Pages

Wednesday, 31 May 2017

தென்முகக்கடவுள்

ஞானகுரு தென்முகக்கடவுள் (தட்சிணாமூர்த்தி)

--- அன்பு ஜெயா


இறைவன் தன் குழந்தைகளான ஆன்மாக்கள்  பிறவி என்ற பெருங்கடலை நீந்திக் கடந்து தன்னை வந்தடைந்து நிலையான பேரின்பத்தைப் பெறுவதற்காகப்  பதி, பசு, பாசமெனும் முப்பொருள் உண்மையை விளக்கி,   அந்த உண்மையை  குரு உபதேசம் மூலம் பெற வேண்டியதின் அவசியத்தையும்  உணர்த்துவதற்காகக் கல்லால மர நிழலில் தென்முகக்கடவுளாக, தட்சிணாமூர்த்தியாக, ஆலமர் செல்வனாக, ஞானகுருவாகக் காட்சி அளிக்கிறார்.  



அப்பெருமானை,

“கல் ஆலின் புடையமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதற்கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்த அதனை இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமல் சொன்னவரை நினையாமல் நினைந்து.
பவத்தொடக்கை வெல்வாம்” ,
(திருவிளையாடற்புராணம்)


“கல்லால மரத்தின் கீழ் வீற்றிருந்து நான்கு மறைகளையும், வேதத்தின் உறுப்புகளான ஆறு அங்கங்களையும் பிரம்மாவின் புதல்வர்களும் கல்வி கேள்வியில் சிறந்தவர்களுமான சனகர், சனந்தனர், சனாதரர், சனந்தகுமாரர் ஆகிய நான்கு முனிவர்களுக்கு எல்லாமாயும், ஒன்றும் இல்லாததாயும் உள்ள உண்மைப்பொருளை,  முப்பொருள் உண்மையை, அசையாது இருந்தபடி வாயினால் கூறாமல் சின்முத்திரையால் காட்டி, மௌனகுருவாகக் குறிப்பினால் உணர்த்திய தென்முகக் கடவுளை வணங்கி பிறவி என்கின்ற இந்த பந்தத்தை வெல்லுவோம்” -  என்று கூறுகின்றார் பரஞ்சோதி மாமுனிவர்.

ஆணவம், கன்மம், மாயை எனும் மூன்று மலங்களும் தமது சின்முத்திரையால் வேறுபட்டு ஒழிந்திடக் காட்சி அருளுகின்றார் என்று தட்சிணாமூர்த்தித் தத்துவத்தைக் கச்சியப்பமுனிவர் பின்வரும் பாடலில் கூறுகிறார்:

“மும்மலம் வேறுபட்டொழிய மொய்த்துயிர்
அம்மலர்த்தாள்நிழல் அடங்கும் உண்மையைக்
கைம்மலர்க் காட்சியில் கதுவநல்கிய
செம்மலையலது உளம் சிந்தியாதரோ.”
(திருவானைக்காப் புராணம் – வரங்கொள்படலம்).


திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும், மாணிக்கவாசகரும், மற்ற அருளாளர்களும் தென்முகக்கடவுளைப் போற்றிப் பாடியுள்ளனர்.

தென்முகக்கடவுள்

தென்முகக்கடவுளின் திருவுருவம்  64 சிவ வடிவங்களில் ஒன்றாகவும் , சிவபெருமானின் 25 திருமேனிகளில் ஒன்றாகவும் விளங்குவதாகும்.  சிவன் கோயில்களில் சிவனின் கருவறைக்குத் தென்புறத்தில், தென்திசையை நோக்கியபடி பளிங்கு போன்ற திருமேனியுடன் புன்னகை பூக்கும் முகத்துடன் வலது காலைத் தொங்கவிட்டு அதன்மீது  இடது காலை மடக்கி வைத்து, வலது பாதம் முயலகனை மிதித்தவாறு அமர்ந்த கோலத்தில் காட்சி தருபவர்.   அவருடைய காலடியில் சனகாதி முனிவர்கள் நால்வரும் ஞானோபதேசம் கேட்டபடி அமர்ந்திருக்கிறார்கள்.  பெருமானின் நெற்றியிலே மூன்று கீற்றுகளாக அணிந்திருக்கும் திருநீறு அவருடைய   நெற்றிக்கண்ணை மறைத்துக் கொண்டிருக்கிறது. கழுத்திலும் கைகளிலும் உருத்திராக்க மாலைகள் அழகு செய்து கொண்டிருக்கின்றன.  காதினிலே குண்டலங்கள் ஆடிக்கொண்டிருக்கின்றன.  வலது பின்கரத்தில் உடுக்கையும் பாம்பும், முன்கரத்தில் சின்முத்திரை   இடது பின்கரத்தில் தீயும், முன்கரத்தில் ஓலைச்சுவடியையும்  தாங்கி, வலது பின்கரத்தில் உடுக்கையையும் பாம்பையும் ஏந்திக்கொண்டு, முன்கரத்தில் ஞானமுத்திரையான  சின்முத்திரையைக்  காட்டி,  இடையிலே புலித்தோலாடையும் அணிந்து பெருமான் காட்சிதருகிறார்.

சிவபெருமான் திருக்குறுக்கை என்ற திருத்தலத்தில் யோகத்தின் பெருமையை உணர்த்த யோக தட்சிணாமூர்த்தி வடிவிலும்,  வீணையைய உருவாக்குவது பற்றியும் அதனை வாசிப்பது பற்றியும் எடுத்துரைத்த திருத்தலமான லால்குடியில்  வீணா தட்சிணாமூர்த்தி வடிவிலும் காட்சி தருகிறார்.  இந்த இரண்டு வடிவங்களும் 64  சிவ வடிவங்களில் அடங்கும்.


சில கோயில்களில் தட்சிணாமூர்த்திப் பெருமான் வேறு சில வடிவங்களிலும் காட்சி தருகின்றார்.  மயிலாடுதுறைக்கு அடுத்த செம்பொன்னார் கோயில் அருகிலுள்ள புஞ்சை என்ற ஊரில் சிவந்த நிறத்தில் காட்சி தருகிறார்.  மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள வள்ளலார் கோயில் திருத்தலத்தில் ரிஷபத்தின் மீது அமர்ந்தபடி மேதா தட்சிணாமூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.   சுருட்டப் பள்ளி என்ற தலத்தில் தாம்பத்திய  தட்சிணாமூர்த்தியாகக் காட்சி தருகிறார். திருநாவலூரில் ரிஷபத்துடன் நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.  கும்பகோணத்தை அடுத்துள்ள செங்கராங்குடிப் புதூர் தலத்தில் அமைந்துள்ள தட்சிணாமூர்த்தியின் காலடியில் நவக்கிரகங்களும் தஞ்சமடைந்துள்ளதாகக் காணப்படுகிறது.  திருப்பூந்துருத்தியில் தாமரை மலர்மீது அமர்ந்து வீணை வாசிக்கும் நிலையில் வீணா தட்சிணாமூர்த்தியாகக் காட்சி அளிக்கின்றார்.  தக்கோலத்திற்கு அருகில் உள்ள அகரம் கோவிந்தவாடியில் தட்சிணாமூர்த்தி மூலவராகவும் மற்றவர்கள் பரிவார தேவதைகளாகவும் காணப்படுகிறார்கள். இவை மட்டுமின்றி, சாம்ப தட்சிணாமூர்த்தி, சக்தி தட்சிணாமூர்த்தி, கீர்த்தித் தட்சிணாமூர்த்தி, ராஜலிங்காசன தட்சிணாமூர்த்தி போன்று வேறுபல வடிவங்களிலும் சில கோயில்களில் காட்சிதருகிறார்.

தட்சிணாமூர்த்தி காட்டும் சின்முத்திரை

தட்சிணாமூர்த்திப் பெருமான் எப்போதும் சின்முத்திரை காட்டி அமர்ந்திருப்பார். வலதுகையிலுள்ள ஆள்காட்டி விரல் வளைந்து அதன் நுனி கட்டை விரலை அணைத்திருக்க, நடுவிரல், மோதிரவிரல், சுண்டுவிரல் மூன்றும் தனித்து வளையாது நிற்கும் அடையாளச் சின்னம் ஞானமுத்திரை அல்லது சின்முத்திரையாகும். கட்டை விரல் பதி என்னும் இறைவனையும், ஆள்காட்டி விரல் பசு என்னும் ஆன்மாவையும் (உயிர்), மற்ற மூன்று விரல்களும் பாசம் (தளை) என்னும் மும்மலங்களைக் குறிக்கும். நடுவிரல் ஆணவ மலத்தையும், மோதிரவிரல் கன்ம மலத்தையும், சுண்டு விரல் மாயா மலத்தையும் குறிக்கும். ஆன்மாவானது இறைவனைச் சேர்ந்து நிற்கும்போது அதனைக் கட்டுப்படுத்திக்கொண்டிருந்த மும்மலங்களும் ஆன்மாவை விட்டு விலகும் என்ற தத்துவத்தைச் சின்முத்திரை விளக்குகிறது.

தட்சிணாமூர்த்தி வழிபாடு

தட்சிணாமூர்த்திக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், நெய் இவை மூன்றையும் கலந்து விளக்கேற்றி வழிபடவேண்டும். 11 அல்லது 22 விளக்குகள் ஏற்றலாம். இவரை வலம் வரும்போது 3, 9 அல்லது 11 முறைகள் சுற்றிவரவேண்டும். அவருக்குப் பிடித்த முல்லை அல்லது மல்லிகை மாலை அணிவித்து வெற்றிலை, பாக்கு, பழங்களை நிவேதனமாக வைத்து  வழிபட வேண்டும்.


தட்சிணாமூர்த்தி வழிபாட்டுப் பலன்கள்

தட்சிணாமூர்த்தியை வழிபடுவதால் அலைபாயும் மனம் நமது கட்டுப்பாட்டுக்குள் வரும். நமது சிந்தனையை அஞ்ஞானத்திலிருந்து அகற்றி நமக்கு ஞானத்தை அருளுவார்.  அவரை வழிபட்டால் அறம், பொருள், இன்பம், வீடு ஆகிய நான்கு பயன்களும் கிடைக்கும்.  மனச்சஞ்சலத்தில் உள்ளவர்கள் எந்த நாளிலும் தட்சிணாமூர்த்தி முன் அமர்ந்து தியானம் செய்து, குழப்பங்கள் நீங்கப்பெற்று மன அமைதி பெறலாம்.

தென்முகக்கடவுளும் குருபகவானும்

தென்முகக்கடவுள் குருவாக விளங்குபவர் என்பதால் நவகிரகங்களில் ஒருவரான குருபகவானும் தென்முகக்கடவுளும் ஒருவரே என்று பலர் தவறாகக் கருதிக்கொண்டு வழிபாடு செய்கின்றனர்.  சில கோயில்களிலே, குருபகவானுக்கு அணிவிக்க வேண்டிய மஞ்சள் ஆடையையும் கடலை மாலையையும் தென்முகக் கடவுளுக்கு அணிவிக்கிறார்கள்.  குருப்பெயர்ச்சி அன்று குருபகவானுக்குச் செய்யவேண்டிய அபிஷேக ஆராதனைகளைத் தட்சிணாமூர்த்திக்குச் செய்கிறார்கள்.  அப்படிச் செய்வது தவறு என்று ஆன்மீக அறிவுமிக்கப் பெரியோர்கள் கூறுவதை அவர்கள் பொருட்படுத்துவதில்லை. 


தட்சிணாமூர்த்திக்கும் குருபகவானுக்கும் பல வேறுபாடுகள் உள்ளன.   தட்சிணாமூர்த்தியின் வடிவம்  சிவ வடிவம்.  64 சிவ வடிவங்களில் ஒன்றாக விளங்குபவர். அவருக்குத்  தோற்றமும் மறைவும் இல்லை.   வியாழன் எனப்படும் குருபகவான் நவக்கிரகங்களில் ஒருவர்.  அவருடைய வடிவம் கிரக வடிவம். அவருக்குத் தோற்றமும் மறைவும் உண்டு.  தட்சிணாமூர்த்தி பிரம்ம ரிஷிகளுக்குக் குருவாக விளங்கும் சிவபெருமான்.  வியாழன் தேவர்களுக்குக் குருவாக விளங்கும் பிரகஸ்பதி.  தட்சிணாமூர்த்தி தென்திசை நோக்கி இருப்பவர். குருபகவான் வடதிசை நோக்கி இருப்பவர்.  தட்சிணாமூர்த்திக்கு உரிய ஆடை வெண்ணிறம். வியாழனுக்கு உரியது மஞ்சள் நிற ஆடை.  சிலர், “குருபகவானுக்கு அதிதேவதையாக இருப்பவர் தட்சிணாமூர்த்தி.  அவர் குருவுக்குக் குருவாக இருப்பவர். அதனால் குருபகவானுக்குச் செய்யவேண்டிய அபிஷேக ஆராதனைகளை தட்சிணாமூர்த்திக்குச் செய்யலாம்,” என்று கூறுகின்றனர். அதுவும் தவறான வாதமாகும்.  குருபகவானுக்கு நற்பலனைத் தரும் அதிதேவதை இந்திரன் என்றும், அதைவிட அதிகப் பலனைக் குருவுக்குத்தரும்  பிரத்யதி தேவதையான  பரிகார தேவதை பிரம்மா என்றும் பழைய நூல்கள் கூறுவதாகப் பெரியவர்கள் கூறுகின்றனர்.  எனவே குருப்பெயர்ச்சியன்று செய்கின்ற ஆராதனைகள் மற்றும் பரிகாரங்களை நவக்கிரகங்களில் ஒருவரான குருபகவானுக்கே செய்யவேண்டும். குருபகவானுக்கு உகந்தநாள் வியாழக்கிழமையாகும்; தட்சிணாமூர்த்திப் பெருமானுக்கு எல்லா நாள்களும் உகந்த நாள்கள் என நம்பப்படுகிறது.

-------------------------------------------------------------