அவள்தானா இவள்...........!!!
--- அன்பு ஜெயா, சிட்னி
அன்று சந்திரனின் ரோகிணி நட்சத்திரம் கூடிய நன்னாள். அனைத்து தோஷங்களும்
நீங்கிய சுபதினம் அதுவென்றும் திருமணத்திற்கு உகந்த நாள் அன்று என்றும்
பெரியோர்கள் எங்களுடைய திருமணத்திற்கு நாள் குறித்திருந்தனர். அன்று திருமண வீட்டை
சுத்தம் செய்து அலங்கரித்து முதலில் இறைவழிபாடு செய்தனர். மங்கல நாளன்று ஒலிக்கும்
முழவும்,
முரசும் ஒலித்தன. திருமணத்தில் கலந்துகொண்டு எங்களை வாழ்த்த வந்திருந்தவர்களுக்கு நெய்யும்
இறைச்சியும் கலந்த செய்த புலவு சோற்றை விருந்தாகப் படைத்தனர்.
அன்று இரவு மகளிர் ஒன்று சேர்ந்து தலைவிக்கு மங்கல
நீராட்டினர். மழை பெய்ததால் துளிர்விட்ட
அருகம்புல்லின் கிழங்கில் தளிர்த்த நீலமணியைப் போன்ற அரும்புகளுடன் மென்மையான வாகை
மரத்தின் இலைகளைச் சேர்த்து வெண்மையான நூலால் மாலையாகக் கட்டி அவளுக்குச்
சூட்டினர். தூய ஆடையை அவளுக்கு அணிவித்து, அலங்காரப் பொருள்களால் அவளை அழகு படுத்தினர். அப்படித் தன் அழகுடன்
அழகுப் பொருட்களையும் சுமந்து மணப்பந்தலிலே அமர்ந்திருந்த அவளுக்கு வியர்க்கவே, விசிறி கொண்டு மகளிர் அவளுடைய வியர்வையைப் போக்கினர். சடங்குகளெல்லாம் முடிந்த பின்னர், அவளைக் குறும்புப் புன்னகையுடன் பார்த்த வண்ணம் தங்கள் மகிழ்ச்சியை
வெளிப்படுத்திய அம்மகளிர், அவளை என்னுடைய இல்லத்தரசியாக அழைத்து
வந்து எங்களைத் தனியே விட்டு அகன்றனர். எங்களுடைய
முதலிரவு அது.
அந்த முதலிரவில் புத்தாடையை
உடம்பு முழுவதும் போர்த்திக்கொண்டு என் தலைவி படுத்துக்கிடந்தாள். ‘அவள்
உறங்குகிறாளா? படபடக்கின்ற அவள் நெஞ்சத்தின் சத்தம் வெளியில்
கேட்டுவிடமால் இருப்பதற்காக இறுகப் போர்த்திக் கொண்டிருக்கிறாளா?
கழுத்தில்
ஆம்பல் மலர் மாலையை அணிந்திருந்தாளே, விரைப்பான புத்தாடையின் உள்ளே அவள் உடம்பெல்லாம் வியர்த்துவிடாதா!’, என்றெல்லாம்
எண்ணிக்கொண்டு அவள் அருகில் சென்றேன்.
“உடம்பு முழுதும் போர்த்திக்கொண்டு இருப்பதால், புழுக்கத்தில்
சந்திரன் போன்ற உன் நெற்றியில் வியர்வை வடிகிறதே. வியர்வை நீங்க சற்று காற்று
வரும்படி திறந்து வையேன்,” என்று அன்பு மிகுதியால் அவள் போர்த்திக் கொண்டிருந்த
ஆடையை சற்று விலக்கினேன்.
ஆடையை விலக்கியதுதான் தாமதம், உறையிலிருந்து
வெளிவந்த வாளினைப்போல் அவள் உருவம் வெளித்தோன்றிப் பிரகாசித்தது. அப்போது வெளிப்பட்ட
அவளுடைய உறுப்புகளை மறைக்க வழிதெரியாது ஒரு கணம் திணறினாள். தன் கழுத்திலிருந்த
மாலையைக் கழற்றிவிட்டு, வண்டுகள் மொய்க்கக்கூடிய மலர்களை
அணிந்திருந்த தன் கூந்தலை அவிழ்த்து அந்த கரிய கூந்தலுக்குள் மறைக்க முடிந்த உறுப்புகளை
மறைத்து, வெட்கத்துடன் தலைகுனிந்து நின்றாள். என் உயிருக்கு
உடம்பாக இருந்தவள் அன்று நான் செய்த குறும்பினை விரும்பி,
என்னை வணங்கி நின்றாள்.
