அன்று அவள் இன்று நான்
--- அன்பு ஜெயா, ஆஸ்திரேலியா
எங்கள் வீட்டருகே பசலைக் கொடி ஒன்று நன்றாக வளர்ந்து
படர்ந்திருந்தது. ஒரு நாள், மானின்
விழிகொண்ட என் ஆசை மகள் மகிழ்ச்சியுடன் அந்த இடத்தில் பந்து விளையாடிக் கொண்டிருந்தாள்.
அப்போது கன்றை ஈன்ற பசு ஒன்று எங்கள் வீட்டுப் பக்கம் வந்தது. திடீரென்று ஓர் அலறல் சத்தம் கேட்டது. நானும்
செவிலித்தாயும் அலறியடித்துக் கொண்டு வெளியே சென்று பார்த்தோம். அப்போது என் மகள்
தன் கையில் வைத்திருந்த பந்தையும் தூக்கி எறிந்து விட்டு; தன் மகளைப்போல் அவள் பாவித்து விளையாடும் பொம்மையையும்
ஓர் இடத்தில் வைத்துவிட்டு, என் மகள்
தன் வயிற்றில் அடித்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தாள்.
அவளைச் சமாதானப் படுத்துவதற்காக நானும் செவிலித்தாயும்
அவளுக்குத் தேன்கலந்த பாலினை அருந்தக் கொடுத்தோம். அதையும் அருந்தாமல் எங்கள் ஆசை
மகள் அழுதுகொண்டே இருந்தாள். அங்கு என்ன
நடந்ததென்று பிறகுதான் எங்களுக்கு விளங்கியது. எங்கள் வீட்டின் அருகில்
வளர்ந்திருந்த அந்தப் பசலை கொடியை அந்த மாடு தின்று இருந்தது. அதைப் பார்த்த
அவளால் அதைத் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் அவள் அப்படியெல்லாம் தன்
துயரத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தாள். அது என் மகள் சிறுமியாக இருந்த காலம்.
ஒரு தலைவனும் தலைவியும் களவு ஒழுக்கத்தில்
ஈடுபட்டிருந்தனர். அவர்கள் இருவரும்
சந்தித்து அளவளாவிட அவளுடைய தோழி அவர்களுக்கு உடந்தையாய் இருந்தாள். தலைவியின் நடையுடை பாவனைகளில் ஏற்பட்டிருக்கும்
மாற்றத்தை அவளுடைய பெற்றோர்கள் உணர ஆரம்பித்தனர். நம் பெண்ணுக்கு ஏதோ ஆகிவிட்டது
என்று நினைத்த பெற்றோர் அவளுக்காக
குறிபார்த்தலும் அவளுக்குத் தக்க ஒரு மணமகனைத் தேர்ந்தெடுப்பதிலும் முனைப்பாக ஈடுபட்டனர்.
இந்தச் சூழ்நிலையை அறிந்த அவளுடைய தோழி தலைவனும் தலைவியும் அறத்துடன் தங்கள் இல்வாழ்க்கையைத் தொடங்குவற்காக
உதவுவதற்கு முன்வந்தாள். தலைவன் எண்ணப்படி
தலைவியும் அவனுடன் தன் வீட்டைவிட்டு வெளியேறுவதற்குச் சம்மதித்தாள். அவளுடைய
பெற்றோர் அறியாதவாறு இருவரும் தலைவனின் ஊருக்குச் சென்று மணம் புரிந்தகொண்டு வாழ
முடிவு செய்தனர். ஒருநாள் தோழியின் உதவியுடன் அந்த ஊரைவிட்டுப் புறப்பட்டுச்
சென்றனர். அவர்களை வழியனுப்பிவிட்டு தோழி ஒன்றும் அறியாதவள் போல் வீட்டிற்கு வந்துவிட்டாள்.
மறுநாள், தன் மகளைக் காணாத பெற்றோர் அவளை எங்கெல்லாமோ தேடிச் சென்றனர்.
வழியில் எதிர்ப்பட்ட ஒரு சிலர் அவர்களுடைய
மகள் ஒரு ஆடவனுடன் செல்வதைப் பார்த்ததாகவும், சிலர் அவர்கள்
மணம் புரிந்து கொண்டு அறமான இல்வாழ்வைத் தொடங்கினர் என்றும் தெரிவித்தனர்.
அதை அறிந்த அவள் தாயின் மனத்திரையின் ஊடாக மழலை பேசிய தன் மகள்
பேதைப் பருவத்தில் (12 வயது வரை) செய்த தீமையற்ற செயல்களும், பெதும்பைப் பருவத்தில் (12 முதல் 24 வயது வரை)
அவளிடம் ஏற்பட்ட மாற்றங்களும் ஓடிக்கொண்டிருந்தன. அந்த நினைவலைகள் அவளுடைய
செஞ்சத்தை உருக்கின.
அன்று ஒரு பசலைக் கொடியை மாடு தின்று விட்டதற்காக கதறிக்கதறி
அழுத அந்தப் பெண் இன்று கரிய மீசையும் தாடியும் உடைய ஓர் ஆண்மகன் சொன்ன பொய்யான
சொற்களை நம்பி தன் வெண்மையான பற்கள் மகிழ்ச்சியை
வெளிப்படுத்த பாலை நிலத்தின் வழியாக சென்று விட்டாளே! எப்படி வாழப்போகிறாளோ!
என்றெல்லாம் பெற்ற தாயின் மனம் தவிதவித்தது.
அன்று பசலைக் கொடியை மாடு தின்றதைக் கண்டு வருந்தினாள் என்
மகள். இன்று நான் வளர்த்த மகளை ஓர் ஆடவன் கொண்டு சென்றதை அறிந்து
அதே போன்ற நான் வருத்தத்தில் ஆழ்ந்திட நேர்ந்ததே என்று தாய் பரிதவித்தாள்.
இந்தக் காட்சியை உமட்டூர் கிழார் மகனார் பரங்கொன்றனார் பின்
வரும் பாடலில் அருமையாகச்
சித்தரித்துள்ளார்.
இல் எழு வயலை ஈற்றுஆ தின்றென,
பந்து நிலத்து எறிந்து, பாவைநீக்கி,
அவ்வயிறு அலைத்த என் செய்வினைக் குறுமகள்
மான் அமர்ப்பு அன்ன மையல் நோக்கமொடு, யானும் தாயும் மடுப்பத் தேனொடு 5
தீம்பால் உண்ணாள் வீங்குவனள் விம்மி,
நெருநலும் அனையள் மன்னே இன்றே,
மை அணற் காளை பொய் புகல் ஆக,
அருஞ்சுரம் இறந்தனள் என்பதன்
முருந்துஏர் வெண் பல்முகிழ் நகை திறந்தே. 10
--- பரங்கொன்றனார்
(நற்றிணை – 179)
திணை: பாலை
துறை: மனை மருட்சி
அருஞ்சொற்பொருள்: அ – அழகு, அணல் –
தாடி, முருந்து – மயில் இறகு, மடுப்ப
– ஊட்டவும், வயலை – பசலை.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்: