Pages

Sunday, 1 November 2015

கட்டுரை: தமிழிலக்கிய ஆய்வுகளில் இணையத்தின் பங்கு

தமிழிலக்கிய ஆய்வுகளில் இணையத்தின் பங்கு

--- அன்பு ஜெயா, தமிழ் வளர்ச்சி மன்றம், சிட்னி

(அண்ணமலைப் பல்கலைக் கழகத்தில் ஆசிரியர்களுக்கான பயிலரங்கு - ஜூலை 2015 மலரில் வெளியிடப்பட்ட கட்டுரை)



முகவுரை

தமிழ் வளர்த்த மதுரையில் அப்பொழுது நான் படித்துக்கொண்டிருந்த காலம். கல்லூரி ஆண்டு மலருக்காக தமிழில் ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதவேண்டும் என்று எண்ணினேன். எடுத்துக்கொண்ட தலைப்பு குருதிச் சோகை’. ஏன் அதைப்பற்றி எழுதவேண்டுமென்று முடிவு செய்தேன் என்று இப்போது நினைவிலில்லை. இது நடந்து பல பத்தாண்டுகள் ஓடிவிட்டன. அந்தக் கட்டுரை எழுதுவதற்குத் தேவையான தரவுகளை ஆங்கிலப் புத்தகங்களிலிருந்துதான் எடுத்தாளவேண்டும். சில நாள்கள் எங்கள் மருத்துவக் கல்லூரி நூலகத்தில் தேடினேன். எனக்கு அப்பொழுதிருந்த மருத்துவ அறிவுக்கு ஏற்ப, எளிமையாக விளங்கிக்கொள்ளக் கூடிய அளவில் உள்ள நூல்கள் கிடைக்கவில்லை. இருந்த சில நூல்களிலிருந்து  எனக்குப் புரிந்த அளவில் அவற்றில் உள்ள செய்திகளை மட்டும் குறிப்பு எடுத்துகொண்டேன். அதில் சில நாள்கள் ஓடிவிட்டன. அதுவரை எடுத்த குறிப்புகள் கட்டுரை முழுமையாக எழுதுவதற்குப் போதியதாக இல்லை. கல்லூரிக்கு அருகில் இருந்த காந்தி நினைவாலயத்தில் ஒரு நூலகம் இருப்பது நினைவிற்கு வந்தது. அங்கு சென்று தேடினேன். ஒருவழியாக, பிரித்தானிய கலைக்களஞ்சியம் என் கையில் கிடைத்தது. அதில், நான் தேடிக்கொண்டிருந்த தலைப்பிற்கு உதவும் சில கட்டுரைகள் இருந்தன. கல்லூரி முடிந்ததும், மாலை நேரத்தில் பல நாள்கள் அந்த நூலகத்திற்குச் சென்று குறிப்புகள் எடுத்து ஒருவழியாகக் கட்டுரையை எழுத ஆரம்பித்தேன். அடுத்த சவால், சில மருத்துவச் சொற்களுக்கு ஏற்ற தமிழ்ச் சொற்களை கண்டுபிடிக்க வேண்டிய தேவை. மறுபடியும் சில நாள்கள் அந்த நூலகத்திற்கு நடந்தேன். இவ்வாறு பல முயற்சிகளுக்குப் பின் 4 அல்லது 5 பக்கங்கள் கொண்ட என் கட்டுரையை எழுதி முடித்தேன். இதற்கு ஏறத்தாழ இரண்டு மாதங்கள் செலவழித்திருப்பேன் என்று நினைக்கிறேன். இன்று, அதே கட்டுரைக்குத் தேவையான தரவுகளை எவ்வளவு எளிதாக சில மணி நேரங்களில் சேகரித்து, கட்டுரையை எழுதி முடிக்கலாம் என்று எண்ணிப் பார்க்கும்பொழுது, தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால், காலம் விளைவித்த மாற்றங்கள் வியக்க வைக்கின்றன. இனி, இன்றைய காலகட்டத்தில், கணினியும் இணையமும் இலக்கிய ஆய்வுக்கு எவ்வாறு உறுதுணையாக உள்ளன என்பதைப் பற்றி ஆராய்வோம்.

கணினியிலும் இணையத்திலும் தமிழ்

இணையத்தின் பயன்பாடு தொடங்கியபின், இணையத்திற்குத் தமிழை கொண்டு செல்லவும் பகிர்ந்துகொள்ளவும், தமிழ் எழுத்துருக்கள் பல வல்லுநர்களால் உருவாக்கப்பட்டன. ஒருவர் எழுதிய பந்தியை, அவர் அதை எழுதுவதற்கு பயன்படுத்திய அதே எழுத்துருவை மற்றவர் தன்னுடைய கணினியில் பதித்தால்தான் அந்த பத்தியைத் திறந்து வாசிக்க முடியும் என்ற நிலை மாறி, இன்று ஒருங்குறியீட்டில் எழுதியவற்றை எந்தக் கணினியிலும் மற்றவர்கள் வாசிக்கமுடியும் என்ற நிலை வந்துவிட்டது. தமிழில் எழுதுவதற்கென்று சொற்செயலிகள் (Word processors), பிழை திருத்திகள் என்று பல மென்பொருட்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இன்று ஆய்வுக் கட்டுரைகளை எழுதவும், மறு ஆய்வு செய்து அவற்றை திருத்துதலும், மாற்றி அமைத்தலும் எளிய செயல்களாக ஆகிவிட்டன.

மின்நூல்களும் மின்நூலகங்களும்

இலக்கிய ஆய்வுகளுக்குத் தேவையான தரவுகளைப் பல நூல்களையும் வாசித்துச் சேகரிக்கவேண்டியது இன்றியமையாததாகும். அதற்காகப் பல நூலகங்களுக்குச் சென்று தேடவேண்டிய நிலைமை இன்று இல்லை. ஓர் இடத்தில் இருந்துகொண்டே, கணினியின் துணைகொண்டு, இணையத்தை அலசி ஆராய்ந்து தேடும் வசதி உள்ளது. அதற்கான தேடுபொறிகள் (Search engines)  நிறைய உள்ளன. தமிழிலேயே தட்டச்சு செய்து தேடுகின்ற வசதியும் இப்போது உள்ளது. பண்டைய இலக்கியங்களான சங்க இலக்கியங்கள், காப்பியங்கள், சமய இலக்கியங்கள், சிற்றிலக்கியங்கள் போன்ற நூல்களும் அவற்றுக்கான உரைகளும், தற்கால இலக்கிய நூல்கள் பலவும் மின்நூல்களாகக் கிடைக்கின்றன. சில நூல்கள் உருப்பட வடிவிலும் (Scanned copy), சில தட்டச்சு வடிவிலும் கிடைக்கின்றன.
இப்படிப்பட்ட மின்நூல்கள் அடங்கிய மின்நூலகங்கள் எண்ணற அளவில் இணையத்தில் உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு சற்று விரிவாக நோக்கலாம்.

தமிழ் இணையக் கல்விக்கழகம் (1)

இந்த இணையத் தளம் தமிழக அரசின் உதவியுடன் செயல்படும் தளமாகும். இவ்விணையத்தளத்தில் இலக்கணம், சங்க இலக்கியம், காப்பியங்கள், சமய இலக்கியங்கள், இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்கள் போன்ற நூற்றுக்கணக்கான நூல்களும், அவற்றில் பலவற்றுக்கான உரை நூல்களுடனும் உள்ளன. அவை மட்டுமின்றி பல அகராதிகளும், நிகண்டுகளும், கலைக்களஞ்சியமும்; நாட்டுடைமையாக்கப்பட்ட தமிழறிஞர்களின் நூல்கள் பலவும் இடம் பெற்றுள்ளன.

Digital Library of India (2)

இந்த இணையத் தளம் மத்திய அரசின் உதவியுடன் செயல்படுகிறது. இந்த மின் நூலகத்தில் ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் இணைக்கப்பட்டுள்ளன. நூல்களின் பெயரோ. ஆசிரியரின் பெயரோ தெரிந்திருந்தால்தான் இந்தத் தளத்தில் தேடுவது சற்று எளிமையாக இருக்கும். தமிழ் நூல்களைத் தமிழில் தட்டச்சு செய்து தேடும் வசதி இந்த இணையதளத்தில் இல்லை.

Internet Archive (3)

இந்த இணையத் தளம் பல மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான நூல்களின் ஆவணக்காப்பகமாக விளங்குகிறது. தமிழ் நூல்களின் பெயர்களைத் தமிழில் தட்டச்சு செய்து தேடும் வசதியும் உள்ளது. இங்கு கிடைக்கின்ற பெரும்பாலான நூல்களைத் தரவிறக்கம் செய்துகொள்ள முடியும்.

மதுரை தமிழ் இலக்கிய மின்தொகுப்புத் திட்டம் (4)

இந்த இணைய தளத்தில் 500-க்கும் மேற்பட்ட தமிழ் இலக்கிய நூல்கள் தட்டச்சு வடிவிலும், pdf-கோப்புகளாகவும் இணைக்கப்பட்டுள்ளன. தட்டச்சு வடிவிலுள்ள கோப்புகளில் சொற்களைத் தேடும் வசதி உள்ளது. இத்தளத்தில் மேலும் மேலும் பல நூல்களை இணைக்கும் பணி தொடர்ந்துகொண்டு இருக்கிறது.

நூலகம் (5)

இந்த இணைய தளத்தில் ஏறத்தாழ 5000 நூல்களும், 6000 இதழ்களும், 2000 பத்திரிகைகளும் இணைக்கப்பட்டுள்ளன. அனைத்து நூல்களும், தேடுவதற்கு எளிதாக அகர வரிசையில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ் மரபு அறக்கட்டளை (6)  

இந்த இணைய தளத்தில் 400-க்கும் மேற்பட்ட பண்டைய தமிழ் நூல்கள், தலபுராணங்கள் pdf–கோப்புகளாக தரவிறக்கம் செய்துகொள்ளும்படி இணைக்கப்பட்டுள்ளன.
மேலே குறிப்பிட்டவைமட்டுமின்றி, ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகம்(7) போன்ற பல மின்நூலகங்கள் இணையத்தில் காணக்கிடைக்கின்றன.

சமய இலக்கியங்கள்

சமய இலக்கியங்கள் பற்றிக் குறிப்பிடும் பன்னிரு திருமுறை (8), சைவத் தமிழ் இலக்கியம்(9), திராவிட வேதா-நாலாயிர திவ்ய பிரபந்தம்(10), பௌத்தமும் தமிழும் (11) போன்ற, ஆய்வுக்கு உதவக் கூடிய பல தளங்களும், வலைப்பூக்களும் இணையத்தில் அதிக அளவில் காணப்படுகின்றன. 

தமிழ் விக்கிப்பீடியா

விக்கிப்பீடியா என்பது விக்கிமீடியா என்ற நிறுவனத்தின் உதவியுடன் நடத்தப்படும் இணையக் கலைக்களஞ்சியம். இதிலுள்ள கட்டுரைகள் பல தன்னார்வலர்களின் கூட்டு முயற்சியால் தொகுக்கப்படுகின்றன. இந்தக் கட்டுரைகளின் தரமும், துல்லியத் தன்மையையும் உறுதி செய்ய இயலாதனவாக உள்ளன என்பது ஒரு பெரிய குறையாகும். இப்படிப்பட்ட குறைகள் இருந்தாலும், ஒரு குறிப்பிட்ட பொருளைப் பற்றிய முக்கியமான செய்திகளை இந்தக் கட்டுரைகளிலிருந்து முதல் படியாகப் பெற்றுக்கொண்டால், மேற்கொண்டு ஆய்வுகள் செய்ய அவை உதவும்.

இணையவழி இலக்கியத் தொடரடைவுகள்

தமிழ் இணையக் கல்விக்கழகம்

இந்த இணையத் தளத்தில் தமிழிலக்கிய ஆய்வுக்குப் பெரிதும் பயன்படக்கூடிய “தமிழ் இலக்கியங்களுக்கான இலக்கணக் குறிப்பு விரிதரவு” (12) என்ற ஒரு பகுதியும் அடங்கியுள்ளது. இந்தப் பகுதியில் தமிழ் இலக்கியங்களுக்கான விரிதரவை, சொல்லைத் தேடி பெருதல், சொல்லுக்கு இலக்கணக் குறிப்பு பெறுதல், இலக்கணக்குறிப்பிற்கு சொல்லைப் பெறுதல், சொல் சூழமைவு (Keyword in context) போன்ற வகைகளில் தேடுதல் வசதி அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் தேடுதல் வசதியில் தற்போது ஏறத்தாழ 60 நூல்கள் இணைக்கப்பட்டுள்ளன. சுருக்கமாகக் கூறுவதானால், ஒரு குறிப்பிட்ட சொல் இந்த 60 நூல்களில் எந்தெந்த நூல்களில், எந்தெந்தப் பாடல்களில், எந்தெந்த வரிகளில் வருகின்றது என்பதை எளிதாகத் தேடிக் கண்டுபிடிக்கலாம். இந்தப் பகுதியில், தொடரியல் (syntax) மற்றும் பொருண்மையியல் (semantics) விளக்கத்துடன் கூடிய விரிதரவும் (13) தேடுபொறி வசதியுடன் அமைந்துள்ளது.

உ. வே. சா. செம்மொழித் தமிழ்த் தரவகம் (14)

இந்த இணையத் தளம் சென்னை, செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் மொழித் தொழில்நுட்பத் துறையால் பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது இருபது செவ்வியல் தமிழ் நூல்களின் (தொல்காப்பியம், பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, இறையனார் களவியல்) மூலபாடங்கள், சந்தி பிரித்த பாடங்கள், சொற்கள் பிரித்த பாடங்கள் ஆகிய மூன்று நிலைகளில் தரவுகள் உருவாக்கப்பட்டுள்ளன.  இத்தரவகத்தைப் பயன்படுத்தி ஒரு நூலில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற்களின் வரிசைப்படுத்தப் பட்டியலான தொடரடைவுணையவழியாகச் செவ்வியல் தமிழ்த் தொடரடைவாக (online Concordance for Classical Tamil) உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரடைவைப் பயன்படுத்தி கிடைக்கும் தரவுகளைக் கொண்டு பின் வரும் ஆய்வுகளையும்,
·         ஒரு சொல் செவ்வியல் தமிழ் நூல்களில் எத்தனைமுறை வருகின்றது என்பதை அறியலாம்
·         வரலாற்று முறை இலக்கணம், வரலாற்று முறை அகராதி உருவாக்கலாம்
·         வேர்ச் சொல்லாய்வுகள், அகராதிகள், சொற்களஞ்சியங்கள், கலைக்களஞ்சியங்கள் தயாரிக்கலாம்
·         சொல் திருத்தி, இலக்கணத் திருத்தி போன்றவை உருவாக்கலாம்.
மேலும் பல ஆய்வுகளையும் மேற்கொள்வதற்கு இத்தொடரடைவு பயன்படும். இது பற்றிய முழு விவரங்களையும் இந்த இணையத் தளத்தில் காணலாம்.

தமிழ் இலக்கியத் தொடரடைவுகள் (15)

இணையவழி அடையக்கூடிய இந்தத் தொடரடைவுகள் முனைவர் ப. பாண்டியராஜா அவர்களால் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த இணையத் தளத்தில் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, முத்தொள்ளாயிரம், இறையனார் அகப்பொருள், ஐம்பெருங்காப்பியங்கள்,  கம்பராமாயனம், நளவெண்பா, பெரியபுராணம் ஆகிய நூல்களுக்கான தொடரடைவுகள் இடம்பெருகின்றன.

முடிவுரை:


இந்தக் கட்டுரையில் விவரிக்கப்பட்டுள்ள தளங்கள் இணையக் கடலில் கிடைக்கின்ற புதையலில் ஒரு சிறு துளிதான் என்றால் அது மிகையாகாது. இவைபோன்று தமிழிலக்கிய ஆய்வுக்குப் பயன்படக்கூடிய தளங்கள் அனைத்தையும் பட்டியல் இடுவதென்பது இயலாத காரியமாகும். இந்த சிறு துளியிலிருந்தே தமிழிலக்கிய ஆய்வுக்கு கணினி மற்றும் இணையத்தின் பங்கு அளப்பரியது என்பது மறுக்க இயலாத உண்மையாகும்.

உசாத்துணை

1.      http://www.tamilvu.org/library/libindex.htm 

2.      http://www.dli.ernet.in/ 

3.      https://archive.org/index.php 

4.      http://www.projectmadurai.org/pmworks.html 

5.      http://www.noolaham.org/ 

6.      http://www.tamilheritage.org/old/text/ebook/ebook.html 

7.      http://www.rmrl.in 

8.      http://www.thevaaram.org/ 

9.      http://www.shaivam.org/siddhanta/sta.htm 

10. http://dravidaveda.org/ 

11. https://sites.google.com/site/budhhasangham/ 

12. http://stream1.tamilvu.in/annocorp/ 

13. http://stream1.tamilvu.in/synsemcorp/ 

14. http://218.248.27.198:90/CICT_Concordance/Default.aspx 

15. http://sangamconcordance.in/

-----------------------------------------------

Thursday, 18 June 2015

சங்க இலக்கியத் தூறல்_9: தந்தையின் அன்பும் இயற்கையன்றோ!



தந்தையின் அன்பும் இயற்கையன்றோ!

--- அன்பு ஜெயா, சிட்னி

தலைவன் ஒருவன் விலைமகள் ஒருத்தியுடன் காலங்கழித்துவிட்டு தன் வீட்டிற்குத் திரும்புகிறான். தலைவியான தன் மனைவியை எப்படி சமாளிப்பதென்று தயங்கி அவளுடைய தோழியின் உதவியை நாடுகிறான். தோழியும் தலைவியிடம் சென்று, “உன் கணவன் திரும்பிவந்து உன்னுடன் சேர்ந்து வாழ்வதற்காக வாயிலிலே வந்து நிற்கின்றான். நீ அவனை ஏற்றுக்கொள்வாயா?”, என்று கேட்கிறாள். அதற்குத் தலைவி பதில் கூறுகிறாள்.



தோழி, “குழந்தைச் செல்வம் பெற்றவர்கள் மட்டுமே அந்தப் பிறவியில் புகழும், மறுபிறவியில் மோட்சமும் அடைவார்கள்”, என்று பெரியவர்கள் கூறியுள்ளார்கள். அது எவ்வளவு உண்மை என்பதைக் கண்கூடாகக் கண்டு உணர்த்திருக்கிறேன். அது எப்படி என்பதைக் கூறுகிறேன் என்று சொல்லி முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்றைத் தலைவி தன் தோழிக்கு கூறுகின்றாள்.

முன்பு ஒரு நாள் என் தலைவன், விலைமாது ஒருவளை மணம் புரிவதற்காக ஏற்பாடுகள் செய்துவிட்டு, மலர்மாலை அணிந்த மார்புடன் அலங்காரம் செய்துகொண்டு, தன்னுடைய தேரில் ஏறிப் புறப்பட்டான். அந்தத் தேரில் பூட்டப்பட்ட குதிரையின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த மணியானது ஒலிக்கத் தொடங்கியது. அந்த மணியோசைக் கேட்ட எங்கள் மகன் அதைப் பார்ப்பதற்காகத் தன் பிஞ்சுக் கால்களால் தடுமாறித் தடுமாறி நடந்து வீட்டு வாசலுக்குச் சென்றுவிட்டான்.

அவனைக் கண்டுவிட்ட என் தலைவன் பாகனிடம் தேரை நிறுத்தச் சொல்லி தேரிலிருந்து இறங்கினான். இறங்கியதும் புதல்வனைக் கையிலெடுத்து நெஞ்சாரத் தழுவிக்கொண்டு இனி நீ உள்ளே செல் என் செல்வமே” என்று கூறினான். ஆனால், எங்கள் புதல்வனோ அதை ஏற்றுக்கொள்ளமால் அழத்தொடங்கினான். அப்போது புதல்வனை நீ குபேரனல்லவா என்று பாராட்டியபடியே வீட்டிற்குள் அழைத்து வந்தான்.

தலைவனைத் தடுப்பதற்காக நான்தான் புதல்வனை அப்படி வெளியே அனுப்பினேன் என்று என் தலைவன் நினைப்பானோ என்று நான் கலங்கினேன். அதனால், மகனை அடிப்பதற்கென்று ஒரு கோலை எடுத்துக்கொண்டு என் புதல்வனை நெருங்கினேன். அப்போது மகனை நான் அடிக்கவிடாமல் என் தலைவன் அவனைத் தழுவி அணைத்துக்கொண்டான். 

அந்த நேரத்தில், தலைவனும் அந்த விலைமகளும் திருமணம் செய்துகொள்ள இருந்த வீட்டிலிருந்து  என் தலைவனை அழைப்பதைப் போன்று  முழவினுடைய ஓசை ஒலித்தது. அப்படி இருந்தும் என் தலைவன் மகனை விட்டுவிட்டுப் போகவில்லை.  நாங்கள் காதலித்த காலத்தின் நினைவுகெளல்லாம் அப்போது என் தலைவனின் மனத்திரையில் ஓடி அவனுடைய மனச்சாட்சியை வருத்தியதால் அந்த விலைமகள் வீட்டிற்குச் செல்லாது தவிர்த்துவிட்டான்.  அப்படிப்பட்ட மனமுள்ள என் தலைவனை ஏற்றுக்கொள்வதைத் தவிர வேறு வழியேது தோழி, என்று தலைவி தன் தோழியிடம் கூறினாள்.



தந்தைக்கும் தன் பிள்ளயின் மீது அன்பிருப்பது இயற்கைதானென்று அறிவுறுத்தும் இந்த அற்புதமானக் காட்சியைப் பின்வரும் அகநானூற்றுப் பாடலில் செல்லூர்க் கோசிகன் கண்ணனார் அழகாகச் சித்தரிக்கின்றார்.

''இம்மை உலகத்து இசையொடும் விளங்கி,
மறுமை உலகமும் மறுஇன்று எய்துப,
செறுநரும் விழையும் செயிர்தீர் காட்சிச்
சிறுவர்ப் பயந்த செம்மலோர்'' எனப்        5
பல்லோர் கூறிய பழமொழி எல்லாம்
வாயே ஆகுதல் வாய்த்தனம் தோழி?
நிரைதார் மார்பன் நெருநல் ஒருத்தியொடு
வதுவை அயர்தல் வேண்டி, புதுவதின்
இயன்ற அணியன், இத்தெரு இறப்போன்    10
மாண்தொழில் மாமணி கறங்க, கடைகழிந்து,
காண்டல் விருப்பொடு தளர்புதளர்பு ஓடும்
பூங்கண் புதல்வனை நோக்கி, 'நெடுந்தேர்
தாங்குமதி, வலவ,” என்று இழிந்தனன், தாங்காது,
மணிபுரை செவ்வாய் மார்பகம் சிவணப்       15
புல்லி, ''பெரும செல்இனி, அகத்து'' எனக்
கொடுப்போற்கு ஒல்லான் கலுழ்தலின், ''தடுத்த
மாநிதிக் கிழவனும் போன்ம்'' என, மகனொடு
தானே புகுதந் தோனே; யான்அது
படுத்தனென் ஆகுதல் நாணி, இடித்து, ''இவன்      20
கலக்கினன் போலும், இக் கொடியோன்'' எனச் சென்று
அலைக்கும் கோலொடு குறுக, தலைக்கொண்டு
இமிழ்கண் முழவின் இன்சீர் அவர்மனைப்
பயிர்வன போல்வந்து இசைப்பவும், தவிரான்,
கழங்கு ஆடு ஆயத்து அன்று நம் அருளிய      25
பழங்கண் ணோட்டமும் நலிய,
அழுங்கினன் அல்லனோ, அயர்ந்ததன் மணனே

--- செல்லூர்க் கோசிகன் கண்ண்ணார் (அகநானூறு, 66)

------------------------------------------------------