இப்படியெல்லாம் இருந்த அவள், இன்று நான் என்னதான்
கூறினாலும் ஏற்காமல், ஊடல் தணியாமல் இருக்கிறாளே! என் மீது அன்று
அவளுக்கிருந்த அன்பும் ஆசையும் எங்கே போய்விட்டது? அவையெல்லாம்
காலத்தில் கரைந்து போய்விட்டனவோ! இவளுக்கும் எனக்கும் என்ன உறவு! அன்று இருந்த என்னவள்தானா இவள்!
இவ்வாறு தலைவன் தன் மனம் வருந்தி
தன்னுடைய நெஞ்சுக்குக் கூறுகின்றான். அந்தக் காட்சியைத் தன் பாடலிலே அழகிய இலக்கிய
நயத்துடன் எடுத்துரைக்கிறார் சங்கப் புலவர் விற்றூற்று மூதெயினனார்.
மைப்பு அறப் புழுக்கின்
நெய்க் கனி வெண் சோறு
வரையா வண்மையொடு புரையோர்ப்
பேணி,
புள்ளுப் புணர்ந்து இனிய ஆக, தெள் ஒளி
அம் கண் இரு விசும்பு விளங்க, திங்கட் 5
சகடம் மண்டிய துகள் தீர்
கூட்டத்து,
கடி நகர் புனைந்து, கடவுட் பேணி,
படு மண முழவொடு பரூஉப் பணை
இமிழ,
வதுவை மண்ணிய மகளிர்
விதுப்புற்று,
பூக்கணும் இமையார் நோக்குபு
மறைய, 10
மென் பூ வாகைப் புன் புறக்
கவட்டிலை,
பழங் கன்று கறித்த பயம்பு
அமல் அறுகைத்
தழங்குகுரல் வானின்
தலைப்பெயற்கு ஈன்ற
மண்ணு மணி அன்ன மாஇதழ்ப்
பாவைத்
தண் நறு முகையொடு வெண் நூல்
சூட்டி, 15
தூ உடைப் பொலிந்து மேவரத்
துவன்றி,
மழை பட்டன்ன மணல் மலி பந்தர்,
இழை அணி சிறப்பின் பெயர்
வியர்ப்பு ஆற்றி,
தமர் நமக்கு ஈத்த தலைநாள்
இரவின்,
''உவர் நீங்கு கற்பின்
எம் உயிர் உடம்படுவி! 20
முருங்காக் கலிங்கம்
முழுவதும் வளைஇ,
பெரும் புழுக்குற்ற நின்
பிறைநுதற் பொறி வியர்
உறு வளி ஆற்றச் சிறு வரை திற'' என
ஆர்வ நெஞ்சமொடு போர்வை
வவ்வலின்,
உறை கழி வாளின் உருவு
பெயர்ந்து இமைப்ப, 25
மறை திறன் அறியாள்ஆகி, ஒய்யென
நாணினள் இறைஞ்சியோளே பேணி,
பரூஉப் பகை ஆம்பற் குரூஉத்
தொடை நீவி,
சுரும்பு இமிர் ஆய்மலர்
வேய்ந்த
இரும் பல் கூந்தல் இருள் மறை
ஒளித்தே. 30
திணை: மருதம்
துறை: உணர்ப்புவயின் வாரா ஊடற்கண்
தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லியது.
- விற்றூற்று மூதெயினனார் --- (அகநானூறு - 136)
அருஞ்சொற் பொருள்:
மைப்பு – குற்றம், புழுக்கின் –
இறைச்சியுடன் சேர்த்து செய்த உணவு, புரையோர்- உயர்ந்தோர், சகடம் – ரோகிணி, கடி நகர் – மணவீடு, பரூவுப் பணை – பெரிய முரசம், மண்ணுமணி – கழுவிய
நீலமணி, பாவை – பாவைபோலும் கிழங்கு, முருங்காக் கலிங்கம் – கசங்காத உடை, மறை ஒளித்து – உறுப்புக்களை மறைத்து.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்: