சங்க காலத்தில் - நீர், நிலம், பொருள் வளம் - 3 (தொடர்ச்சி)
(தமிழணங்கு இதழ் ஜனவரி 2023-ல் வெளியிடப்பட்டது)
பொருள் வளம்
உள்நாட்டுவணிகமும் வெளிநாட்டு வணிகமும்
ஐவகை நிலங்களுக்கிடையே மக்கள் பண்டமாற்று
முறையில் மேற்கொண்ட வணிகம் உள்நாட்டு வணிகம் எனலாம். இதற்கு தரைவழிப் போக்குவரத்து
பயன்படுத்தப்பட்டது. பெரும்பாலும் அன்றாடத் தேவைக்கானப் பொருட்களே பண்டமாற்றுப்
பொருள்களாக இருந்தன. நெல்லுக்கு உப்பும் கள்ளும், மீனுக்கு நெல்லும் பயிறு வகைகளும்
கள்ளும் மாற்றிக் கொள்ளப்பட்டன.
இவற்றைக் குறித்து,
தேன் நெய்யொடு
கிழங்கு மாறியோர்
மீன் செய்யொடு நறவு
மறுகவும்
தீம் கரும்பொடு அவல் வகுத்தோர்
மான் குறையோடு மது மறுகவும்
குறிஞ்சி பரதவர் பாட நெய்தல்
நறும் பூங்கண்ணி குறவர்
சூட
கானவர் மருதம் பாட-------
- பொருநராற்றுப் படை, 214-220.
என்ற பாடலில் முடத்தாமக் கண்ணியார், தேன், நெய், கிழங்குக்கு மீனும் கள்ளும் வாங்குவார்கள்; கரும்பு,
அவல் விற்றவர்கள் மான் இறைச்சியும் கள்ளும் வாங்கிச் செல்வார்கள்.
நெய்தல் நிலத்து பரதவர் குறிஞ்சிப் பண்ணைப் பாடவும், முல்லை நிலத்து
மக்கள் மருதப் பண்ணைப் பாடுவார்கள். இப்படி எல்லா வளங்களும் கொண்ட
குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் ஆகிய நான்கு நிலப் பிரிவுகளையும் ஒரே குடையின் கீழ் அறத்துடனும் அன்புடனும்
கரிகாலன் ஆண்ட ஊர் – என்று ஊரின் பெருமையை, வளத்தினைச் சித்தரிக்கின்றார்.
அதைப்போல, ஊர்த் தெருக்களில் உமணப்பெண்
உப்பு விற்று நெல்லைப் பண்டமாற்றாகப் பெற்ற காட்சியை,
நெல்லும் உப்பும்
நேரே ஊரீர்
கொள்ளிரோவெனச் சேரி
தொறும் நூவலும்,
- அம்மூவனார் - அகநானூறு 390:8-9.
என்று நெல்லும் உப்பும் ஒரே விலையாக
இருந்ததையும்,
கதழ் கோல் உமணர்
காதல் மடமகள்
சில் கோல் எல் வளை
தெளிர்ப்ப வீசி,
‘நெல்லின் நேரே
வெண்கல உப்பு’ எனச்
சேரி விலை மாறு
கூறலின் ----------------
- அகநானூறு 140:5-8.
என்று நெல்லுக்குப் பண்டமாற்றாக கல் உப்பினை
விலை கூறுவாள் என்று அம்மூவனாரும்,
நெய்யுக்கு மாறாக பொன் கட்டி வாங்க மாட்டாள், ஆனால், பசுவும், எருமைக் கன்றும் வாங்குவாள் என்று தொடர்ந்து
தன் வருமானத்தைப் பெருக்கும் பொருள் வளம் சார்ந்த மனநிலை அவர்களிடம் இருந்ததை,
அளை விலை உணவின் கிளை
உடன் அருத்தி
நெய் விலைக் கட்டிப்
பசும்பொன் கொள்ளாள்,
எருமை, நல் ஆன் கரு
நாகு, பெறூஉம் -------
- பெரும்பாணாற்றுப்படை - 163-165.
என்று உருத்திரங்கண்ணனாரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மதுரை மாநகரின் கடைவீதிகளைப் பற்றிக்
கூறும்போது, மேகங்கள் மழைக்காக கடலிலிருந்து நீரைக் கொண்டுபோனாலும் கடல் நீர்
வற்றுவதில்லை. அதே போல் ஆற்று நீர் தினமும் தன்னுடன் வந்து சேர்ந்தாலும், கடல் பொங்கி வழிந்துவிடாமல், கரையை உடைத்துக்கொண்டு வெளியேறாமல் இருக்கும். அதைப்போலவே, பலரும் வந்து பண்டங்களை வாங்கிப் போனாலும் குறையாமல், மேலும் மேலும் பண்டங்கள் வந்து கொண்டு இருந்தாலும் அளவுக்கு அதிகமாகி அவை
தேங்கிவிடாமலும் இருக்கும்படி விற்பனை சிறந்திருக்கும் மதுரை அங்காடி என்பதை
மாங்குடி மருதனார்,
மழை கொளக் குறையாது, புனல் புக மிகாது,
கரை பொருது இரங்கும்
முந்நீர் போலக்,
கொளக் கொளக் குறையாது, தரத் தர மிகாது
கழுநீர் கொண்ட
எழுநாள் அந்தி
ஆடுதுவன்று விழவின்
நாடு ஆர்த்தன்றே
மாடம் பிறங்கிய மலி
புகழ்க் கூடல்
நாள் அங்காடி --------------
- மதுரைக் காஞ்சி, 425-430.
என்ற பாடலில் விவரித்துள்ளார்.
நாட்டின் வளத்தைப் பாட விழைந்த முடத்தாமக்
கண்ணியார்,
கருவி வானம் கடல்
கோள் மறப்பவும்
பெரு வறனாகிப் பண்பு
இல் காலையும்
நறையும் நரந்தமும்
அகிலும் ஆரமும்
துறை துறை தோறும்
பொறை உயிர்த்து ஒழுகி
நுறைத் தலைக்
குரைப்புனல் வரைப்பு அகம் புகுதொறும்,
புனல் ஆடு மகளிர் கதுமெனக்
குடைய
கூனிக் குயத்தின் வாய்
நெல் அரிந்து
சூடு கோடாகப் பிறக்கி
நாள் தொறும்
குன்று எனக் குலைஇய
குன்றாக் குப்பை
கடுந் தெற்று
மூடையின் இடம்கெடக் கிடக்கும்
சாலி நெல்லின் சிறை
கொள் வேலி
ஆயிரம் விளையுட்டு
ஆகக்
காவிரி புரக்கும்
நாடு ---------------
- பொருநர் ஆற்றுப்படை, 236-248.
என்ற பாடலில், கடல் நீரை மொண்டு சென்று
மேகம் மழை பெய்யக்கூட மறக்கலாம். இவற்றால் பெரும் வறட்சியும், பஞ்சமும் உண்டாகும்
காலங்களில் கூட, மகளிர் ஆற்று நீரிலும், குளங்களிலும், விழுந்து புரண்டு நீராடி
மகிழ்வார்கள். வளைந்த கூரிய அரிவாளைக்கொண்டு, நெல்லை
அறுத்துக் கதிர்களை மலைபோல அடுக்கி வைப்பார்கள். அப்படி,
வேலி ஒன்றுக்கு, ஆயிரம் பொதியாக செந்நெல் விளையும் காவிரி
பாயும் நாடு என்று கூறுகின்றார்.
அதேபோல் மலையனார் என்ற புலவர்,
பிரசம் தூங்கப்,
பெரும்பழம் துணர
வரைவெள் அருவி,
மாலையின் இழிதரக்,
கூலம் எல்லாம்
புலம்புஉக, நாளும்
மல்லற்று அம்மஇம்
மலை…..
