Pages

Friday, 6 February 2026

போதுமென்ற மனம் கொள்!

 

போதுமென்ற மனம் கொள்!

--- அன்பு ஜெயா

(எழு சீர் குறள்வெண் செந்துறை)

 

மனத்தினைச் சிதற விட்டிடின் அதுவும்

    மானையும் வென்றுமே ஓடும்,

மனத்தினைக் கட்டி வைத்திடின் வாழ்வும்

    மகிழ்ச்சியாய் இருக்குமே உணர்வாய்!           (1)

 

உனக்கென வேண்டும் செல்வமும் சேர்த்தே

   உள்ளமும் நிறைவினைப் பெறுவாய்

எனக்குமே இன்னும் வேண்டுமே என்றோர்

    எல்லைதான் மீறலைத் தவிர்ப்பாய்!        (2)

 

அடுத்தவர் உயர்வை அளவெனக் கொள்ளும்

    அளவிலா விருப்பமும் அழிப்பாய்!

கொடுத்தநம் இறைவன் அறிந்துமே அளித்தான்

    கொண்டிடு மனத்தினில் நிறைவே!         (3)

  

உனக்கென உரிய செல்வமும் வந்தே

    உன்னையே அடைந்திடும் அறிவாய்!

மனத்தினில் விருப்பம் பெருகவே விடாது

    மகிழ்வுடன் வாழ்கவே என்றும்!           (4)

 

போதுமே என்ற மனத்தினை வளர்த்தே

    பொன்னென வாழ்வினைப் பெறுவோம்!

ஏதுமே இலாத ஏழைகள் நலம்தான்

    இங்குமே பெற்றிட உழைப்போம்!          (5)

-------------------------

வஞ்சக ஆட்டம் துன்பமே!

 

வஞ்சக ஆட்டம் துன்பமே!

--- அன்பு ஜெயா

(பா வகை:  நாலடியால் அமைந்த இருமுச் சீரிரட்டை வியனிலைச் சிந்து.)

 

நண்பனின் துன்பத்தைக் – கண்டுமே

      நல்லுதவி புரியாதல் துன்பமே;

கண்முன் பகைவர்தம் – செருக்கினைக்

      காண்பதும் வாழ்வினில் துன்பமே;

கண்போன்ற உறவுகள் – இன்றியே

      காலம் கழித்தலும் துன்பமே;

பண்பினை இழந்துமே – பணயஆட்டம்

      பழகுவோன் வாழ்விலும் துன்பமே! (1)

 

நண்பர்கள் துயர்தனில் – தயங்காது

      நாளும் உதவிடல் வேண்டும்;

கண்களால் பகைவரின் – செருக்கினைக்

      காணாது விலகிடல் வேண்டும்;

கண்ணான உறவுகள் – நடுவிலே

      காலமும் வாழ்ந்திடல் வேண்டும்;

பண்பினைக் காத்து வாழ்வில் – என்றுமே

      பணயஆட்டம் தவிர்த்திடல் வேண்டும்! (2)

-----------------------------

Friday, 30 January 2026

சேர்ந்திணைந்து வாழ்ந்தாலே சிறப்பு - கவிதை

 

சேர்ந்திணைந்து வாழ்ந்தாலே சிறப்பு

--- அன்பு ஜெயா


(தரவு கொச்சகக் கலிப்பா)


கார்காலம் வரும்பொழுதுக் கருமுகிலும் பரவிடுமே

தேர்மீதில் வருவானே தேடியென்றன் தலைவனெனப்

பார்த்திருந்தத் தலைவிக்குப் பசலையதும் விரவிடுமே

சேர்ந்திணைந்து வாழ்வதிலே செம்மையதும் துலங்கிடுமே!        (1)

 

ஊர்கூடி இழுத்தாலே உருண்டோடும் பெருந்தேரும்

பார்போற்ற இணைந்திருந்தால் பகைதன்னை அடக்கிடலாம்

வேர்விட்டே உறவிணைந்தால் விளைந்திடுமே பெருவெற்றி

சேர்ந்திணைந்தே செலுத்தவாழ்வில் சிறப்பினையும் பெறலாமே! (2)

 

தேரோட அனைவருமே திரண்டிங்கே இழுக்கவேண்டும்

ஊரோடே ஒருமித்தே உணர்ந்துழைத்தல் சிறப்புறுமே

வேரோடிப் பயிர்வளர்ந்தால் விளைச்சலுமே பெருகிடுமே

ஊரோடு நலம்பெறவே ஒருமித்தே உழைத்திடுவோம்!           (3)

 

உரிமையினைப் அடைந்திட்டோம் ஒருங்கிணைந்துப் பொருதுமிங்கே

உரிமையினைப் பறித்திடவே ஒருக்காலும் இடமளியோம்

எரிமலையாய் வெடித்திடுவோம் எதிர்வந்தோர் நடுங்கிடவே

உரிமையுடன் இணைந்திங்கே உயர்ந்திடுவோம் அனைவருமே!     (4)

----------------------------------  

இரக்கமும் உன்னை ஏமாற்றலாம் - கவிதை

 

இரக்கமும் உன்னை ஏமாற்றலாம்.

பா வகை: எழுசீர் குறள்வெண் செந்துறை

 

இரக்கம் தானே எல்லோர் மனத்தில்

     இயல்பாய் உள்ள நற்குணமே!

பரந்து விரிந்த இயல்பைச் சிலரும்

     பண்பே இன்றி ஏய்ப்பதேனோ!    (1)

 

ஏய்ப்போர் எங்கும் இருப்பர் எனினும்

    ஏழை எளியோர் உள்ளனரே,

ஆய்ந்தே அறிவ தெப்படி என்றே

    அறிவுக் கெதுவும் எட்டவில்லை!    (2)

 

குழந்தைக் கையில் ஏந்தி நின்றே

    குறையைச் சொல்வோர் நிலைதன்னை

குழந்தை மனமும் பெற்ற மாந்தர்

    குறையாய்க் காண்ப தெங்ஙனமோ?    (3)

 

அறிவோம் இங்கே ஏய்த்தும் பிழைப்போர்

    அளவே இன்றி இருப்பாரே

அறிந்தும் இரக்கம் என்னும் உணர்வும்

   அலையாய்ப் பாய்ந்தும் வருகிறதே!        (4)

 

கல்லாய் உள்ளம் கடவுள் படைத்தால்

    கடந்தே செல்லும் வழியுண்டே

கல்லில் ஈரம் கசியப் படைத்தக்

    கடவுள் தன்னைப் பழித்திடுவோம்!        (5)

 ----------------------