மரபுப் பாக்கள் - தொகுதி 32
94)
மேழியாய்த் தூவல் போற்று. (மேழி – ஏர்)
பா வகை: குறள்வெண் செந்துறை (அளவடி)
உழவன் என்றும் உயிர்ப்புடன் இருந்தால்
உழவும் மாந்தர் உயிர்தனைக் காக்கும்!
எழுத்துல கிங்கே ஏற்றமாய் இருந்தால்
பழுதிலா வாழ்வும் பாரினில் உயரும்!
மேழியும் பொய்த்தால் மாந்தரின் வாழ்வும்
தாழி உடைந்தத் தன்மையைப் பெறுமே!
காற்று நுழையா களத்திலும் எழுத்தோ
போற்றவே நுழையும் போர்தான் புரிந்தே!
எழுத்துப் போர்தான் இவ்வுல கிலென்றும்
முழுமையாய் வெற்றியை மோதியும் பெறுமே!
எழுத்தினைப் போற்றுவாய் என்றும் அதனை
எழுதுவோர் போற்றுவாய் ஏற்றம் பெறவே!
----------------------------
95)
மைவிழியாள் துணைக்கொள்.
பா வகை: குறள்வெண் செந்துறை (அளவடி)
உன்னைப் பெற்றே
உலகைக் காட்டித்
தன்னையும் காத்தத்
தாயவள் பெண்ணே!
என்றும் அவளையும்
எண்ணியே போற்றிடு
பொன்றும் துணையாய்
பொலிபவள் தாயே!
உன்னையும் ஈன்றவள்
உலகில் பெண்தான்
உன்னைத் துணையாய் உவந்ததும்
பெண்ணே!
உன்னையும் ஏற்றே
உன்வழித் தோன்றலும்
இன்பமாய் உலகில்
ஈன்றவள் பெண்ணே!
பெண்ணின் துணையை
பெரிதாய்ப் போற்றி
மண்ணில் வாழ்வோர்
மாண்புடை யோரே!
எண்ணிப் பார்த்தால்
இன்றுநம் வாழ்வில்
பெண்ணின் துணையது
பெரிதும் வேண்டுமே!
------------------------------------
96) மொழிவதைத் தமிழில் மொழி.
பா வகை: குறள்வெண் செந்துறை (அளவடி)
தாய்மொழி கற்றோர் தனித்தே விளங்கி
ஆய்வில் சிறப்பரே ஆன்றோர் முடிவிது!
தாய்மொழி நமது தமிழ்மொழி தன்னில்
ஆய்வுகள் செய்துமே ஆயிரம் உயர்ந்தனர்!
தமிழ்மொழி கற்றுத் தகுதியாய்
விளங்குவோர்
தமிழக அரசில் தனியிடம் பெறுவரே!
ஏற்றம் பெற்றவர் எம்மொழி தன்னிலே
மாற்று மொழிகளை மாசறக் கற்பரே!
தாய்த்தமிழ் பயில்வதைத் தவிர்த்தே வாழ்பவர்
தாய்தனைப் பிரிந்தே தனிமையில் அலைபவர்!
தமிழ்மொழி அறிந்தும் தமிழில் மொழியார்
உமியுடன் அரிசியை உண்டு வாழ்வரோ?
-------------------------------------------------------