- நற்றிணை 93:1-4.
என்ற பாடலில், பல கிளைகளிலும் தேன் கூடுகள்
தொங்குகின்றன. பெரிய பழங்கள் குலை குலையாகப் பழுத்துக் காணப்படுகின்றன. மலையிலிருந்து
அருவி மலை போல இறங்கி வருகிறது. மலைப்பக்கத்தில் நெல், வரகு, சாமை,
கேழ்வரகு போன்ற 16 வகை தானியங்கள் விதைக்கப்பட்டுள்ள
வளம் நிறைந்த மலைப்பகுதி இது என்று தானிய வளம் பற்றிக் கூறியுள்ளார். ‘கூலம் எல்லாம்” என்பதற்கு – நெல், வரகு, சாமை, தினை, தோரை, கேழ்வரகு போன்ற 16 வகை தானியங்கள் என்று பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர் அவருடைய உரையில் கூறியுள்ளார்.
மதுரைக் கணக்காயனார் மகனார் நக்கீரர்,
நெல்லும் மலரும் தூஉய்க்
கைதொழுது
மல்லல் ஆவணம் மாலை அயர,……
-
நெடுநல்வாடை 43-44.
என்ற பாடலில், நெல் மணிகளையும் மலர்களையும்
தூவி தெய்வத்தை தொழுகின்றனர் மக்கள். அப்படிப்பட்ட வளம் நிறைந்த மூதூரின் கடைத் தெருக்கள் எங்கும்
விழாக்கோலம் பூண மாலைக் காலம் பிறந்தது என்று நாட்டின் வளம் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
மாங்குடி மருதனார்,
பொன் மலிந்த விழுப் பண்டம்
நாடு ஆர நன்கு
இழிதரும்
ஆடு இயல் பெரு நாவாய்
– மதுரைக்காஞ்சி: 81-83.
என தமிழகக் கப்பல்கள் பொருள்களை விற்றுப் பொன்னுடன்
திரும்பிதை எடுத்துரைக்கின்றார்.
எருக்காட்டூர் தாயங்கண்ணனார்,
-----------------------
சேரலர்
சுள்ளிஅம் பேரியாற்று
வெண் நுரை கலங்க,
யவனர் தந்த வினை மாண்
நன் கலம்
பொன்னொடு வந்து
கறியொடு பெயரும்
வளம் கெழு முசிறி
------------------
- அகநானூறு, 149.
என்று யவனர் தங்கள் மரக்கலங்களில் முசிறித்
துறைமுகத்திற்கு வந்து, பொன்னைக் கொடுத்து மிளகை {கறி}
ஏற்றிக்கொண்டு சென்றதைப் பாடியுள்ளார்.
புகார் நகரின் வளத்தைப் பாடிய கடியலூர்
உருத்திரங்கண்ணனார்,
நீரின் வந்த
நிமிர்பரிப் புரவியும்,
காலின் வந்த கருங்கறி
மூடையும்,
வடமலைப் பிறந்த
மணியும் பொன்னும்,
குடமலைப் பிறந்த
ஆரமும் அகிலும்,
தென்கடல் முத்தும்
குணகடல்(#) துகிரும்,
கங்கை வாரியும்
காவிரிப் பயனும்,
ஈழத்து உணவும்
காழகத்து ஆக்கமும்,
அரியவும் பெரியவும்
நெரிய ஈண்டி
வளந்தலை மயங்கிய
நனந்தலை மறுகின்
--------------------
- பட்டினப்பாலை, 185-193.
என்ற பாடலில், வேற்று நாடுகளிலிருந்து கடல்
வழி கொண்டுவரப்பட்ட குதிரைகளும், பக்கத்து ஊர்களிலிருந்து வண்டிகளில் வந்த மிளகு மூட்டைகளும்; வடக்கே மேரு மலையில் தோன்றிய பொன்னும், இரத்தின
மணிகளும்; மேற்கு மலையில் விளைந்த சந்தனமும், அகிலும்; தெற்குக் கடலில் தோன்றிய முத்தும், கீழ்க் கடலில் வளர்ந்த பவழமும், கங்கைக் கரையில்
இருந்து வந்த பொருட்களும், கடாரத்திலிருந்து வந்த நுகர்
பொருள்களும்; மற்றும் சீனத்திலிருந்து தருவிக்கப்பட்ட
கர்ப்பூரமும், பனிநீர், முதலான பல
வகைப் பண்டங்களும், நிலத்தின் முதுகு நெளியும்படி குவித்து
வைக்கப் பட்டிருந்த புகார் நகரம் என்று கூறியுள்ளார். (#குணகடல் துகிர் என்னும் பொழுது
இன்றைய ஆஸ்திரேலியப் பகுதியின் பவழத்தைக் குறிக்கின்றது என்று கொள்வதில்
பிழையில்லை.” – பேராசிரியர் அ. ச. ஞானசம்பந்தன்)
சங்க காலத் தமிழர்களின் வாணிகம் அனைத்துத்
திசைகளிலும் பரவி இருந்தது என்பதை,
------------- பாற்கேழ்
வால் உளைப் புரவியொடு
வடவளம் தரூஉம்
நாவாய் சூழ்ந்த
நளிநீர்ப் படப்பை,
- பெரும்பாணாற்றுப்படை, 319-321.
என்ற பாடலில், பால் போன்ற நிறத்தினையுடைய குதிரைகளையும், வடதிசை நாட்டிலிருந்து கொண்டு
வரும் மரக்கலங்கள் நிறைந்த பெருமை மிகுந்த துறைமுகங்களையும் நீங்கள் செல்லும் வழியில்
காணலாம் என்று எடுத்துரைக்கின்றார் உருத்திரங்கண்ணனார்.
நாட்டின் பல திசைகளிலும் சென்று வாணிபம்
செய்ய, குறிப்பிட்ட காலத்தில் வீசும் காற்றின் உதவியால், அந்தப் பெரிய கடலின் ஊடாக
மரக்கலத்தை ஓட்டுவது எளிதென்று அன்றே கரிகால் சோழனின் முன்னோர்கள் அறிந்திருந்து
மரக்கலங்களை செலுத்தினார்கள் என்ற செய்தியை.
நளியிரு முந்நீர்
நாவாய் ஓட்டி
வளி தொழில் ஆண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக்
கரிகால் வளவ!
- புறநானூறு, 66: 1-3.
என்ற பாடலில் சுட்டிக் காட்டுகின்றார்
வெண்ணிக்குயத்தியார்.
நாட்டின் பொருள் வளத்தைப் பற்றி, மதுரைக்
காஞ்சியில்,
நாள் மகிழ் இருக்கை காண்மார்
பூணொடு
தெள்ளரிப் பொற்சிலம்பு
ஒலிப்ப ஒள் அழல்
நா அற விளங்கிய வாய் பொன்
அவிர் இழை
- மதுரைக்காஞ்சி - 443-445.
ஆய் பொன் அவிர் தொடிப்
பாசிழை மகளிர்
- மதுரைக்காஞ்சி - 579.
என்ற பாடலில், பொன்னணிகள் புனைந்துகொண்டு, அதன் உள்ளே உள்ள மணிகள் ஒலியெழுப்ப, பொன்னால் செய்த சிலம்புகளைப் பூட்டிக்கொண்டும்,
பொன்னாலான கைவளைகளை அணிந்து கொண்டும் பெண்கள் வானுலகத் தேவதைபோல் தோன்றினர்
என்று மாங்குடி மருதானாரும்,
பொன்தொடிப் புதல்வர் ஓடி ஆடவும்,
– பட்டினப்பாலை – 295.
என்று பொன்னாலான தொடியினை புதல்வர்கள் அணிந்து
விளையாடினர் என உருத்திரங் கண்ணனாரும் குறிப்பிட்டுள்ளனர்.
கடல் வாணிகம் குறித்த செய்திகள்
தென்னிந்தியர் கடல் வாணிகத்தில்
சிறந்திருந்தனர் என்று தாலமி, பிளைநி போன்ற அயல் நாட்டார் எழுதிவைத்த குறிப்புகளைக் கொண்டும் புதைபொருள்
ஆராய்ச்சி கொண்டும் அறிஞர் கூறுகின்றனர் (1)
கி. மு. 10ஆம் நூற்றாண்டில்
தமிழ்நாட்டிலிருந்து கப்பல்கள் மூலமாக மயில் தோகை, யானைத் தந்தம், மணப்பொருள்கள் முதலியன ஏற்றுமதியாகின. எருதுகள் பாரசீக வளைகுடாவிற்கும்
ஆப்பிரிக்காவிற்கும் தமிழகத்திலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்டன. பொனீசியருடைய (Phonecia
- சிரியாவின் கரையோரப் பகுதிகள்) கப்பல்களில் சேர நாட்டு மிளகு
ஏற்றுமதி செய்யப்பட்டது (2).
கி. மு. ஐந்தாம் நூற்றாண்டிற்கு முன்பு
பாபிலோன் நகரத்திற்குக் கடல் வழியாக அரிசி, மயில், சந்தனம் முதலியன
அனுப்பப்பட்டன (3).
தமிழகத்திலிருந்து ரோமப் பேரரசுக்கு
இரும்பு, விலங்குகளின் தோல்கள்,
ஆட்டுமயிர், நெய் முதலியன ஏற்றுமதி
செய்யப்பட்டன. சேர நாட்டிலிருந்து யானைத் தந்தம், ஆமை ஓடுகள்
அனுப்பப்பட்டன. மதுரை, உறையூர் இவற்றிலிருந்து முத்துக்கள்
ஏற்றுமதி செய்யப்பட்டன (4).
முசிறித் துறைமுகத்திலிருந்து மிளகு யவனர்
(#) நாட்டுக் ஏற்றுமதி
செய்யப்பட்டதை புலவர் தாயங்கண்ணனார் பின்வரும் பாடலில் குறிப்பிடுகின்றார்,
சுள்ளிஅம் பேரியாற்று
வெண்நுரை கலங்க,
யவனர் தந்த வினைமாண்
நன்கலம்
பொன்னொடு வந்து
கறியொடு பெயரும்
- அகநானூறு 149: 8-10.
(#) கிரேக்கர்கள், ரோமர்கள் இருவரையுமே சங்க காலத்தில்
‘யவனர்’ என்று அழைத்தனர் என்று ஒரு குறிப்பு கூறுகின்றது.
இப்பொருள்களைப் பெற்றுக்கொண்டு இவற்றுக்கு
மாற்றுப் பண்டங்களாக பொன் வெள்ளிக் காசுகள், உயர்ந்த மது வகைகள், பவழம்,
ஈயம், தகரம், எந்திரப்
பொறிகள் முதலியவற்றை ரோமர்கள் தமிழ்நாட்டுக்கு ஏற்றுமதி செய்தார்கள் (5).
கி. பி. 60-ல் பெரிப்ளூஸ் (Periplus) என்னும் நூலில்
அதன் ஆசிரியர் இந்தியத் துறைமுகங்களை நேரில் கண்டு சேர நாட்டில் தொண்டி, முசிறி, குமரி என்ற துறைமுகங்களையும், பாண்டிய நாட்டில் கொற்கைத் துறைமுகத்தையும், சோழ
நாட்டில் காவிரிப்பூம்பட்டினத்தையும் பற்றி குறிப்பிட்டுள்ளார் (1).
மேற்குறிப்பிட்ட செய்திகளிலிருந்து, ஏறத்தாழ கி. மு. ஆயிரம்
முதலே தமிழகம் கடல் வாணிகத்தில் சிறந்திருந்தது என்பது புலனாகின்றது. ஒரு நாட்டில்
ஏற்றுமதி இறக்குமதி செய்யப்படும் பொருள்களின் அளவைப் பொறுத்தே அந்நாட்டின்
பொருளாதார நிலை இருக்கும். அந்த முறையில் காணும் பொழுது,
சங்க காலத்தில் தமிழர்கள் இறக்குமதி செய்ததைவிட ஏற்றுமதி செய்த பொருட்களே
மிகுதியாக இருந்தன. சங்க காலத் தமிழர்களின் வாழ்க்கை வளமுடன் இருந்தமைக்கு இது ஒரு
சான்றாக அமைகின்றது.
முடிவுரை
பொருள் வளத்தைப் பெருக்குவதிலும் சங்க கால
மக்கள் அறத்தினைக் கடைபிடித்தனர் என்பதை பெருங்கடுங்கோவின்,
’அறன் கடைப் படாஅ
வாழ்க்கையும், என்றும்
பிறன் கடைச் செலாஅச்
செல்வமும், இரண்டும்
பொருளின் ஆகும்,
புனைஇழை என்று, நம்
இருள் ஏர் ஐம்பால்
நீவி யோரே,
- அகநானூறு – 155.
என்ற பாடல் மூலம் அறிய முடிகிறது.
அப்படி ஈட்டியப் பொருளை இரந்தோர்க்குக்
கொடுக்காமல் இருத்தல் இழிவு என்பதையும் சங்க கால மக்களின் வாழ்வில் கொண்டிருந்தனர்
என்பதை பாலை பாடிய பெருங்கடுங்கோ,
“தொலைவு ஆகி, இரந்தோர்க்கு ஒன்று ஈயாமை இழிவு’’ என
மலை இறந்து செயல்
சூழ்ந்த பொருள் பொருளாகுமோ
------------------------------------------------------
‘இல் என இரந்தோர்க்கு
ஒன்று ஈயாமை இழிவு’ என
கல் இறந்து செயல்
சூழ்ந்த பொருள் பொருள் ஆகுமோ,
--- கலித்தொகை, பாலைக்கலி 1:11-16.
என்ற பாடலில் சுட்டிக் காட்டியுள்ளார்.
இதுவரை சுட்டிக்காட்டிய செய்திகளிலிருந்து, சங்க காலத்தில் நீர் வளமும்,
நில வளமும், பொருள் வளமும் பெருகி இருந்தது என்பதும், மக்கள்
அறத்துடன் வாழ்ந்தார்கள் என்பதும் நன்கு புலப்படுகின்றது.
சான்றுக் குறிப்புகள்:
1. தமிழ் இலக்கிய வரலாறு, பகுதி 6 - மா இராசமாணிக்கனார்.
2. தமிழர் வரலாறு - புலவர் கா கோவிந்தன்.
மூலம்: P T S Ayyangar,
History of the Tamils p 129-134.
3. தமிழ் இலக்கிய வரலாறு - பகுதி 6 - மா
இராசமாணிக்கனார். மூலம்: K A N Sastry, A History of India p 76-78.)
4. தமிழர் வரலாறு - புலவர் கா கோவிந்தன்.
மூலம்: Ref: PTS
Ayyangar, History of the Tamils p 301 - 304.
5. தமிழ் இலக்கிய வரலாறு - பகுதி 6 - மா
இராசமாணிக்கனார். மூலம்: Periplus of the Erithraean Sea - p 56.
6. அகமும் புறமும் - பேராசிரியர் அ. ச.
ஞானசம்பந்தன்.
சங்க காலத்தில் - நீர், நிலம், பொருள் வளம்
(நிறைவுற்றது)
----------------------------------------