Pages

Friday, 13 April 2018

சங்க இலக்கியத் தூறல் - 18 : அவள் என்னை வெறுப்பாளோ?


அவள் என்னை வெறுப்பாளோ?

--- அன்பு ஜெயா, ஆஸ்திரேலியா

அகன்று விரிந்த வானத்தில் கருமேகங்கள் சூழ்ந்திருந்தன அன்று. அந்தக் காட்டின் சுற்றுப்புறம் எல்லாம் நடுங்குமளவுக்கு மின்னலுடன் கூடிய இடிமுழக்கம் விண்ணைப் பிளந்தது. கருமேகமானது சுவையான நீருள்ள நுங்கின் கண்கள் சிதறுவது போல பனிக்கட்டிகளுடன் கூடியப் பெருமழையைப் பெய்து கொண்டிருந்தது. சிலம்பொன்றிலிருந்து முத்துப் பரல்கள் சிதறி விழுவதைப்போல ஆலங்கட்டி மழை பெய்த அழகான விடியற்காலைப் பொழுது அது.
  


செவ்வண்ணம் தீட்டப்பட்டது போல் தோன்றிய அந்தச் செம்மண் நிலத்திலுள்ள பள்ளங்களில் மழைநீர் தேங்கி இருந்தது. அப்படித் தேங்கி இருந்த மழைநீர் அந்தப் பள்ளங்களில் சிறிய அலைகளை எழுப்பிக் கொண்டிருந்தது. முறுக்குடைய கொம்பைக் கொண்ட ஆண்மானும், தங்கள் குட்டிகளை அணைத்தவாறு பெண்மானும் அங்குத் தேங்கியிருந்த தண்ணீரைக் குடித்து தங்கள் தாகத்தைத் தீர்த்துக்கொண்டன. தாகம் தீர்ந்ததும் அங்கிருந்த குருந்தமரத்தின் நிழலில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தன.

இனிய ஓசையை எழுப்பிக்கொண்டு உலவும் வண்டுகள் பிடவச் செடியில் உள்ள அரும்புகளை ஊதி மலரச் செய்துகொண்டிருந்தன. மயில்கள் தங்கள் அழகிய தோகையை விரித்தபடி ஆடிக்கொண்டிருந்தன. வரிவரியாகக் காட்சி அளிக்கும் அந்த மணற்பரப்பின் மீது நீலநிறக் காயாம்பூக்கள் உதிர்ந்து விழுந்து எங்கும் பரவிக்கிடந்தன. அவற்றின் இடையிடையே சிவப்பு நிறத் தம்பலப்பூச்சிகள் ஊர்ந்துகொண்டிருந்தன. இந்தக் காட்சியானது, அந்த செம்மணற்பரப்பின் மீது நீல மணிகளும் சிவந்த பவள மணிகளும் கலந்தது போல ஓர் அழகான தோற்றத்தைத் தந்துகொண்டிருந்தது. இந்த அழகினைச் சுமந்தபடி கார்காலமானது தனது ஆட்சியைத் தொடங்கிக் கொண்டிருந்தது.

தலைவன் யானைப் படையையுடைய தன் அரசனின் ஆணையை நிறைவேற்ற தன் தலைவியைப் பிரிந்து வேற்று நாட்டுக்கு வந்திருந்தான். வந்த இடத்தில் தன் பாசறையில் தங்கியிருந்த தலைவனுக்கு கார்காலத்தின் அழகிய காட்சியினைக் கண்டதும் தன் தலைவியின் நினைவு வருத்தியது. அவளை நினைத்து வருந்தினான்.

“கார்காலத்தில் திரும்பி வந்துவிடுவதாகக் கூறிவிட்டு வந்தோம். ஆனால் போரின் நிமித்தம் இங்கேயே தங்கும்படி ஆகிவிட்டது. அவளைப் பிரிந்து நாம் அனுபவிக்கும் பிரிவுத் துயரை தலைவி அறியமாட்டாள். நான் அவள் மீது அன்பில்லாதவன் என்று நினைத்து வருந்தி என்னை வெறுத்து விடுவாளோ!”, என்று தன் நெஞ்சுக்குக் கூறுகிறான் தலைவன்.

இந்தக் காட்சியினைப் பின்வரும் பாடலில் சிறப்பாகப் படைத்துள்ளார் சங்கப்புலவர் இடைக்காடனார்.

இருவிசும்பு இவர்ந்த கருவி மாமழை,
நீர்செறி நுங்கின் கண்சிதர்ந்தவை போல்,
சூர்பனிப் பன்ன தண்வரல் ஆலியொடு
பரூஉப் பெயல் அழிதுளி தலைஇ, வான்நவின்று,
குரூஉத்துளி பொழிந்த பெரும்புலர் வைகறை,             5
செய்து விட்டன்ன செந்நில மருங்கில்,
செறித்து நிறுத்தன்ன தெள் அறல் பருகி,
சிறுமறி தழீஇய தெறிநடை மடப்பிணை,
வலம்திரி மருப்பின் அண்ணல் இரலையொடு,
அலங்குசினைக் குருந்தின் அல்குநிழல் வதிய,      10
சுரும்புஇமிர்பு ஊத, பிடவுத் தளை அவிழ,
அரும்பொறி மஞ்ஞை ஆல, வரிமணல்
மணிமிடை பவளம் போல, அணிமிகக்
காயாஞ் செம்மல் தாஅய், பலவுடன்
ஈயல் மூதாய் ஈர்ம்புறம் வரிப்ப,                      15
புலன்அணி கொண்ட கார்எதிர் காலை,
''ஏந்து கோட்டு யானை வேந்தன் பாசறை
வினையொடு வேறுபுலத்து அல்கி, நன்றும்
அறவர் அல்லர்நம் அருளாதோர்'' என,
நம்நோய் தன்வயின் அறியாள்,                       20
எம்நொந்து புலக்கும்கொல், மாஅ யோளே?

--- இடைக்காடனார் (அகநானூறு – 304)
திணை: முல்லை


அருஞ்சொற்பொருள்: இருவிசும்பு – அகன்ற வானம், கருவி – மின்னல், இடி முதலியன, ஆலி – பனிக்கட்டி, அழிதுளி – மழைத்துளி, சிறுமறி – மான்குட்டி, மடப்பிணை – பெண்மான், இரலை-  ஆண்மான், மருப்பு – கொம்பு, சுரும்பு – வண்டு, மணி மிடை பவளம் – நீலமணியோடு, சிவந்த பவளம் கலந்தது, செம்மல் – உதிர்ந்த பூ, மூதாய் – தம்பலப்பூச்சி (இந்திர கோபப் பூச்சி).


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்: