மலைச்சாரல்
காதலி!
--- அன்பு ஜெயா, சிட்னி
அதோ அந்த ஆழமான கடல்.
சங்குகள் வளரக் கூடிய அளவிற்கு ஆழத்தைக் கொண்ட
கடல். அதிலிருந்து எவ்வளவு சங்குகளை வெளியே எடுத்தாலும் குறையாது மேலும் மேலும் சங்குகள்
வளர்ந்துகொண்டே இருக்கும். பார்ப்பவர்க்கு
அந்த ஆழத்தைக் காட்டிக் கொடுப்பது போன்றதொரு
கரிய நிறத்தோற்றம். அந்தக் கடலின் கரிய நிறத்திற்கு நான் ஒன்றும் சளைத்து விடவில்லை
என்று கூறுவது போன்று அகன்ற வானிலே கரிய மேகக் கூட்டம். அந்த மேகக் கூட்டங்களைப் பிளந்துகொண்டு
பூமியை நோக்கிச் சீறிப் பாய்ந்து வரும் தீயின் கொடியை ஒத்த மின்னல்கள். அவற்றுடன் போட்டி
போடுவது போல மேகக் கூட்டங்கள் ஒன்றை யொன்று மோதிக் கொள்வதால் உண்டாகும் இடியோசை. இவற்றையெல்லாம்
தோற்கடிப்பேன் என்று சொல்லிக்கொண்டு, எப்பொழுதுதான் இது ஓயும் என்று
தெரியாதபடி, கொட்டும் மழை. அப்படிப்பட்ட ஒரு கார்காலத்தின் நள்ளிரவு.
காவலர்கள் சோர்ந்திருந்த
நேரம். அதை எனக்குச் சாதகமாக்கிக் கொண்டு உள்ளே நுழைந்து விட்டேன். நீ மட்டும்தான்
நுழைய முடியுமா என்று குளிர் மிகுந்த வாடைக்காற்றும் உள்ளே நுழைந்து என்னை வாட்டியது.
அதைக் தாங்கிக்கொண்டு என் தலைவிக்காக அவள் தந்தையின் நீண்ட மாளிகையின் உள்ளே ஓர் ஓரமாக
நின்று காத்திருந்தேன்.
தன்னிடம் பொருள் வேண்டி
வருவோர்கள், அவர்கள் விரும்பி வந்தது கிடைக்காமல்
திரும்பியதே இல்லை என்ற பெரும்பெயர் பெற்றவன்; வீரக்கழலும் வீரக்
கொடியும் அணிந்த, வாய்மை தவறாத கொடை வள்ளல் அதிகனின் நாடு அது.
அவன் நாட்டிலே வளர்ந்திருக்கும் பலா மரங்கள் தாங்கள் காய்ப்பதை என்றுமே நிறுத்தியது
இல்லை. அவற்றுடன் வேங்கை மரங்களும் சேர்ந்த அழகு மிகுந்த மலைப்பகுதி. வில்லாற்றல் நிரம்பிய
படையினை உடைய பசும்பூண் பாண்டியன் யானையானது வெற்றிக் கொடியை ஏந்திச் செல்வது போன்று
அதி உயர்ந்து காட்சி தரும் அருவிகளை உடைய மலைச்சாரல் அது. அந்த மலைச்சாரலிலே தெய்வமகளிர்
போன்ற பெண்கள் எப்பொழுதாவது வந்து விளையாடுவார்கள். அவர்களைப் போன்று அரிதானவள் என்
தலைவி.
கருமணல் போன்ற கரிய கூந்தலையும், ஒளி வீசும் முகத்தையும் உடையவள் என் தலைவி. அந்த முகத்தினிலே
அழகிய இமைகள். அவற்றின் இடையிலே சுழன்றாடும் அவள் கருவிழிகள். எப்பொழுதும் புன்னையுடன்
விளங்கும் பவளவாய். அதில், வண்டுகள் விரும்பி வட்டமிடும் முல்லை
அரும்புகளைக் கோர்த்து வைத்தது போன்ற வெண்மையான அவள் பல்வரிசை. அழகிய வளையல்களை அணிந்த
கைகளிலே வீசிக்கொண்டு, காற்றில் அசைந்தாடும் கொடிபோல நடந்து என்
அருகே வந்தாள். அதிகனின் மலைச்சாரலில் வாழும் மகளல்லவா, என்னை
ஏமாற விடாமல் நான் எதிர்பார்த்து வந்தது போல் என் காதல் நோய் தீர என்னைக் கட்டி அணைத்தாள்.
இவ்வாறு தன் தலைவியை இரவிலே
சந்தித்துவிட்டுத் திரும்புகையில் தன் நெஞ்சிற்குத் தலைவன் சொல்வதாக அமைந்த இந்தக்
காட்சியினை பின்வரும் பாடலில் வருணிக்கின்றார் சங்ககாலப் புலவரான பரணர் என்பவர்.
பாடல்:
கொளக்குறை படாஅக்
கோடுவளர் குட்டத்து
அளப்புஅரிது
ஆகிய குவைஇருந் தோன்றல,
கடல்கண் டன்ன
மாக விசும்பின்
அழற்கொடி அன்ன
மின்னுவசிபு நுடங்க, 5
கடிதுஇடி
உருமொடு கதழ்உறை சிதறி,
விளிவுஇடன்
அறியா வான்உமிழ் நடுநாள்,
அருங்கடிக்
காவலர் இகழ்பதம் நோக்கி,
பனிமயங்கு அசைவளி
அலைப்ப, தந்தை
நெடுநகர் ஒருசிறை
நின்றனென் ஆக; 10
அறல்என
அவிர்வரும் கூந்தல், மலர்என
வாள்முகத்து
அலமரும் மாஇதழ் மழைக்கண்,
முகைநிரைத்து அன்ன
மாவீழ் வெண்பல்,
நகைமாண்டு
இலங்கும் நலம்கெழு துவர்வாய்,
கோல்அமை விழுத்தொடி
விளங்க வீசி, 15
கால்உறு தளிரின்
நடுங்கி, ஆனாது,
நோய்அசா வீட
முயங்கினள் - வாய்மொழி
நல்இசை தரூஉம்
இரவலர்க்கு உள்ளிய
நசைபிழைப்பு
அறியாக் கழல்தொடி அதிகன்
கோள்அறவு
அறியாப் பயம்கெழு பலவின் 20
வேங்கைசேர்ந்த
வெற்பகம் பொலிய,
வில்கெழு
தானைப் பசும்பூண் பாண்டியன்
களிறுஅணி
வெல்கொடி கடுப்பக, காண்வர
ஒளிறுவன
இழிதரும் உயர்ந்துதோன்று அருவி
நேர்கொள்
நெடுவரைக் கவாஅன் 25.
சூரர மகளிரிற்
பெறற்குஅரி யோளே.
---
(பரணர், அகநானூறு - 162)
கோடு - சங்கு, குட்டம் - ஆழம், உருமொடு - இடியொடு, இகழ்பதம் - அயர்ந்திருத்தல், அசைவளி - அசையும் காற்று, துவர்வாய் - பவளவாய், நுடங்கி - அசைந்து.
No comments:
Post a Comment
உங்கள் கருத்துக்கள்: