பசித்தபோது உண்ணாமல்......
---
அன்பு ஜெயா, சிட்னி
அடடடா! இவளை என்னால் பிடிக்க முடியவில்லையே! ஓடிக்கொண்டே
இருக்கிறளே! அவளுக்காக தேன் கலந்த இந்தப் பாலை பொற்கிண்ணத்தில் ஏந்திக்கொண்டு அவளைத்
துரத்திகொண்டே இருக்கிறேன். அவளைச் சாப்பிட வைப்பதே பெரிய பாடாக இருக்கிறதே. சிறிய
கொம்பு ஒன்றைக் கையில் எடுத்துக்கொண்டு மிரட்டினாலும் அவள் பிடிவாதமாக
இருக்கிறாளே. கொம்பைக் கையில் எடுத்ததும் பொன் போன்ற கால் சிலம்புகள் அழகிய ஒலியை
எழுப்ப துள்ளித்துள்ளி ஓடி முற்றத்திலே உள்ள பூப்பந்தலில் புகுந்து ‘நான்
உண்ண மாட்டேன்’ என்று விளையாட்டு காட்டுகிறாளே. மெல்லிய நரை விழுந்த
என்னால் அவளைத் துரத்திப் பிடிக்கவும் முடியவில்லையே.
அன்று அப்படியெல்லாம் விளையாடிய சிறுமி, இன்று
எப்படி இப்படி மாறிவிட்டாள்! கணவன் வீட்டில் அவள் பின்பற்றுகின்ற ஒழுக்கத்தையும் மனையறத்தின் மாண்பையும் எப்போது கற்றாள்? எங்கே
கற்றாள்? அவள் விருந்தினரை உபசரிப்பதையும்,
சுற்றத்தாரைக் கவனிப்பதையும் பார்க்கும்போது என் மனத்தில் வியப்புடன் மகிழ்ச்சி
பொங்குகின்றது.
அவள் கணவன் குடும்பத்தில் வறுமை வந்ததை அறிந்து அவளுடைய
தந்தை அவர்களுக்கு உதவும் என்ற எண்ணத்துடன் அளிக்க முன்வந்த உதவிகளையும் வேண்டாம்
என்று சொல்லிவிட்டு தன் கணவனின் வருமானம் சிறியதானாலும் அதற்குள் தன் குடும்பத்தை
எவ்வளவு சிறப்பாக நடத்திக்கொண்டு இருக்கிறாள். நிலைமைக்கு ஏற்றதுபோல்,
பசித்தபோது உண்ணாமல் கிடைத்தபோது உண்ணும் பழக்கத்தை எங்கிருந்து பெற்றாளோ நான்
வளர்த்த என் செல்வ மகள்.
தன் வளர்ப்பு மகளைப் பார்த்துவிட்டு வருவதற்காக மகளின்
புகுந்த வீட்டுக்குச் சென்ற செவிலித்தாய்,
மகளிடம் விடைபெற்றுக்கொண்டு திரும்பி வரும்போது இவ்வாறெல்லாம் தன் மனத்தில்
எண்ணிக்கொண்டே வந்தாள். வீட் வந்து சேர்ந்ததும் அதை மகளைப் பெற்ற தாயிடமும் கூறி
தன் வியப்பை வெளிப்படுத்துகின்றாள்.
இந்தக் காட்சியினை சங்கப் புலவர் பூதனார் அழகிய கவி
நயத்துடன் பின் வரும் பாடலில் வடித்துள்ளார்.
பிரசம் கலந்த வெண்சுவைத் தீம்பால்
விரி கதிர்ப் பொற்கலத்து ஒருகை ஏந்திப்
புடைப்பின் சுற்றும் பூந்தலைச் சிறுகோல்,
''உண்'' என்று
ஓக்குபு பிழைப்ப,
தெண் நீர்
முத்து அரிப் பொற்சிலம்பு ஒலிப்பத் தத்துற்று, 5
அரி நரைக் கூந்தற் செம்முது செவிலியர்
பரி மெலிந்து ஒழிய, பந்தர்
ஓடி,
ஏவல் மறுக்கும் சிறு விளையாட்டி
அறிவும் ஒழுக்கமும் யாண்டு உணர்ந்தனள்கொல்?
கொண்ட கொழுநன் குடி வறன் உற்றெனக், 10
கொடுத்த தந்தை கொழுஞ் சோறு உள்ளாள்,
ஒழுகுநீர் நுணங்கு அறல் போல,
பொழுது மறுத்து உண்ணும் சிறு மதுகையளே.
- பூதனார்
(நற்றிணை – 110)
திணை: பாலை
துறை: மகள்நிலை உரைத்தலும் ஆம்
அன்று சிறு பெண்ணாக ஓடித் திரிந்தவளின் குறும்பினையும் அதே
பெண் இன்று இல்லறம் நடத்தும் அழகினையும், வருவாய்க்கு
ஏற்றபடி குடும்பம் நடத்த வேண்டியதன் முக்கியத்துவத்தையும் எவ்வளவு அழகாக இந்தப்
பாடலிலே புலவர் எடுத்துக் கூறி உள்ளார்.
இந்நாளில்கூட நமது சமுதாயத்தில் இது நடந்துகொண்டுதானே
இருக்கிறது. பெண்கள்தான் எவ்வளவு விரைவில் தங்களை மாற்றிக்கொண்டு குடும்பப்
பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்கள்! அவர்கள் பாராட்டப்பட வேண்டியவர்கள்.
அருஞ்சொற்பொருள்:
பிரசம் – தேன், பூந்தலைச்
சிறுகோல் – மெல்லிய நுனியையுடைய சிறுகுச்சி,
தத்துற்று – துள்ளி ஓடி, புடைத்தல் – அடித்தல், பரிதல்
– ஓடுதல், அரி நரை – மெல்லியநரை.
பாடல் பொருள் விளக்கம் அருமை. அனைவருக்கும் புரியும் விதத்தில் மிக எளிய நடையில் உள்ளது.வாழ்த்துக்கள்.
ReplyDeleteஉங்கள் வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி
Delete