Pages

Friday, 16 February 2018

சங்க இலக்கியத் தூறல் – 14

சங்ககால மக்களின் அகவாழ்க்கை 
   அன்பு ஜெயா, சிட்னி

அகப்பாடல்கள் மனித உணர்வுகளைப்பற்றி பாடப்பட்டவை. பொதுவாகக் காதல் உணர்வுகள் பற்றி இருந்தாலும் ஒரு தனிநபரைக் குறிப்பிட்டுக் காட்டும்படி இருக்காது, பொதுவாக ஒரு ஆணைப்பற்றியோ பெண்ணைப்பற்றியோ, ஆண்பெண் உறவைப் பற்றியோ, அவர்களின் உணர்வுகளைப் பற்றியோ இருக்கும்.

அந்த உணர்வுகளின் அடிப்படையில் அகப்பாடல்களை ஐந்து வகையாக, ஐந்து திணைகளாகப் பிரித்து உள்ளனர். அவை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்னும் ஐந்து திணைகளாகும். திணை என்பது ஒழுக்கம், வாழ்க்கை நெறியைக் குறிக்கும்.

ஓர் ஆண் பெண்ணின் உறவு, அவர்கள் வாழ்வில் நடைபெறும் நிகழ்ச்சிகளும் பாடுபொருளாக அமைந்திருக்கும். அது உரிப்பொருள் என்று கூறப்படும்.
பாடலின் குறிக்கின்ற களம் (நிலம்), காலம் ஆகியவை முதற்பொருள் ஆகும்.

நிகழ்ச்சியை உருவகப்படுத்திக் காண்பிப்பதற்குப் பயன்படும் கருவிகள் - பாடலின் கருப்பொருள் என்று கூறப்படும். உதாரணமாக: தெய்வம், உணவு, விலங்கு, மரம், பறவை, ஊர், நீர், மலர்கள் போன்றவை கருப்பொருளாக அமையும்.

ஆண் தலைவன் என்றும் பெண் தலைவி என்றும் அழைக்கப்படுவர். 

குறிஞ்சித் திணை – புணர்தலும் புணர்தல் நிமித்தமும்.

ஓர் ஆணும் பெண்ணும் மனத்தளவில் ஒன்றுபடுதலும் அதைச் சார்ந்த நிகழ்ச்சிகளும் பாடுபொருளாக அமைந்திருக்கும். ஆண் தலைவன் என்றும் பெண் தலைவி என்றும் அழைக்கப்படுவர்.  குறிஞ்சித் திணையின் நிலம் மலையும் மலை சார்ந்த இடமும்.
புணர்தல் என்பது மனத்தளவில் ஒன்றுபடுதல், உடல் சேர்க்கை அல்ல.

புணர்ச்சி பழகுதல் வேண்டா உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும் – குறள் 785.

இந்தக் குறளில் நண்பர்கள் சந்தித்து உரையாடுவதையே வள்ளுவர் புணர்ச்சி என்று கூறுகிறார்.


முல்லைத் திணை – இருத்தலும் இருத்தல் நிமித்தமும்.

தலைவனும் தலைவியும் மணம் முடித்து இல்லற வாழ்வை ஆரம்பிக்கின்றனர். வாழ்வதற்குப் பொருள் தேவைப்படும். அதற்காக தலைவன் வெளியூர் செல்ல வேண்டியிருக்கும், மன்னனுடன் போருக்குச் செல்ல வேண்டிய தேவை இருக்கும். அவன் திரும்பி வரும்வரை தலைவி அவனுடைய பிரிவைத் தாங்கிக்கொண்டு அவனுக்காகக் காத்துக்கொண்டு இருப்பாள். இதுவே இருத்தலும் இருத்தல் நிமித்தமும் என்பது.

அந்தக் காலத்தில் மழைப் பருவத்தில் (கார் காலம்) போர் நடைபெறாது. மன்னர் தம் படையுடன் வீடு திரும்பிவிடுவர். போருக்குச் செல்லும் தலைவன் கார் காலம் துவங்கும்போது திரும்பிவருவேன் என்று தலைவியிடம் கூறிவிட்டுச் செல்வான். இந்தப் பிரிவில் தலைவி கண்ணீர் வடித்து இரங்குதல் கூடாது.

போர் நடக்கும் இடம் ஊருக்கு வெளியே வெகுதூரத்தில் பொட்டல் வெளியில் அல்லது காடுகளில் நடக்கும். காடு என்பது புன்செய் நிலத்தைக் குறிக்கும். இதனால், காடும் காடுசார்ந்த இடமும் முல்லைக்கு உரிய நிலமாகும்.


மருதத் திணை – ஊடலும் ஊடல் நிமித்தமும்

இல்லற வாழ்வில் சின்னச்சின்ன கருத்து வேறுபாடுகள், அதனால் கோபம், மனக்கசப்பு இவை உண்டாகும். அதை ஊடல் என்று கூறுவார்கள். அப்படி ஊடலும் ஊடல் நிமித்தமும்  கொண்ட பாடலின் திணை மருதத் திணை. வயலும் வயல் சார்ந்த இடமும் மருதத் திணைக்கு உரிய நிலம்.


நெய்தல் திணை – இரங்கலும் இரங்கல் நிமித்தமும்

தலைவன் தலைவியிடையே ஏற்பட்ட பிரிவைத் தலைவி தாங்கிக்கொள்ள முடியாமல் கவலை கொள்ளலாம் அல்லது பிரிந்து சென்ற தலைவன் ஆபத்தில்லாமல் திரும்பி வரவேண்டுமே என்று துயரப்பட்டு கலங்கலாம். இது இரங்கலும் இரங்கல் நிமித்தமும் என்ற உரிப்பொருளாகும். இவ்வகைப் பாடலின் திணை நெய்தல் திணை. கடலும் கடல் சார்ந்த இடமும் நெய்தல் திணைக்கு உரிய நிலம்.


பாலைத் திணை – பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

தலைவனும் தலைவியும் ஒன்றாக இருக்கும்போதே, பிரியக்கூடிய சூழ்நிலை ஏற்படலாம். தலைவன் தலைவி இவர்களுக்கு இடையே ஏற்படும் நீண்ட பிரிவின்போது உண்டாகும் உணர்வு. அதனால் ஏற்படக்கூடிய துன்பத்தை நினைத்து வருந்தி, ஒன்றாக இருப்பதன் அருமையை எண்ணி மனம் திடம் கொள்வது பிரிதலும் பிரிதல் நிமித்தமும் என்ற உரிப்பொருளாகும்.  இவ்வகைப் பாடலின் திணை பாலைத் திணை. பாலை வறட்சியைக் குறிக்கும். குறிஞ்சி மலைப் பகுதிகளும், முல்லை நிலமும் நீண்ட நாள் மழையின்றி இருந்தால் வறண்டுபோகும். அப்படி வறண்ட பகுதி பாலை நிலம் எனப்படும்.

திணைகளுக்கு உரிய தெய்வங்கள்

ஒவ்வொரு திணைக்கும் உரிய தெய்வங்களங்களாக பின்வரும் தெய்வங்களை வழிபட்டனர்.

முல்லை    -      திருமால்
குறிஞ்சி     -      முருகன்
மருதம்      -      இந்திரன்
நெய்தல்     -      வருணன்
பாலை      -      கொற்றவை.


குறிஞ்சித் திணைப் பாடல்

களவு ஒழுக்கத்தையே தொடரும் தலைவன், தலைவியைக் காண வேலிப்புறம் வந்து நிற்பதை அறிந்த தோழி, அவன் விரைவில் தன்னுடைய தலைவியைத் திருமணம் செய்துகொள்ள வேண்டுமென்று நினைக்கும் தோழி, அவன் காதில் விழும்படி அவனது நட்பைப் பழித்து தன் தலைவியிடம் கூறிகிறாள். தலைவியோ அந்த நட்பே சிறந்தது என்று கூறுகிறாள்.

நிலத்தினும் பெரிதே; வானினும் உயர்ந்தன்று;
நீரினும் ஆர்அள வின்றே – சாரல்
கருங்கோற் குறிஞ்சிப்பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. (குறுந்தொகை – 3)

“தோழி, மலைப்பக்கத்திலே உள்ள கரிய கொம்புகளை உடைய குறிஞ்சி மரத்தின் மலர்களைக் கொண்டு வண்டுகள் தேனை சேகரிக்கும் இடமாகிய நாட்டினனான தலைவனுடன் நான் செய்த இந்த நட்பானது, நிலத்தைக் காட்டிலும் அகலத்தாற் பெரியதாகும்; வானைக்காட்டிலும் உயர்ந்ததாகும், உள்ளே புகுந்து எல்லை காணப் பார்த்தால் கடல் நீரைக்காட்டிலும் ஆழமானதாகும். இதை நீ அறிந்துகொள்”, என்று தலைவி கூறுகிறாள்.


முல்லைத் திணைப் பாடல்

மழைக்காலம் வருவதை உணர்ந்த தலைவி, அதற்குள் திரும்பி வந்துவிடுவேன் என்று சொல்லிவிட்டுப்போன தலைவன் வராததைக் கண்டு வருந்துகிறாள். அப்போது அவளைத் தேற்றுவதற்கு முயற்சி செய்யும் தோழியிடம் தன்னுடைய நிலைமையைத் தலைவி விளக்குகிறாள்.

மழைவிளை யாடும் குன்றுசேர் சிறு குடிக்
கறவை கன்று வயின் படரப், புறவில்
பாசிலை முல்லை ஆசுஇல் வான்பூச்
செவ்வான் செவ்வி கொண்டன்று;
உய்யேன் பொல்வல்-தோழி! யானே!  (குறுந்தொகை – 108)

தோழி! மேகங்கள் தவழ்ந்து விளையாடுகின்ற இடமாகிய குன்றத்தைச் சேர்ந்தது நம்முடைய ஊர். இங்கிருந்து மேய்வதற்காக வெளியில் சென்ற கறவைப் பசுக்கள், தங்கள் கன்றுகளின் நினைவு அதிகமாக வீடுநோக்கி செல்கின்றன. முல்லை நிலத்திலே உள்ள பசுமையான இலைகளை உடைய முல்லையின் மலர்கள், அந்தச் செவ்வானத்தின் அழகைக் கொண்டுள்ளன. இந்த மழைக்கால மாலையில் என் தலைவர் திரும்பி வராததால் நான் உயிர் வாழமாட்டேன் என்று கூறுகிறாள்.


மருதத் திணைப் பாடல்

தலைவனுக்குத் தூதாக வந்த தோழியிடம் தலைவனை ஏற்கமாட்டேன் என்று தலைவி மறுத்துசொல்லும் காட்சி.

மலையிடை யிட்ட நாட்டவரும் அல்லர்,
மரந்தலை தோன்றா ஊரரும் அல்லர்;
கண்ணின் காண நண்ணுவழி இருந்தும்,
கடவுள் நண்ணிய பாலோர் போல,
ஓரீஇனன் ஒழுகும் என்னைக்குப்
பரியலென் மன்யான், பண்டுஒரு காலே.  (குறுந்தொகை – 203)

“தோழி! என் தலைவர் இடையிலே மலைகள் உள்ள தொலை தூரத்து நாட்டைச் சேர்ந்தவரும் இல்லை. மரங்களின் உச்சிகளால் மறைக்கப்பட்டிருக்கும் காட்டினைத் தாண்டி உள்ள ஊரைச் சேர்ந்தவரும் இல்லை. கண்ணால் காணுமளவுக்கு அருகிலும், வருவதற்கு ஏற்றபடி அருகிலும்தான் இருக்கிறார். ஆனால், கடவுளை நெருங்கி உள்ள பக்தர்கள் போல இல்வாழ்வினை வெறுத்து மனைவிடமிருந்து ஒதுங்கி வாழ்பவரைப்போல நடந்து கொள்கிறார். அப்படிப்பட்ட தலைவருக்கு நானும் முன்பு அன்புடையவளாகவே இருந்தேன். இப்போது அதுவும் தீர்ந்தது,” என்று கூறுகிறாள்.


நெய்தல் திணைப் பாடல்

தலைவன், திருமணத்திற்காகப் பொருள் தேடி தலைவியைப் பிரிந்து சொல்கிறான். அப்போது அவனுடைய பிரிவினால் தன் தூக்கத்தை இழந்து நிற்கும் தலைவி தூங்கி எழுந்த தோழியிடம் தன் நிலையைக் கூறுகிறாள்.

நள்ளென்ற றன்றே,யாமம்; சொல்அவிந்து
இனிதுஅடங் கினரே, மாக்கள்; முனிவுஇன்று;
நனந்தலை உலகமும் துஞ்சும்;
ஓர்யான் மன்ற துஞ்சா தேனே.    (குறுந்தொகை – 6)

“தோழி! சத்தமே இல்லாத நள்ளிரவு. அனைவரும் பேச்சு அடங்கி உறங்கிவிட்டனர். உலகத்திலுள்ள அனைத்து உயிர்களும் தம்மை மறந்து தூங்கிக்கொண்டிருந்தன. நிச்சயமாக நான் மட்டுமே தலைவனின் பிரிவால் உறக்கமின்றி வாடிக்கொண்டிருந்தேன்,” என்று கூறுகிறாள்.


பாலைத் திணைப் பாடல்

தலைவனைப் பிரிந்த காலத்தில் தலைவி பெரிதும் வாட்டமுற்று இருப்பதைக் கண்ட தோழி தேறுதல் கூறுகிறாள். தலைவனைத் தேட தூதுவரை அனுப்ப ஏற்பாடு செய்கிறாள். அவளிடம் தலைவி கூறுகிறாள்.

நிலம்தொட்டுப் புகாஅர்; வானம் ஏறார்;
விலங்குஇரு முந்நீர் காலின் செல்லார்;
நாட்டின் நாட்டின் ஊரின் ஊரின்
குடிமுறை குடிமுறை தேரின்,
கெடுநரும் உளரோ?-நம் காத லோரே.  (குறுந்தொகை – 130)

“தோழி! நம் தலைவர் அன்பிற்கு உரியவர். நிலத்தைத் தோண்டி அதனுள்ளே புகுந்துவிடவும் மாட்டார். வானத்தில் பறந்து உயரச்சென்று மறைந்துவிடவும் மாட்டார். பெருங்கடலில் மரக்கலம் ஏறி தொலைவிலுள்ள நாடுகளுக்கும் சென்றுவிடமாட்டார். அதனால், முறையாக நாடுகள்தோறும், ஊர்கள்தோறும், குடிகள்தோறும்  தேடினால்  அவர் அகப்படாமல் போவாரோ?,” என்று கூறுகிறாள்.

ஓர் ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஏற்படும் காதல் உணர்வை சங்க காலத்தில் எவ்வளவு அழகாக வெளிப்படுத்தி உள்ளார்கள் என்பதை நோக்கும்போது தமிழிரின் பண்பாட்டை நினைத்துப் பெருமிதம் கொள்ள முடிகிறது.  
----------------


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்கள்: