Pages

Monday, 19 June 2017

சங்க இலக்கியத் தூறல் 13 - மலைச்சாரல் காதலி!




மலைச்சாரல் காதலி!
--- அன்பு ஜெயா, சிட்னி

அதோ அந்த ஆழமான கடல். சங்குகள் வளரக் கூடிய அளவிற்கு  ஆழத்தைக் கொண்ட கடல். அதிலிருந்து எவ்வளவு சங்குகளை வெளியே எடுத்தாலும் குறையாது மேலும் மேலும் சங்குகள் வளர்ந்துகொண்டே இருக்கும்.  பார்ப்பவர்க்கு அந்த  ஆழத்தைக் காட்டிக் கொடுப்பது போன்றதொரு கரிய நிறத்தோற்றம். அந்தக் கடலின் கரிய நிறத்திற்கு நான் ஒன்றும் சளைத்து விடவில்லை என்று கூறுவது போன்று அகன்ற வானிலே கரிய மேகக் கூட்டம். அந்த மேகக் கூட்டங்களைப் பிளந்துகொண்டு பூமியை நோக்கிச் சீறிப் பாய்ந்து வரும் தீயின் கொடியை ஒத்த மின்னல்கள். அவற்றுடன் போட்டி போடுவது போல மேகக் கூட்டங்கள் ஒன்றை யொன்று மோதிக் கொள்வதால் உண்டாகும் இடியோசை. இவற்றையெல்லாம் தோற்கடிப்பேன் என்று சொல்லிக்கொண்டு, எப்பொழுதுதான் இது ஓயும் என்று தெரியாதபடி, கொட்டும் மழை. அப்படிப்பட்ட ஒரு கார்காலத்தின் நள்ளிரவு.



காவலர்கள் சோர்ந்திருந்த நேரம். அதை எனக்குச் சாதகமாக்கிக் கொண்டு உள்ளே நுழைந்து விட்டேன். நீ மட்டும்தான் நுழைய முடியுமா என்று குளிர் மிகுந்த வாடைக்காற்றும் உள்ளே நுழைந்து என்னை வாட்டியது. அதைக் தாங்கிக்கொண்டு என் தலைவிக்காக அவள் தந்தையின் நீண்ட மாளிகையின் உள்ளே ஓர் ஓரமாக நின்று காத்திருந்தேன்.

தன்னிடம் பொருள் வேண்டி வருவோர்கள், அவர்கள் விரும்பி வந்தது கிடைக்காமல் திரும்பியதே இல்லை என்ற பெரும்பெயர் பெற்றவன்; வீரக்கழலும் வீரக் கொடியும் அணிந்த, வாய்மை தவறாத கொடை வள்ளல் அதிகனின் நாடு அது. அவன் நாட்டிலே வளர்ந்திருக்கும் பலா மரங்கள் தாங்கள் காய்ப்பதை என்றுமே நிறுத்தியது இல்லை. அவற்றுடன் வேங்கை மரங்களும் சேர்ந்த அழகு மிகுந்த மலைப்பகுதி. வில்லாற்றல் நிரம்பிய படையினை உடைய பசும்பூண் பாண்டியன் யானையானது வெற்றிக் கொடியை ஏந்திச் செல்வது போன்று அதி உயர்ந்து காட்சி தரும் அருவிகளை உடைய மலைச்சாரல் அது. அந்த மலைச்சாரலிலே தெய்வமகளிர் போன்ற பெண்கள் எப்பொழுதாவது வந்து விளையாடுவார்கள். அவர்களைப் போன்று அரிதானவள் என் தலைவி.

கருமணல் போன்ற கரிய கூந்தலையும், ஒளி வீசும் முகத்தையும் உடையவள் என் தலைவி. அந்த முகத்தினிலே அழகிய இமைகள். அவற்றின் இடையிலே சுழன்றாடும் அவள் கருவிழிகள். எப்பொழுதும் புன்னையுடன் விளங்கும் பவளவாய். அதில், வண்டுகள் விரும்பி வட்டமிடும் முல்லை அரும்புகளைக் கோர்த்து வைத்தது போன்ற வெண்மையான அவள் பல்வரிசை. அழகிய வளையல்களை அணிந்த கைகளிலே வீசிக்கொண்டு, காற்றில் அசைந்தாடும் கொடிபோல நடந்து என் அருகே வந்தாள். அதிகனின் மலைச்சாரலில் வாழும் மகளல்லவா, என்னை ஏமாற விடாமல் நான் எதிர்பார்த்து வந்தது போல் என் காதல் நோய் தீர என்னைக் கட்டி அணைத்தாள்.

இவ்வாறு தன் தலைவியை இரவிலே சந்தித்துவிட்டுத் திரும்புகையில் தன் நெஞ்சிற்குத் தலைவன் சொல்வதாக அமைந்த இந்தக் காட்சியினை பின்வரும் பாடலில் வருணிக்கின்றார் சங்ககாலப் புலவரான பரணர் என்பவர்.
பாடல்:
கொளக்குறை படாஅக் கோடுவளர் குட்டத்து

அளப்புஅரிது ஆகிய குவைஇருந் தோன்றல,

கடல்கண் டன்ன மாக விசும்பின்

அழற்கொடி அன்ன மின்னுவசிபு நுடங்க,            5

கடிதுஇடி உருமொடு கதழ்உறை சிதறி,

விளிவுஇடன் அறியா வான்உமிழ் நடுநாள்,

அருங்கடிக் காவலர் இகழ்பதம் நோக்கி,

பனிமயங்கு அசைவளி அலைப்ப, தந்தை

நெடுநகர் ஒருசிறை நின்றனென் ஆக;             10

அறல்என அவிர்வரும் கூந்தல், மலர்என

வாள்முகத்து அலமரும் மாஇதழ் மழைக்கண்,

முகைநிரைத்து அன்ன மாவீழ் வெண்பல்,

நகைமாண்டு இலங்கும் நலம்கெழு துவர்வாய்,

கோல்அமை விழுத்தொடி விளங்க வீசி,            15

கால்உறு தளிரின் நடுங்கி, ஆனாது,

நோய்அசா வீட முயங்கினள் - வாய்மொழி

நல்இசை தரூஉம் இரவலர்க்கு உள்ளிய

நசைபிழைப்பு அறியாக் கழல்தொடி அதிகன்

கோள்அறவு அறியாப் பயம்கெழு பலவின்          20

வேங்கைசேர்ந்த வெற்பகம் பொலிய,

வில்கெழு தானைப் பசும்பூண் பாண்டியன்

களிறுஅணி வெல்கொடி கடுப்பக, காண்வர

ஒளிறுவன இழிதரும் உயர்ந்துதோன்று அருவி

நேர்கொள் நெடுவரைக் கவாஅன்                   25. 
  
சூரர மகளிரிற் பெறற்குஅரி யோளே.


 --- (பரணர், அகநானூறு - 162)



கோடு - சங்கு, குட்டம் - ஆழம், உருமொடு - இடியொடு, இகழ்பதம் - அயர்ந்திருத்தல், அசைவளி - அசையும் காற்று, துவர்வாய் - பவளவாய், நுடங்கி - அசைந்து. 

Friday, 16 June 2017

சங்க இலக்கியத் தூறல் 12 - காதலியும் காடைகளும்



காதலியும் காடைகளும்
--- அன்பு ஜெயா, சிட்னி

தன்னுடைய கணவன் விலைமகள் வீட்டிற்குச் சென்று தன் நேரத்தை இன்பமாகக் கழித்துவிட்டு வீட்டில் நுழைவதைப் பார்க்கிறாள் தலைவி. அவன் தனக்குத் துரோகம் செய்து வருகிறான் என்பதை நினைத்து அவளுக்கு சரியான கோபம். தான் ஏமாற்றப் படுகிறோம் என்று அவள் மனதில் ஆத்திரம் பொங்குகிறது.




ஆத்திரத்துடன், “அங்கேயே நில். உள்ளே வராதே. எப்போதும் விலைமகள்  வீட்டிற்குச் செல்பவன்தானே நீ. அந்தப் பாதையை மறந்து இங்கு வந்து விட்டாயோ? கருமையான, மணக்கும் கூந்தலை உடைய அந்த விலைமகளின் வீட்டிற்கே போய்விடு. நீ இங்கு நடந்த வந்தபோது சிவந்த போன உன் பாதங்கள் மீண்டும் சிவந்து போக அவள் வீட்டிற்கே திரும்பி நடந்து போய்விடு,” என்று அவன் முகத்தில் அடித்தது போலக் கூறுகிறாள்.
அதற்கு அவள் கணவன், “வெண்மையான பல்வரிசைக்குச் சொந்தக்காரியான என் காதலியே! நீ தவறாக நினைத்துக் கொண்டு இப்படிப் பேசுகிறாய். நான் விலைமகள் வீட்டிலிருந்து வரவில்லை. வேறு ஓர் இடத்திற்குச் சென்றிருந்தேன். அங்கே ஒருவன் சில காடைகளைக் கொண்டு வந்திருந்தான். சேவல் கோழிச் சண்டை பார்ப்பது போல காடைச் சண்டை பார்த்துக் கொண்டிருந்தேன். தாமதமாகிவிட்டது. நீ ஏதேதோ கற்பனை செய்துகொண்டு இருக்கிறாயே,” என்று அவளைச் சமாதானப் படுத்த முயன்றான்.

அவன் சொல்வதை நம்பாத அவள் ஏளனமாக, ஓ! காடைச் சண்டைப் பார்த்தாயா?! கேள்விப்பட்டேன், கேள்விப்பட்டேன். எப்படிப்பட்ட காடைகள் என்றும் கேள்விப்பட்டேன். அந்த யாழிசைக்கும் பாணன் புதிது புதிதாகக் காடைகளைக் கொண்டு வந்திருந்தானாம்! அவனுடைய யாழிசைக்கு ஏற்றதுபோல அந்தக் காடைகள் அவை சண்டைபோட்டனவாம்! ஆமாம், ஆமாம்! அந்தச் சண்டையைப் பார்த்தவன் போலத்தான் நீ காணப்படுகிறாய்! அந்தச் சண்டையால் உன் உடம்பில்தான் எத்தனை புண்கள். அந்தப் புண்களெல்லாம் காடைகள் சண்டையை நீ பார்த்தற்குச் சாட்சி சொல்கின்றனவே!,” என்று கூறியவள், மீண்டும் தொடர்ந்தாள்.
“நீதான் அந்தக் காடைகளுடனேயே எல்லா இடங்களிலும் சுற்றுவதைப் பார்த்துத்தான் இந்த ஊரே சிரிக்கிறதே! நீ திருந்த மாட்டாய்! ஊர் சிரிப்பதையும் பொருட்படுத்தாமல், அந்தக் காடையை உன் மார்போடு அணைத்துக் கொண்டிருக்கிறாய். அதனால் கர்வம் கொண்ட அந்தக் காடை மற்ற காடையுடன் சண்டையிட்டது. அதனால் அந்தக் காடையை விட்டுவிட்டு பாணனிடம் சொல்லி வேறொரு காடையைக் கொண்டு வரச்சொன்னாய். அவனும் வேறொரு காடையைக் கொண்டு வந்தான். அந்தக் காடையும் கர்வம் கொண்டு மற்ற காடையுடன் சண்டையிட்டது. இப்படிப் பல காடைகளின் சண்டையை நீ பார்த்ததை எல்லாம்தான் உன் முகம் காட்டிக் கொடுக்கிறதே!,” என்று அவளுடைய ஆத்திரத்தைக் கொட்டித் தீர்த்தாள்.

இன்னும் அவளைச் சமாதானம் படுத்த முடியும் என்று நம்பிய அவள் கணவன், “ என் ஆருயிரே! நீ நினைப்பதைப் போல் ஒன்றும் நடக்கவில்லை என்று உன் உடலைத் தொட்டு சத்தியம் செய்யட்டுமா?,” என்று கேட்டான்.

அதற்கு அவள், “ ஐயோ! வேண்டாமப்பா. நீ பொய்யை மெய்யாக மாற்றி வஞ்சிக்கக் கூடிய திறமைசாலி ஆயிற்றே. வேண்டவே வேண்டாம்,” என்று கூறினாள்.

அதற்கு அவன், “ நல்லவளே! என்னுடைய தவறுகளை எல்லாம் கண்டுபிடித்து, என்னைக் கையும் களவுமாகப் பிடித்துவிட்டாய். என் தவறுகளை மன்னித்து விடு,” என்று கூறினான்.
அதற்கு அவள், “மன்னிப்பேன் மன்னிப்பேன். உன்னை மன்னிக்க நான்யார்? நீ முன்பு பழகிக் கைவிட்ட அந்தக் காடைகளெல்லாம் இன்னும் உனக்காக ஏங்கிக் காத்துக் கொண்டிருக்கின்றன. உன்னுடைய பாணனை யாழ் வாசிக்கச் சொல்லி, அந்தக் காடைகளின் சண்டையைக் கண்டு ஆடிப் பாடு. என்னை ஏமாற்றியது போல அந்தக் காடைகளையாவது ஏமாற்றாமல் இரு,” என்று சொல்லி அவனை வெளியே அனுப்பிக் கதைவைச் சாத்திவிட்டாள்.

இந்தக் காட்சியைப் பாலைபாடிய பெருங்கடுங்கோ என்ற புலவர் பின்வரும் பாடலில் அழகாகச் சித்தரிக்கின்றார்.

தலைவி
நில் ஆங்கு, நில் ஆங்கு; இவர்தரல்; எல்லா! நீ
நாறு இருங் கூந்தலார் இல் செல்வாய், இவ் வழி
ஆறு மயங்கினை போறி! நீ வந்தாங்கே
மாறு, இனி நின் ஆங்கே – நின் சேவடி சிவப்ப

தலைவன்
செறிந்து ஒளிர் வெண் பல்லாய்! யாம் வேறு இயைந்த    5
குறும்பூழ்ப் போர் கண்டேம், அனைத்தல்லது, யாதும்
அறிந்ததோ இல்லை, நீ வேறு ஓர்ப்பது.

தலைவி
குறும்பூழ்ப் போர் கண்டமை கேட்டேன், நீ என்றும்
புதுவன ஈகை வளம் பாடி, காலின்
பிரியாக் கவி கைப் புலையன் தன் யாழின்    10
இகுத்த செவி சாய்த்து, இனிஇனிப் பட்டன
ஈகைப் போர் கண்டாயும் போறி; மெய் எண்ணின்
தபுத்த புலர்வில் புண்.
ஊரவர் கவ்வை உளைந்தீயாய், அல்கல் நின்
தாரின்வாய்க் கொண்டு முயங்கி, பிடி மாண்டு,   15
போர் வாய்ப்பக் காணினும் போகாது கொண்டு, ஆடும்
பார்வைப் போர் கண்டாயும் போறி; நின் தோள் மேலாம்
ஈரமாய் விட்டன புண்.
கொடிற்றுப் புண் செய்யாது, மெய்ம் முழுதும் கையின்
துடைத்து, நீ வேண்டினும் வெல்லாது கொண்டு, ஆடும்   20
ஒட்டிய போர் கண்டாயும் போறி; முகம்தானே
கொட்டிக் கொடுக்கும் குறிப்பு.

தலைவன்
ஆயின், ஆயிழாய்! அன்னவை யான்ஆங்கு அறியாமை
போற்றிய நின்மெய் தொடுகு.

தலைவி
அன்னையோ! மெய்யைப் பொய் என்று மயங்கிய, கை ஒன்று  25
அறிகல்லாய் போறிகாண், நீ.

தலைவன்
நல்லாய்! பொய் எல்லாம் ஏற்றி, தவறு தலைப்பெய்து
கையொடு கண்டாய்; பிழைத்தேன்; அருள், இனி.

தலைவி
அருளுகம்; யாம்; யாரேம், எல்லா! தெருள?
அளித்து, நீ பண்ணிய பூழ் எல்லாம் இன்னும்    30
விளித்து, நின் பாணனோடு ஆடி அளித்தி
விடலை! நீ நீத்தலின் நோய் பெரிது ஏய்க்கும்
நடலைப்பட்டு, எல்லாம் நின் பூழ்.  

  --- (கலித்தொகை – 95)


தனக்குத் துரோகம் செய்துவிட்டு விலைமகள் வீட்டிற்குச் செல்லுகின்ற கணவனை விரட்டிய அடித்த ஒரு பெண்ணை சங்க காலத்திலும் காண்பது பெருமையாக உள்ளது. ஒரு வேளை கண்ணகி இந்தப் பெண்ணின் கதையைப் படித்திருக்க மாட்டாளோ?!