மரபுப் பாக்கள் - தொகுதி 33
97) மோனையாய் முந்திடு.
பா வகை:
குறள்வெண் செந்துறை (அறு சீர்)
மா+மா+காய்
என்று அரையடியில் வரும். அடுத்த அரையடியும் மா+மா+காய் என்று வரும். இப்படி
இரண்டடியும் அமையும்.
(ஆறு சீர்கள் கொண்ட பாடல் என்பதால், முதல்
சீருக்கும் நான்காம் சீருக்கும் பொழிப்பு மோனை அமையும். இரண்டடிக்கும் ஓரெதுகை
அமையும். தளைப் பார்க்கத் தேவையில்லை.)
பானை நீரைக்
குளிர்விக்கும்
பாவிற் கோசையும் பயனளிக்கும்!
மோனைப் பாவினில்
முதல்போல
முதலாய் வந்திட உறுதியேற்பாய்!
முதன்மையும் பெற்றிட
நீயென்றும்
முயன்றே கடுமையாய் உழைத்திடுவாய்!
அதன்பின் வாழ்வில்
முன்னேற்றம்
அருகினில் வந்துனை அடைந்திடுமே!
துறவறம் தன்னில்
புலனடக்கம்
துவக்கம் என்றே முன்வருமே!
அறமும் செய்திட முன்வந்தால்
அமைதியில் ஆழ்ந்தே நலம்பெறலாம்!
எங்கும் எதிலும்
முன்வரவே
என்றும் உறுதியாய் உழைத்தாலே
தங்கும் உன்னிடம்
என்றைக்கும்
தளர்விலா முதன்மைதான் உணர்ந்திடுவாய்!
-----------------------------
98) இ'யல்பாய் இரு.
பா வகை: குறள்வெண் செந்துறை (அறு சீர்)
பறவை ஒன்றாய்ப் பறந்திடுமே
பாரில் நாமேன்
பிரிந்துள்ளோம்?
உறவைப் பெரிதாய் எண்ணாமல்
உழன்றே இன்பம்
இழக்கின்றோம்!!
எறும்பும் இனத்தைப்
பிரியாமல்
இரையைத் தேடிச் சேர்த்திடுமே
பொறுமை நமக்கே
இருந்தாலே
போற்றி உறவைக் காத்திடலாம்!
ஒன்றாய் வாழ்தல் சிறப்பன்றோ
உணர்வோம் கெடுத்தல்
செல்வமென்றே!
இன்றே நிலையை மாற்றிடுவோம்
இணைந்தே என்றும்
வாழ்ந்திடுவோம்!
கற்றோம் கல்வி எத்தனையோ
கற்றோ மில்லை ஒற்றுமையே!
பெற்ற பேறே உறவுகள்தான்
பிரிவைத் தவிர்த்தே
உயர்வோமே!
இயல்பே மாந்தர் ஒற்றுமைதான்
இணைந்தே இனிமேல்
வாழ்ந்திடுவோம்
இயல்பே யில்லா வேற்றுமையை
இன்றே விலக்கி நலம்பெறுவோம்!
என்றும் உதவா வேற்றுமையை
எடுத்தே எறிந்தும்
உயர்ந்திடுவோம்!
இன்றே செய்தால் நம்வாழ்வும்
என்றும் சிறப்பாய்
விளங்கிடுமே!
-------------------------------------
99) யாவரையும் ஒன்றெனக் கொள்.
பா வகை: குறள்வெண் செந்துறை (அறு சீர்)
விலங்கும் இனத்துள் உயர்வுதாழ்வு
விலக்கிப் பார்த்தல்
இல்லைதானே
விலக்கிப் பார்த்தே மாந்தருமே
வினைதான் ஆற்றி வாழ்வதேனோ?
மாந்தர் வாழ்வில் பிரிவினைதான்
மாறும் நாளும் வந்திடுமோ
மாந்த இனம்தான் அமைதிபெற
மாற வேண்டும் இந்நிலையே!
பிறப்பில் ஆண்பெண் வேறுபாடே
பின்னர்க் குடியாய் மாறியதேன்?
இறப்பில் இதெல்லாம்
உடன்வருமோ
இணைந்தே வாழ்வோம் பிரிவின்றி!
மூன்றாம் பாலை
உவந்தேற்க
முயற்சி எடுத்தோம், வெற்றிபெற்றே
தோன்றாப் புகழும்
ஈட்டிட்ட
தூய குமுகம் நமதன்றோ!
பெற்ற புகழைப்
பாதுகாப்போம்
பெருமை அதில்தான் உள்ளதென்றே
உற்ற வாழ்வைப் போற்றிடுவோம்
உலகில் அமைதி நிலைபெறுமே!
-------------------------------------------