Pages

Saturday, 8 February 2025

அன்பு ஜெயாவின் மரபுப் பாக்கள் - தொகுதி 31

 மரபுப் பாக்கள் -  தொகுதி 31 


91) முளைத்துவிடு விதையாய்.

பா வகை: வஞ்சித் துறை (குறளடி கொண்ட நான்கடிப் பாடல்)

பா வகைக்கான வாய்பாடு: காய்சீர் + கனிச்சீர் பயின்று வருவது. நான்கடிக்கோர் எதுகை பெற்று வரும்.

 

வாழ்வதுமோ வளர்வதுவுமோ

தாழ்வதுமோ தளர்வதுவுமோ,

ஆழ்ந்துநோக்கின் அதுவுன்கையில்,

ஆழ்ந்துறங்கும் விதைபோலவே!

 

இனிவருமக் காலங்களும்

இனிதாக மலர்ந்திடவுமே

பனித்துளியைத் தாங்கிவாழ்ந்திடும்

நுனிப்புல்போல் காத்திருந்திடு!

 

மழைத்துளிகள் முகம்காட்டிடும்

பிழைத்தெழுவாய் புதுமூச்சுடன்

தழைத்தோங்கும் உன்வாழ்வுமே,

உழைப்பாலே நீஉயர்ந்திடு!

 

உயர்வாமிப் புவிதன்னிலே

அயர்ச்சியின்றி உழைப்போரினால்

உயர்ந்திடும்தான் உலகவாழ்வுமே

உயர்ந்திடுவோம் நாமென்றுமே!

------------------------------------------------ 


92) மூப்பைக் கண்டஞ்சேல்.

பா வகை: வஞ்சித் துறை (குறளடி கொண்ட நான்கடிப் பாடல்)

 

முதுமைகண்டே அஞ்சிடாதிரு

முதுமையொன்றே முடிவாகுமே

புதுமையிதில் ஒன்றுமில்லையே!

புதுத்திறமை வளர்த்துவாழ்ந்திடு!

 

புதுமைக்கோ வறுமையில்லையே

இதுபுதுமை இன்றுமட்டுமே

அதுவுமிங்கே பழமையாகுமே

இதுபுரிந்தால் இன்னலில்லையே!

 

கடந்தகாலம் திரும்பாதினி

இடமளிப்பாய் நண்பருடனே

நடனமுடன் நடைபயின்றிட,

உடல்நலமும் உயர்வுபெறுமே!

 

புத்துணர்வு பெற்றுலகிலே

முத்தான புதுக்கலைகளில்

பத்தும்தான் கற்றுநீயுமே

வித்திடுவாய் வலிமையோங்கவே!

 --------------------------------------------------


93)  மென்சொல் மேன்மை.

பா வகை: வஞ்சித் துறை (குறளடி கொண்ட நான்கடிப் பாடல்)

 

வன்சொற்கள் வெல்லலாம்சில

தன்மையற்ற செயல்கள்தனில்,

மென்சொற்கள் எக்காலமும்

வென்றிங்கே முதன்மைபெறுமே!

 

உண்மையிதை உணர்ந்தாலுமே

எண்ணமதில் எளிமைவித்திடும்

மண்மீதில் மாண்புயர்ந்திடும்

உண்மையில்நம் வாழ்வுமுயரும்!

 

மென்சொற்கள் மேன்மைதந்திடும்

என்றுமுன்னை ஏற்றிவைத்திடும்

மென்சொல்லின் தன்மையிதனை

உன்மனத்தில் ஏற்றிவைத்திடு!

 

வன்சொற்கள் தவிர்த்துநீயுமே

மென்சொற்கள் உதிர்த்துவாழ்ந்திடு

உன்வாழ்வும் உயர்வுபெற்றிடும்

உன்னுறவும் விரிவடையுமே!

--------------------------------------