணுங் கால்;
ஐய திங்கள் குழவி வருகென யான் நின்னை
அம்புலி காட்டல் இனிது; மற்று இன்னாதே
நல்காது நுந்தை புறம்மாறப் பட்டவர்                                           20

அல்குல்வரி யாம்காணுங் கால்;
ஐய! எம் காதில் கனம்குழை வாங்கிப் பெயர்தொறும்,
போதுஇல் வறுங்கூந்தல் கொள்வதை, நின்னையான்
ஏதிலார் கண்சாய, நுந்தை வியன் மார்பில்
தாதுதேர் வண்டின் கிளைபாடத் தைஇய                                   25

கோதை பரிபு ஆடக் காண்கும்.

மருதன் இளநாகனார் (கலித்தொகை : 80)

திணை: மருதம்

துறை: பரத்தையின் பிரிந்து வந்த தலைவன் சிறைப்புறத்தானாகத் தலைவி மகனுக்கு உரைத்தது.

அருஞ்சொற்பொருள்: நயம் = அன்பு; கயம் = மென்மை; முக்காழ் = மூன்றுவடம்; தைஇ = அழுத்தி; பருதி = வட்டப்பலகை, கைபுனை வேழம் = யானை மொம்மை; புரிபுனை = முறுக்கிச் செய்த; பாகமகன் = பலகைத் தேரை ஓட்டி வருவதால் பாகன்;  சாஅய்ச் சாஅய்ச் = நொந்து தளர்வார்; வாங்கி = இழுத்து; எவ்வம் உழத்தல் = துன்புறுதல்; பரிபு = அறுத்து.






No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்: